Tuesday, June 2, 2015

தொண்டர்களின் ஒப்புயர்விலா தலைவர் அவர்

என்னுடைய வயது என்ன என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்காக வேண்டுமானால் இன்னொரு முறை இங்கே நினைவுப்படுத்துகிறேன். அதாவது இன்னும் ஒரு நான்கு மாதங்களில் இருபத்தைந்தைத் தொடுகிறேன். இந்தச் சின்ன வயது தான் எனக்கு. நான் ஒன்றும் பெரிய வயதினன் இல்லை.

   என்னைச் சுற்றி பண பலமோ அரசியல் பலமோ ஆள் பலமோ என எதுவுமே இதுவரை இருந்ததில்லை. ஒரு சின்ன உர அங்காடியில் இந்த ராசபாளையம் நகரத்தின் ஒரு மூலையில் பகல் நேரங்களில் மூடை தூக்கியதில் கரை தோய்ந்த  ஒரு பழைய சட்டையுடனும் பல நேரங்களில் காலில் செறுப்பு கூட போடாமல் சைக்கிளில் நகரத்து வீதிகளில் அவ்வப்போது சுற்றிக் கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கும் எனக்கு அப்படியென்ன ஆள் பலம் இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    முகநூலில் தி.மு.க விற்காக பதிவுகள் போடுவதும், அவ்வப்போது வாய்ப்புள்ள  (வேலையில் விடுப்பு கிடைக்கின்ற) நேரங்களில் கழகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அதற்காக என்னாலான பணியினைச் செய்வதும், எங்கள் சொக்கநாதன்புத்தூர் கிளைக் கழகத்தில் ஒரு துடிப்புமிக்க தி.மு.க கார இளைஞனாக வலம் வருவதும் தான் கழகத்திற்காக நான் செய்த பணிகள் என்றாலுங் கூட, என்னுடைய தாயும் தந்தையும் தி.மு.க விற்காக பல காலங்கள் உழைத்திருக்கிறார்கள், உழைக்கிறார்கள், உழைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய வளர்ப்பு தான் என்னை தி.மு.கழகத்தின் துடிப்புமிக்க இளைஞனாக வலம்வரச் செய்திருக்கிறது.

   இதுதான் நா(ங்கள்)ன் கழகத்திற்காக செய்த அளப்பரிய பணிகள் என்றால் அது மிகையாகாது. இதன் விளைவாக என்னுடைய தாயார் மட்டும் இராசை, ஒன்றிய கழகத்தின் சில பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தான் எங்கள் குடும்பத்தினை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரே தகுதி.

  இதையெல்லாம் தேவையில்லாத நேரத்தில் ஏன் இப்படிக் கதை விட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் நினைப்பதற்குள் நான் விசயத்திற்கு வருகிறேன்.

   இப்படிப் பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நான்,   கடந்த செப் 13 அன்று என்னுடைய இருபத்தி நான்காம் பிறந்த நாளில் எப்படியேனும் தலைவர் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்து வீட்டில் பெரிதாக பிரேம் போட்டு மாட்டவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு சென்னைக்குச் சென்றேன். போறது தான் போறோம்,,
அப்படியே இணையதள நண்பர்கள் சார்பாக கலைஞரின் பிறந்த நாளையொட்டி  நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரையையும் தலைவர் கலைஞரிடம் சமர்ப்பித்து விடுவோம் என்று அதையும் எடுத்துச் சென்றிருந்தேன். கட்டுரைப் போட்டியினை நடத்தியவர்களோ பரிசு வழங்கியவர்களோ கூட தி.மு.க. வின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களோ, பிரபலமானவர்களோ கிடையாது அவர்களும் என்னைப் போன்ற எளிய தொண்டர்கள் தான்.

       ஆக, கலைஞரைச் சந்திக்க கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று விட்டேன். உடன் நம் கழக நண்பர்கள் தாம்பரம் சதீஸ், சிவகிரி தனுஷ்குமரன், சிவகாசியில் இருந்து ஒரு நண்பரென மொத்தம் நான்கு பேர் சென்றிருந்தோம். நாங்கள் சென்றவுடன் யார் நீங்க? யாரப் பாக்கனும் என வினவிக் கொண்டு கோபாலபுரத்துக் காவலாளி ஓடி வந்தார். நான் உடனே, பேஸ்புக்கில் தி.மு.க சார்பாக எழுதுகிறேன். இன்று எனக்குப் பிறந்த நாள் ஆதலால் தலைவரிடம் வாழ்த்துப் பெற வேண்டும் என்றேன்.

   உடனே, என்னுடைய பெயரைக் குறித்துக் கொண்டு, தலைவர் அனுமதி கொடுத்தால், யாராவது இரண்டு பேர் மட்டும் தான் உள்ளே வரவேண்டும் என்றார். எனக்குத் தலைவர் அழைப்பாரா,, அழைக்கமாட்டாரா,, என்கின்ற சந்தேகம் வேறு உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனெனில் எங்களுக்கு முன்னே ஒரு ஐம்பது பேர் வரைக்கும் அங்கே தலைவர் கலைஞரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். அவர்கள் எல்லாம் ஏதோ முக்கிய நிர்வாகிகள் போல அவர்களுடைய தோரணையிலே தெரியவந்தது. ஆதலால் அவர்களை மட்டும் தான் சந்திப்பாரோ, நம்மைச் சந்திக்கமாட்டாரோ என்று உடன் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், தலைவர் வருகைக்கான செய்கைகள் தெரிந்தது. காவலாளிகள் அங்குமிங்கும் ஓடினர். பரபரப்பு தொற்றியது  கலைஞர் வந்து விட்டார்.
 
