Saturday, August 30, 2014

உதயமாகும் சமத்துவம்

   முன்பொரு காலங்களில் சாதி என்றாலே அதீத ஆர்வத்தோடும், அலாதிப் பிரியத்தோடும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியூட்டக் கூடிய ஊக்கமருந்தாக கிராமங்களில் சாதி விளங்கியது. அதனால் அவர்கள் தங்கள் சாதியைச் சார்ந்த மன்னர்களையும், மூத்த தலைவர்களையும் மிக மதிப்போடு போற்றி, அவர்களுடைய பெயர்களிலே நற்பணி மன்றங்களும் சங்கங்களும் துவக்கி தங்களுடைய சாதீய உணர்வை வெளிக்காட்டினர். இது கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் கூட இருந்தது.

  அதன் விளைவாக பல இளைஞர்கள் சாதிய உணர்வை வெளிக்காட்ட மற்ற சாதிக்காரர்களோடு பழகுவதையும் பழகுவதில் மட்டுமல்ல பேசுவதில் கூட தங்களின் சாதிய உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக செயல்பட்டனர். முடிவில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற மோதல்கள் தொடங்கி அவைகள் சில நேரங்களில் கலவரங்களாகக் கூட முடிந்திருக்கின்றன.

  ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களின் வீதிகளில் கூட படித்த இளைஞர்கள் கூட்டம் சாதி பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றும் சில கண் கொள்ளாக் காட்சிகளை நாம் காண முடிகிறது. மேலும் சில வீடுகளில் தன்னுடைய பிள்ளையின் நண்பர்கள் என்கின்ற காரணத்தால் அனைத்து சாதி வீட்டுப் பிள்ளைகளையும் தன் வீட்டினுள் அனுமதித்து சாப்பாடு போடுகின்ற அளவிற்கு பெற்றோர்கள் சிலர் சாதி பாகுபாட்டை மறந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

  கிராமங்களிலே இந்த நிலை என்கின்ற போது நகரங்களில் பார்த்தோமேயானால், சாதியைத் தவிர்த்து நட்பை மூலதனமாகக் கொண்டு பழக்கம் வைத்துக் கொள்கின்ற மனப்பாங்கு இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. மாநகரங்களில் அதைவிட ஒரு படி மேல், ஒரே தெருவில் அனைத்து சாதியினரும் சாதிப் பாகுபாடின்றி அத்தை மாமா என்று பழகுகின்ற அளவிற்கு உறவை மேம்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

  புதிதாக இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் சாதி ஒரு பொருட்டே இல்லை என்பது போன்ற மனப்பாங்கு தோன்றி வருவது போல உணர்கிறேன். ஒரு கல்லூரி மாணவனிடம் பேசுகிற போது, நான் ஒரு நாள் சட்டை எல்லாம் அழுக்கா இருக்கேனு, நம்ம சாதி படம் போட்ட  டிசர்ட்  போட்டு கேண்டின்ல சாப்பிடப் போகும் போது, இன்னொரு பையன் என்கிட்ட வந்து நீ நம்ம சாதியாடா ன்னு கேட்கும் போது, சக நண்பர்கள் மத்தியில் ரொம்ப அருவறுப்பாக இருந்தது என்று சொன்னார். உண்மையில் கல்லூரி இளைஞர்கள் சாதியை வெளிக்காட்டிக் கொள்ள ஒரு போதும் விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன்.

  இன்னும் சொல்லப் போனால் எந்தக் கல்லூரி இளைஞனிடமும் நீ என்ன சாதி? என்று நேருக்கு நேர்  கேட்க யாருக்குமே மனம் இல்லை. ஒருவேளை அப்படிக் கேட்டால் அவர்கள் ச்ச்சீ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்களோ என்ற பயம் நமக்ககுக் கூட இருக்கத்தான் செய்கிறது.

  இன்றைய கல்லூரி இளைஞர்களெல்லாம், தன் பெயருக்குப் பின்னால் சாதியைப் போடுபவர்களாக நிச்சயம் இல்லை. ஒரு வேளை அப்படியிருந்தால் அவர்கள் நூற்றுக்கு 20 சதவிகித படித்த இளைஞர்களே விரும்புகின்றனர். நூறு சதவிகிதம் பேரும் சாதியைத் தூக்கிப் பிடித்த காலம் மாறி, இன்று நூற்றுக்கு 20 சதவிகிதம் பேர் மட்டுமே சாதியைப் போற்ற நினைக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விசயம் தானே.

    இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் விரும்பிகளாக மாறிவிட்டனர். அதன் விளைவாக என் பிள்ளைக்குப் பிடித்திருந்தால் போதும், அது எந்த சாதிப் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்தால் கூட , நான் திருமணம் செய்து வைக்கத் தயார் என்ற நிலையை பெற்றோர்கள் எட்டியிருக்கின்றனர். அதனால் சில காதல் திருமணங்களும்  கலப்புத் திருமணங்களும் கூட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

   தற்போதுள்ள காலகட்டத்தில், பல இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் பார்க்கும் படலத்தைத் தவிர எங்கும் சாதி பார்த்துப் பேச, பழக நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

   அடுத்த தலைமுறைக்கான காலங்கள் வரும் போது, திருமணத்திற்கு பெண்பார்க்கக் கூட சாதியை நினைக்க பலர் மறந்துவிடுவர் என்று நினைக்கிறேன்.

  சாதி என்ற சிட்டிகைக்குள் மட்டுமே தங்களை அடைத்துவிடாதீர்கள். அப்படியிருந்தால், நீங்கள் "குண்டாச் சட்டிக்குள் தான் குதிரை ஓட்டிய" கதையில் தான், உங்கள் வாழ்க்கை முழுவதையும் வீண்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

  சாதியைத் தாண்டி, நம்மோடு நட்போடு உயிராய் உணர்வாய் பழகக் கூடிய பல நண்பர்கள் இருக்கிறார்கள். சாதி என்ற சிட்டிகைக்குள் அடைந்துகொண்டு, அவர்களை இழந்துவிட வேண்டாம்.

  "சாதிகள் வேண்டாம்; சமத்துவம் போற்றுவோம்"

Friday, August 29, 2014

பாதை மாறிய பயணம்!!

எந்தவொரு செயலையும் தொடங்குகின்ற போது, தன்னுடைய இல்லத்தில் இருந்தே தொடங்க வேண்டும் அல்லது தனக்கு மிகத் தெரிந்த தகவல்களைக் கொண்டும் அல்லது தன்னுடைய அறிவிற்கு மிகத் தெளிந்த சிந்தனைகளைக் கொண்டும் தொடங்கும் போது தான், இறுதியில் வெற்றியில் முடியும் என சான்றோர் கூறக் கேட்டிருக்கிறேன்.

  அந்த வகையில் என்னுடைய ஊரில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில விசயங்களைக் கருத்தில் கொண்டு இதைத் தொடங்குகிறேன்.  

  இயல்பில் என்னுடைய ஊர் ஒரு கிராமம். கிராமங்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்புகள் என்று காந்தியடிகள் எப்போதோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்த எண்ணத்தில் ஒரு கிராமத்தை வைத்தே ஒரு நாட்டின் நிலையை மதிப்பிட்டு விடலாம். "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறும் பதம்பார்த்து  பக்குவமாய் வடித்து சோற்றுப்பானையை இறக்கி வைப்பவர்கள் தானே நம் வீட்டுத் தாய்மார்கள். ஆக, கிராமங்களை முன்னோடியாகக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்பதை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

  என்னுடைய தாத்தா காலத்தில் இருந்த இளைஞர்கள் எல்லாம், இந்த நாடு விடுதலை அடைய வேண்டும் என்கின்ற உணர்வுகளோடு, அதற்காக தங்களுடைய இன்னுயிரையும் தரவேண்டுமானால் அதற்கும் நாங்கள் துணிந்து நிற்போம் என்கின்ற நாட்டுப்பற்றுடன் கூடிய நெஞ்சுரத்தோடு இராணுவத்தில் சேர்ந்து பணி செய்கின்ற ஆர்வங்களோடு வாழ்ந்து வந்திருக்கினர். இது எப்படி உனக்குத் தெரியும்னு நீங்க கேட்கலாம். இன்றைக்கு எங்களுடைய கிராமத்தில் எனக்கு தாத்தாக்களாக பல முன்னாள் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். அதிலும் முன்னாள் இராணுவ வீரர் தாத்தா இராமசாமி அவர்கள் இறக்கின்ற தருவாயிலும், கண் தானம் செய்தது தான் மிகச் சிறப்பு.

இந்த ஒரு விசயத்தில் இருந்தே என்னுடைய தாத்தாக்கள் காலத்து படித்த  இளைஞர்கள் எவ்வாறு சமூக சிந்தனைகளோடும், தேசப் பற்றோடும், மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளோடும் இருந்திருக்கிறனர் என்பதைக் கூட நாம் புரிந்து கொள்ளவில்லையென்றால், அவர்களுடைய செயல்களை அவர்களுடைய தியாகங்களை நாம் அவமதித்தது போல் ஆகிவிடும் அல்லவா!!

