Friday, February 14, 2020

கலைஞர் செய்த கல்விப் புரட்சி

தமிழகமெங்கும் லட்சக்கணக்கிலே பி.இ. பட்டதாரிகள், அறிவியல் பட்டதாரிகள் என பல்துறைப் பட்டதாரிகள் யாவரும் வேலையின்றித் தவிக்கிற நிலையில் இன்றைய தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் மிகக் குறைந்த ஊதியத்தில் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத துறையில் பணியில் இருக்கிறார்கள். வேதனையான செய்திதான் இது.

   இன்றைக்கு பேருந்துகள் போகாத கிராமங்களில் இருந்தும் கூட பொறியாளர்களாக தமிழகத்தின் பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் வேதனை என்றாலும் கூட மறுபக்கம் இப்படிப்பட்ட மகிழ்ச்சியான சம்பவங்களும் கூட நடந்து கொண்டிருக்கிறது. 

   கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பல லட்சக்கணக்கான பொறியாளர்கள் தமிழகத்திலே உருவாகியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னோடு உடன்படித்த என் போலவே ஏழைக் குடும்பத்தில் பிறந்த நண்பன் கூட இன்றைக்கு பொறியியல் படித்து முடித்து அமெரிக்காவில் பணிபுரிந்து, அமெரிக்கக் குடியுரிமை வாங்குகிற அளவுக்கு வாழ்விலே முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.  கல்வி தொடங்கிய காலத்தில் இருந்தே கணக்கிட்டாலும் கூட இத்தனை அசுர வளர்ச்சி எல்லோரும் பட்டதாரிகளாய் ஆனது கடந்த பத்தாண்டுகளில் தான். பணக்காரர்களும் அரசு உத்தியோகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் வீட்டுப் பிள்ளைகளும் உயர்ந்த சாதிக்காரர் வீட்டுப் பிள்ளைகளும் மட்டுமே பெரும்பாலும் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த உயர்கல்வித் துறையில் ஏழை, பிற்படுத்தப்பட்ட, நடுத்தர, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் குடும்பங்கள் இப்போடியோர் வளர்ச்சியைக் கண்டது எப்படி என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை   ஆராய்கிறது.

   கடந்த 2006 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, நடுத்தர, ஏழைக்குடும்பங்களில் இருந்து பொறியியல் படிக்கச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதத்துக்கும் கீழ், மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை அதைவிட பலவீனமாகவே இருந்தது. ஏன்? இதுபோன்ற குடும்பங்களில் இருந்தும் அரசுப் பள்ளிகளில் இருந்தும் வந்த மாணவர்களுக்கு அதுவரை திறமையில்லையா? தகுதியில்லையா? என்ற கேள்வியும் ஐயமும் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிகப்பெரிய விடையையும் நல்வழியும் காட்டியவர் கலைஞர் அல்லவோ.

   முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்தாம் முறை முதல்வராகப் பதவியேற்ற பொன்னான ஆண்டு 2006. உயர்கல்வித் துறை அமைச்சராக மதிப்பிற்குரிய பொன்முடி அவர்களும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மதிப்பிற்குரிய தங்கம் தென்னரசு அவர்களும் முதல்வர் கலைஞரால் நியமிக்கப்பட்டனர். உயர்கல்வியிலே இருந்த ஏற்றத்தாழ்வுகளை ஒரே கையெழுத்தில் களைந்தார் கலைஞர். ஆம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு அதுவரை இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்து 2007 ல் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் சேர்க்கை தொடங்கப்பட்டது.

   அரசுப்பள்ளி ஆசிரியர்கள் யாவரும் இந்தத் திட்டத்தை மிகுந்த மனமகிழ்ச்சியோடு கொண்டாடிடனர். 2007-08 ஆம் ஆண்டில் தான் நானும் பனிரெண்டாம் வகுப்புக்குள் நுழைகிறேன்.  நுழைவுத்தேர்வை ரத்து செய்த இரண்டாவது ஆண்டு எங்கள் வகுப்பு மாணவர்கள் யாவரும் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நேரம். எங்கள் ஆசிரியர்கள் எங்களில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களை,, டேய் நீ,, நல்லா படிடா,, நல்ல மார்க் எடுத்தா அண்ணா யுனிவர்சிட்டிலயே உனக்கு சீட் கிடைக்கும் என்று ஊக்கப்படுத்தினார்கள். விளைவாக எங்கள் வகுப்பில் பயின்ற 29 பேரில் ஐந்து பேர் சென்னை, கோவை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில்  சேர்ந்தனர். அதற்கடுத்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் தரமான தனியார் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதிலும் பணத்துக்கு திக்குமாக்காடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வங்கியிலே கொடுத்து,வங்கிக் கடன் பெற்று கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தனர். 