   எங்களுக்கு முன்னே குழுமியிருந்தவர்களில் இருவரை மட்டும் உள்ளே அழைத்திருப்பார் போல, அவர்கள் உள்ளே சென்றனர்.

    அடுத்து, உள்ளே இருந்து ஒரு குரல் "சீத்தாராமன்" என்றதும் ஓடினேன். என் உயிரான தலைவர் கலைஞரைப் பார்க்க ஓடினேன். எனக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்குமாயென்று பல நாட்கள் ஏங்கித் தவித்ததுண்டு. அதனால் தானோ என்னவோ இந்த வரிகளை எழுதுகையில் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்குகிறது.

   தலைவர் கலைஞரின் அருகே நிற்க வைக்கப்பட்டேன். என்னை ஏறிட்டுப் பார்த்தார். பக்கத்தில் சென்றேன். "அய்யா எனக்குப் பிறந்த நாள்" என்றேன்.

  "வாப்பா, பிறந்த நாளா" என்றார் தலைவர் கலைஞர்.

    ஆமாம், என்று சொல்லி காலைத் தொட்டு வணங்கி, கையிலே வைத்திருந்த பழத் தட்டை பக்கத்திலே நின்ற உதவியாளர் வாங்க, கையிலே வைத்திருந்த கட்டுரையை "அய்யா, இது நான் உங்களைப் பற்றி எழுதி முதல் பரிசு பெற்ற கட்டுரை" என்றேன்.

   தன் கையிலே வாங்கிய கலைஞர், அதன் அத்தனை பக்கங்களையும் புரட்டிப் பார்த்து விட்டு, என்னை அண்ணாந்து பார்த்து தன் உதட்டை மடித்து பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டு, "உச்" என்று ஒரு சத்தமிட்டார் பாருங்கள், அப்போதே என் உயிர் பிரிந்து விட்டது. இப்போதெல்லாம் நான் வெறும் பிணம் தான், அந்தத் தருணம் எனக்கு அப்படியொரு அளப்பரிய மகிழ்ச்சியைத் தந்தது.

   கலைஞர் என்பவர் சாதாரண மனிதரல்ல. தமிழக அரசியல் வரலாற்றினுடைய முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. அன்றைய தினம் அவர் இந்த எளிய தொண்டனைச் சந்திக்க மறுத்திருந்தால் கூட, நான் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். சிங்கத்தை அதன் குகைக்குள் போய் பார்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு திரும்பியிருப்பேன். அதைக் கூட விட்டு விடலாம். நான் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு என்றதும், அதை விரித்துப் படித்துப் பார்த்தார் பார்த்தீர்களா! அது தான் அந்த நொடியில் நான் வியந்து நின்ற ஒன்று. என்னுடைய தகுதிக்கு நானெல்லாம் எழுதிய கட்டுரையை அவர் அப்படியே தன்னுடைய உதவியாளரிடம் கொடுத்து ஒரு மூலையோரத்தில் வைத்து விடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் கலைஞர் அப்படிச் செய்யவில்லை. அவருக்கிருக்கின்ற வேலைப்பாடுகளில் அதையும் விரித்துப் படித்து, அவர் விழியசைவால் என்னை வாழ்த்தினார் பார்த்தீர்களா!

  "இவர் தான் கலைஞர். இவர் தான் தொண்டர்களின் ஒப்பற்ற தலைவர்"

  இந்த ஒற்றை உணர்விற்காகவே, என் வம்சம் முழுதும் கலைஞர் தான் எங்கள் தலைவர் எனக் கூவி, கருப்புசிவப்புக் கொடி பிடித்துக் கலைஞர் வாழ்க எனக் குரலெழுப்பும்.

    93 வயதிலும் தான் ஏறிப்பார்க்காத உயரமே இல்லை எனும் புகழைக் கொண்ட ஒரு தலைவர், 24 வயது சின்னக் கடைக்கோடித் தொண்டனுக்கும் இவ்வளவு பெரிய சகாப்தத்தைத் தர முடிகிறதென்றால் அது உலக வரலாற்றில் திராவிடப் பெருந்தலைவர் கலைஞரைத் தவிர  எவராலும் முடியாது.

   பெரியாருக்குப் பின்னால் அவர் இடத்தை பேரறிஞர் அண்ணா பூர்த்தி செய்தார். அண்ணாவிற்குப் பின்னால் அவர் இடத்தை திராவிடப் பெருந்தலைவர் கலைஞர் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கலைஞருக்குப் பின்னால் அவருடைய
வெற்றிடம் தான்.  தலைவனாகப்பட்டவன் இப்படித் தான் வாழவேண்டும் என்பதற்கு கலைஞர் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

    92 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிற கலைஞரே, என் குடும்பத்தின் ஆயுளில் ஒரு கால் பங்கைத் தருகிறேன் எடுத்துக் கொள்ளும். இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!!

   வாழ்க கலைஞர்!!
   வாழ்க கலைஞர்!!
   ஓங்குக கலைஞர் புகழ்!!