  என்னுடைய தந்தையார் காலத்தில் இருந்த இளைஞர் கூட்டங்களெல்லாம், தேசப்பற்று என்பதை மனதளவில் வைத்துக் கொண்டு, ஏனெனில் நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. இனி நம்முடைய மக்களின் உரிமைகளும் அடிமைத்தனங்களும் அகற்றப்பட வேண்டுமெனக் கருதி, திராவிட இயக்க சிந்தனைகளின்பால் பற்று கொண்டவர்களாகவும், தமிழ் மொழிப் பற்றாளர்களாகவும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி பல போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தங்களுடைய சமூக சிந்தனைகளை வெளிப்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க வழிதேடி அலைந்தனர். விளைவில் அவர்களில் பலர் அரசியல் தலைவர்களாகக் கூட உருவெடுத்தனர். அதன் முடிவில் மக்கள் மத்தியில் கிராமங்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு கிராமங்கள் முன்னேற்றத்தின் பாதையை நோக்கி நகரத் தொடங்கின.

   என்னுடைய தாத்தாக்கள்  காலத்து இளைஞர்களோடும், என் தந்தையார் காலத்து இளைஞர்களோடும் என்னுடைய சமகாலத்து இளைஞர்களின் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளின் ஈடுபாடுகளையும் சமூக அக்கறை கொண்ட சிந்தனைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது மிகப்பெரிய வருத்தம் என்னுள் எழுந்து நிற்கின்றது.

  என் சமகால இளைஞர்கள் யாவரும் வாக்களிப்பதோடு நம்முடைய பிரச்னை முடிந்துவிட்டது என்றெண்ணி தங்களை சுயநலப் பாதையில் அழைத்துக் கொண்டு செல்கின்றனர். ஒரு கல்லூரி இளைஞரோடு நான் பேசுகின்ற போது, யாருக்கு ஓட்டுப் போடுவ என்று கேட்டால், நான் எப்பவும் போல நோட்டா என்று சொல்கின்ற அளவிற்கு வாக்களிப்பில் கூட அவர்களுடைய சிந்தனை, சிறிய வட்டத்திற்குள் சுருங்கிக் கிடக்கிறது.

  மிகத்தெளிவாய்ச் சொல்ல வேண்டுமென்றால், எப்போதும் இறங்குகின்ற பேருந்த நிலையத்தில், இறங்கக் கேட்கின்ற மூதாட்டியிடம், அங்கெல்லாம் இறக்க முடியாது. அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொள், என்று திமிரோடு பேசி, அடுத்த நிலையத்தில் இறக்கிவிடுகின்ற நடத்துனரைக் கூட, தட்டிக் கேட்க மனமில்லாமல், தன்னுடைய சுயநலப் பாதையில் செல்கின்ற மனம் கொண்ட இளைஞர்களோடு தான் நானும் வாழ்கிறேன் என்று எண்ணி வருந்துகிறேன்.

  கிராமங்களில் இருந்த திராவிட இயக்க சித்தாந்தங்களாலும், காங்கிரஸ் பேரியக்கத் தத்துவங்களாலும் ஈர்க்கப்பட்டு, எளிமையான மக்களுக்கான தலைவராய் உருவான பெருந்தலைவர் காமராஜரின் இடத்தையும்,  திருக்குவளை என்னும் கிராமத்தில் பிறந்து எளிய மனிதனாய் சென்னைக்குச் சென்று, ஐந்து முறை முதல்வராகிப் பின் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை மிகச் சாதாரணமாய் நிறைவேற்றிய கலைஞரின் இடத்தையும்,  கலிங்கப்பட்டி என்னும் குக்கிராமத்தில் வழக்கறிஞராய் தன்னுடைய சமூகப் பணியைத் தொடங்கி, ஒரு காலத்தில் எதையும் துணிவு கொண்டு எதிர்த்து புரட்சிப் புயலாய் வலம் வந்து, பின்பு புஷ்வானமாய் ஆகிப்போன வை.கோபால்சாமியும் இடத்தையும், இன்னும் பல கிராமத்தில் இருந்து கிளம்பிய தலைவர்களின் இடங்களையெல்லாம், அவர்களுக்குப்பின் இனிவரும் காலங்களில் கிராமத்து இளைஞர்களால் அவர்கள் அலங்கரித்த சபைகள் எப்படி நிரம்பப் போகிறது?? என்கின்ற கேள்விக் கணை என்னுள் பனையளவிற்கு உயர்ந்து நிற்கிறது.