    நான் எழுபத்தைந்து சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் கூட, அந்த நேரத்தில் எங்களுக்கென்று சொந்தமாக வீடு கூட இல்லாத காரணத்தால் சிவில் இஞ்சினியர் ஆகவேண்டும் என்ற  என் லட்சியக் கனவுகளைப் புதைத்து விட்டு, பாலிடெக்னிக்கில் சிவில் என்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தேன். பின்னாளில் குடும்பத்தினுள் மாறி மாறி அடித்த வறுமைப் புயல்களால் எனக்கு பாலிடெக்னிக் படிப்பும் கூட முழுமையாகக் கிட்டவில்லை. 

     இப்படியாக வறுமையில் வாடாத, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பி.இ. படிக்கவும் மற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் படிக்கவும் சேர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தனர். இந்த நேரத்தில் தான் எனக்கு என் ஆருயிர் நண்பன் சிவக்குமார் நினைவுக்கு வருகிறான். அவனும் 75 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தான். பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் குரூப் படித்தவன் அவன். அவனுடைய குடும்பம் எங்களைக் காட்டிலும் வறுமையான குடும்பம். கல்லூரி படிக்கவும் ஆசை. பணமும் இல்லை. என்ன செய்வது,, என்னைப் போல் இவ்வளவு தான் என் வாழ்க்கை என்று அவனுக்கு வாழ்வை சுருக்கிக் கொள்ளும் மனமும் இல்லை.  இந்த மதிப்பெண்ணுக்கு அரசுக்கல்லூரியிலே படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என விசாரித்தான். கடைசியில் டீச்சர் ட்ரெயினிங்கில் கிடைக்கும் என நண்பர்கள் பலர் சொல்ல,பின் விண்ணப்பித்து அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே சேர்ந்து மாலை நேரங்களில் வேலை பார்த்து எப்படியோ கடும் சிரமப்பட்டு  கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்தான் சிவக்குமார்.

    ஆண்டு 2010 ஆகிவிட்டது. நண்பர்கள் பலரும் பாலிடெக்னிக்கை முழுமையாக முடித்து வெளிவரத் தொடங்கிவிட்டனர்.  

   தமிழக அரசு ஒரு குடும்பத்தில் முதல் முதலில் பட்டம் படிக்கிற மாணவர்களுக்கு, அரசாங்கம் பாதி செலவை ஏற்றுக் கொள்ளும் என்கிற *முதல் பட்டதாரி* திட்டத்தை அமல்படுத்துகிறார் கலைஞர். என்னோடு படித்து பாலிடெக்னிக் முடித்த நண்பன் ஏக்கிமுத்து, நன்றாக படிக்கிற ஏழை மாணவன் என்பதை மனதில் வைத்து, நீ பி.இ படிக்க விரும்பினால் நம்முடைய கல்லூரியிலேயே முதல்பட்டதாரித் திட்டத்தைப் பயன்படுத்தி  படித்துக் கொள்ளலாம். வேறு எந்த கட்டணமும் கட்ட வேண்டாம் என்று முதல் பட்டாதாரித் திட்டத்தோடு கல்லூரியும் அரவணைத்தது நண்பன் ஏக்கிமுத்துவை. இப்போது வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான். ஏக்கிமுத்துகள் மட்டுமல்ல இன்று வரை முதல்பட்டதாரித் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அப்படியானால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கிமுத்துகள் முதல் பட்டதாரித் திட்டத்தால் இதுவரை உருவாகியிருக்கிறார்கள். இனியும் வருவார்கள்.

    முதல் பட்டதாரித் திட்டம் மூலம் இப்படியெல்லாம் ஒரு முன்னேற்றம் போய்க் கொண்டிருந்தாலும் உயர்நிலைக் கல்விக்கு  பணம் பெரும் தடையாகவே இருந்து வந்தது. அந்தத் தடையும் களைவதற்கு கலைஞர் வெளிச்சொல்லாமல், வங்கிகளிலே கல்விக் கடன் பெறுவதற்கு அடமானமாக சொத்து பத்திரம் கொடுக்க வேண்டும் என்பதைத் தளர்வு செய்ய மத்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுக்கிறார். அதன் பயனாக வங்கிகளிலே கல்விக் கடன் பெறுவதற்கு கல்லூரிகளில் இருந்து தரும் கடிதம் ஒன்று மட்டுமே போதுமானதாக ஆக்கப்பட்டது. இது பொறியியல் மருத்துவம் மட்டுமின்றி அறிவியல் இளங்கலைப் பட்டாதாரிகளுக்கும், ஏன் பாலிடெக்னிக் கல்விக்கும் கூட வங்கிக் கடன் கொடுக்கலாமென நீட்டிக்கப்பட்டது.  இது ஏழை மாணவர்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே சொல்லியிருந்தேனே என் நண்பன் சிவக்குமார், டீச்சர் டிரெயினிங் முடித்து விட்டு தனியார் கல்லூரி ஒன்றிலே விடுதிக் காப்பாளராக ஒன்றரை ஆண்டுகளாக பணியில் இருந்தவன், வங்கிகளிலே கல்விக் கடன் பெறும் இந்த எளிய முறையைக் கணக்கில் கொண்டு கோவையிலே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்குச் சேர்ந்து தன் கல்லூரிப் படிப்பை மகிழ்ச்சியோடு முடித்து, இப்போது கோவையிலே உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணியில் இருக்கிறான். தன் வருமானத்தையும் தாய் தந்தை வருமானத்தோடு சேர்த்து தன் தங்கைக்கு நல்ல இடத்தில் மணமுடித்துக் கொடுத்திருக்கிறான்.

