Thursday, September 4, 2014

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

  இயல்பில் நான் ஒரு அரசுப்பள்ளி  மாணவன். நானும் என்னுடைய சகதோழர்களும் பத்தாம் வகுப்பு வரை எங்கள் ஊர் அரசு உயர்நிலைப்பள்ளியிலேயே படித்தோம். பத்தாம் வகுப்பை முடித்தவுடன் பக்கத்து ஊர்ப் பள்ளிக் கூடத்துக்கு நாங்கள் அனைவருமே இடம்பெயர வேண்டியிருந்தது.

  வேறு பள்ளிக் கூடத்திற்குச் சென்று ஒவ்வொருவரும்,பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அவரவர்  எடுத்த மதிப்பெண்களுக்கேற்ப, வேறுவேறு பிரிவுகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். காலாண்டுத்தேர்வு வரை எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம்.

  காலாண்டுத் தேர்வு அறிவித்துவிட்டார்கள். பரீட்சைக்குத் தயாராகவேண்டும். அந்த நேரத்தில் திடீரென எங்கள் ஊர் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக்கி தமிழ்நாடு கல்வித்துறை உத்தரவிட்டது. எங்கள் ஊர் பெரியவர்கள், வேறுவேறு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்தவர்களையெல்லாம், எங்கள் ஊர் பள்ளிக்கு, நாங்கள் படித்துக் கொண்டிருக்கிற பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, எங்களை  அழைத்து வரப்போகிறார்கள் என்ற செய்தி  எங்கள் காதுகளுக்கு எட்டியது. காலாண்டுத் தேர்வின் கடைசி கட்டத்தில், நம்ம தான், நம்ம ஊர்ப்பள்ளிக் கூடத்துக்குப் போகப் போறேமே! நம்ம எதுக்கு இந்தப் பள்ளிக் கூடத்துல பரிட்சை எழுதனும்னு கட் அடிச்சுட்டு படம் பார்க்க சகநண்பர்கள் போயிட்டாங்க. ஆனா நான் போகலை. உடனே நீ என்ன அவ்ளோ நல்ல பையனான்னு கேட்டுறாதிங்க, அவங்கெல்லாம் கட் அடிச்சிட்டு படத்துக்குப் போனாங்க, நான் பரிட்சைப் பேப்பரை கவுத்திப் போட்டு டெஸ்க்லயே கைய தலைக்கு வச்சு தூங்கிட்டேன். எப்பூடி!!

   அப்புறம் எப்படியோ ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை மறுபடியும் எங்க ஊர் பள்ளிக் கூடத்துல, சேத்துட்டாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

  பத்தாம் வகுப்பில் பாஸ் ஆகுறதுக்கே தலைகீழா நின்னு படிச்சவனுக்கும், பத்தாப்புல பர்ஸ்ட் மார்க் வாங்கினவனுக்கும், பதினோறாம் வகுப்பில் முதல் பிரிவை(உயிரியல்- கணிதம்)க் கொடுத்து, ஒரே கிளாஸ்ல உட்கார வச்சிட்டாங்க. பசங்களுக்குள்ள, டேய் நமக்கு அந்தப் பள்ளிக் கூடத்துல வொகேசனல் குரூப்பே தரமாட்டேனு சொன்னாங்க, ஆனா நம்ம ஊர்ப்பள்ளிக் கூடத்துல பர்ஸ்ட் குரூப் கொடுத்துருக்காங்களேன்னு, ஆனந்தக் கண்ணீர் ஒரு பக்கமும், நாமெல்லாம் எப்படிடா இந்த குரூப்ல பாஸாகப் போறோம்னு சிலர் ரத்தக் கண்ணீரும் வடிச்சிட்டிருந்தாங்க.

  பதினோறாம் வகுப்பில் ஆசிரியர்கள், சரிவர இல்லாமல், உயர்நிலை ஆசிரியர்களை வைத்து கண்காணிக்கப்பட்டு, கண்டபடி முழுப்பரிச்சை எழுதி கப் னு எல்லாரும் பாஸாகி பதினோறாம் வகுப்பு பெஞ்சைத் தேய்ச்சி முடிச்சு, பனிரெண்டாம் வகுப்புக்குப் போய்விட்டோம்.

     பனிரெண்டாம் வகுப்புத் தொடங்கியது.  இயற்பியல் தொடங்கி ஒவ்வொரு பிரிவிற்கும் ஆசிரியர்கள் வரத்தொடங்கினர். பாடங்களை எடுக்கத் தொடங்கினர். பலருக்குப் புரியவில்லை, எனக்கும் தான். பின் எங்களுக்குப் புரிகின்றவாறு பாடங்களை நடத்தி, எங்களை படிக்க வைக்க படாத பாடு பட்டனர். உயிரியல் ஆசிரியை, அடுத்த பள்ளியில் வேலை பார்க்கும் தன் கணவரை அழைத்து வந்து புரியும்படி பாடம் நடத்தச் செய்தார்.. கணித ஆசிரியை, அதற்கும் ஒருபடி மேல் போய், எங்களோடு அன்பாய்ப் பழகி, எங்கள் ஊரிலே வீடு எடுத்துத் தங்கி, எங்களுக்கு டியூசன் நடத்தி கணிதப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். இயற்பியல் டீச்சர் அன்போடு பேசிப் பழகி பாடம் நடத்தத் தொடங்கினார். ஆனா, இந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் இருக்காரே, என்னா அடி, அடிச்சே படிக்க வச்சாரு. இறுதித் தேர்வின் முடிவில் 1138 முதல் மதிப்பெண் பெற்று, பரீட்சை எழுதிய இருபத்தொன்பது(22+7) பேரில், 25 பேர் தேர்ச்சியும் பெற்றிருந்தோம்.

  நன்றாக படிக்கின்ற மாணவனை, அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதென்பது வேறு. சுத்தமா படிப்பே வராத மாணவனை ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைப்பதென்பது வேறு.

  எங்களுடைய ஆசிரியர்கள், சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், காற்று போன சைக்கிள் டியூப்பிற்கு காற்றடைத்தவர்கள் அல்ல. பத்து பஞ்சர் விழுந்து, ஒரு ஓரத்தில் கிழிந்த சைக்கிள் டியூபை பஞ்சர்கள் அனைத்தையும் ஒட்டி, கிழிந்த இடத்தில் சிறு வல்கனைசிங் செய்து, காற்றடைத்து சைக்கிள் டியூபை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் சைக்கிளையும் சரி செய்தவர்கள்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் தங்கமலை, ஆசிரியைகள் கிறிஸ்டிஜெபசித்ரா, முருகேஷ்வரி, சுரேகா, ஆங்கில ஆசிரியை சாந்தா போன்ற எங்களுக்குப் பாடமெடுத்து, பக்குவப்படுத்திய ஆசிரியர்கள் போல் , அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி செய்து, அரசுப்பள்ளிகளின் தரங்களை உயர்த்த வேண்டுமெனக்கோரி, அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், எங்கள் ஊர்ப்பள்ளியின் முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகள்(22+7) சார்பாக

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

2 comments:

  1. வாழ்த்துக்கள் சீதாராமன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சீதாராமன்.

    ReplyDelete