   எங்கள் ஊரில் தன் பிள்ளைகளை அக்கறையோடு அரசுப் பள்ளியிலே படிக்க வைத்த, வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழைக் குடும்பங்கள் பல இருந்தாலும், ஒரு குடும்பம் மட்டும் தன் பிள்ளைகளுக்கான கனவுகள் அத்தனையும் நனவாக்கியிருக்கிறது. அந்த தம்பதியிருக்கு மூன்று குழந்தைகள், வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டிங் செய்யும் வேலை செய்கிறார் குடும்பத் தலைவர். குடும்பத் தலைவி வீட்டிலே இருந்து கொண்டு நைட்டி தைக்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஆண், இரண்டு பெண் என மூன்று பிள்ளைகள், ஒரு மகன் பொறியாளராகவும், இன்னொரு மகள் மருத்துவராகவும், இன்னொரு மகள் பி.இ. படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு மூன்று பிள்ளைகளை வளர்ப்பதென்பதே, பெரும் துன்பமான சூழ்நிலையில் தன் பிள்ளைகளை மருத்துவராகவும், பொறியாளராகவும் ஒரு தந்தை உருவாக்க முடிகிறதென்றால், அதை தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்து ஏழை எளியோரின் கல்விக்காக அயராது பாடுபட்டதன் பலன் அல்லவா. 

   பெருந்தலைவர் காமராஜரைக் கல்விக் கண் திறந்த வள்ளல் என்று கொண்டாடுகிறோம் உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். பள்ளிக்கூடத்தைக் கட்டுவதைக் காட்டிலும், மதிய உணவு போடுவதைக் காட்டிலும் அதிக சிரமங்கள் அதிக சோதனைகள் அல்லவா இந்த உயர்கல்வித் திட்டங்களைத் தீட்டுகையில் சந்திக்க வேண்டியிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடம் கட்டி,மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த போது,யாரும் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டதாக சரித்திரம் இல்லை.

   ஆனால், கலைஞர் நுழைவுத்தேர்வை ரத்து செய்த போது உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். 2005 ல் அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூட நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அதனை உயர்நீதிமன்றம் முறையான வழிகாட்டல் இல்லை என்று கூறி ரத்து செய்தது. அதே போலவே கலைஞர் ரத்து செய்த போதும் நீதிமன்றம் சென்றது பார்ப்பனக்கூடாரம், ஆனால், கலைஞரின் அறிவிப்பை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை 23/7/2007 அன்று உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின்னாலும் காங்கிரஸ் அரசும் கூட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்திட மத்திய அமைச்சர் கபில் சிபில் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை முதல்வராக கலைஞரும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவும் கூட பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இத்திட்டத்தைக் கைவிடக்கோரி கடிதம் எழுதினார். 6/12/2011 அன்று இடைக்காலத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

   இளைஞர்களே, மாணவச் செல்வங்களே இன்றைக்கு லட்சக்கணக்கிலே தமிழ்நாட்டில் பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அந்த உரிமைகள் அனைத்தும் ஏனோதானோ யென்று கிடைத்துவிடவில்லை. கலைஞர் எனும் ஆகப்பெரும் திராவிடத் தலைவரால் கிடைத்தது. அவருடைய சமூகநீதிச் சிந்தனைகளால் விளைந்தது. ஏழைஎளிய, பிற்படுத்தப்பட்ட, நடுத்தர, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் முழுமையான நலன்களின் மீது, அவர்களின் எதிர்காலத்தின் மீது கலைஞர் வைத்திருந்த  மிகுந்த அக்கறையால் விளைந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

     நுழைவுத்தேர்வு, இட ஒதுக்கீடு, சமச்சீர் கல்வி என எல்லாமும் ஆரிய அதிகாரவர்க்கத்தின் பிடிகளில் இருந்தவற்றைப் போராட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் பெற்றுத் தந்தவர் கலைஞர். 

    இங்கே தான் எல்லோரும்  திராவிடத்தையும் ஆரியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். குலக்கல்வி தொடங்கி இன்றைக்கு நீட் வரை ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நடுத்தர வர்க்கத்து மக்களின் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை தொடர்ந்து கொண்டிருப்பது ஆரியம். 

   அந்தத்தடைகள் ஒவ்வொன்றையும் சுக்குநூறாய் நொறுக்கி தமிழர்தம் வாழ்வில் மிக எளிமையாக கல்வியிலே மேம்பட அயராது பாடுபட்டது திராவிடம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    2005 க்கு முன்னால் உயர்கல்வியிலே முன்னிலையில் இருந்தோர் யார்? இப்போது முன்னிலையில் இருப்போர் யார்? கடந்த 2006 க்குப் பின்னால் தான் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழையின் இல்லத்தில் கூட மருத்துவரும் பொறியாளரும் கலந்திருக்கிறார்கள். 

    கடந்த 2006 ல் கலைஞர் முதல்வராகப் பதவியேற்று உயர்கல்வித் துறையிலே அவர் ஆற்றிய சாதனைகளை,பெற்றுத் தந்த உரிமைகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான், இன்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் நீட் தேர்வு எனும் பெருங்கொல்லியை அணைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. நாளை தி.மு.கழகம் ஆட்சியிலே அமர்கிற போது முதல் கையெழுத்தாய் நீட் தேர்வை ரத்து செய்யும் என்பதில் உறுதியாக உருக்கிற ஒரே இயக்கம் தி.மு.கழகம் மட்டுமே. 

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அந்தக் காலத்தில் தேவையான அடிப்படைக் கல்வியைக் கொடுப்பதற்குப் பாடுபட்டாரென்றால்,தலைவர் கலைஞர் 2007 ல் இருந்து உயர்கல்விக்கு அரும்பாடுபட்டார். 

   பெருந்தலைவர் காமராஜர் கட்டிய அடித்தளத்திலே, முத்தமிழறிஞர் கலைஞர் ஒய்யாரக்கோபுரம் கட்டியிருக்கிறார். 

   பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கல்விக் கண் திறந்த வள்ளல் என்றால், முத்தமிழறிஞர் கலைஞர் உயர்கல்வியில் கண் திறந்த வள்ளல்.

-மு.சீதாராமன்.
14/02/2020

Tuesday, March 19, 2019

யாரை மக்களவைக்கு அனுப்பவேண்டும்?

நான் ரொம்ப சுயநலக்காரன். பொதுநலன் கருதி திமுகவை ஆதரிப்பதைவிட சுயநலத்திற்காகத்தான் அதிகமாக ஆதரிக்கிறேன்.  இந்த மக்களவைத் தேர்தலிலும் அப்படித்தான்.  பச்சை சுயநலத்தோடு சிந்தித்துதான் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கப்போகிறேன்.  ஏன் என்றால்,

• நீட் தேர்வு ரத்து.  என் அடுத்த தலைமுறையும், உறவினர்களின் குழந்தைகளும் முன்பு போல் மீண்டும் டாக்டர் ஆக முடியும்.  அனிதாவின் நிலைமை அவர்களுக்கு வராது.

• சுங்கச்சாவடி பகல் கொள்ளை ரத்து.  ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் டோல்கேட் என்கிற பெயரில் நடக்கும் வழிப்பறி ரத்து. மாதம் பல ஆயிரங்கள் மிச்சமாகும். 

• தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு.  இனி தோளைத் தொட்டுப்பார்த்தோ, நூல் இருக்கிறதா எனத் தடவிப்பார்த்தோ பதவி உயர்வோ, வேலையோ கொடுக்க முடியாது.  சட்டம் செருப்பால் அடிக்கும்.

• சென்னையில் மெட்ரோ கொண்டு வந்த திமுக, அடுத்த கட்டமாக, மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வர இருக்கிறது.

• மாநிலப் பட்டியலில் கல்வி.  இந்திக்காரர்களினால் பொய்யும் புரட்டும் புகுத்தப்படும் வரலாற்றைப் படிக்காமல் நிஜ வரலாற்றை, தமிழகத்தின் பெருமையைப் படிக்கலாம்.  இதுபோல் ஆயிரம் நன்மைகள் உண்டு.

• மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து.

• மாணவர்கள் தடையின்றி படிக்க கலைஞர் இலவச பஸ் பாஸ் கொடுத்தார்.  ஸ்டாலின் இலவச ரயில் பாஸ் தரப்போகிறார்.

• பட்டேல் சிலையை வைத்துவிட்டு அதற்கு டிக்கட் போடுகிறவனுக்கு கூட சம்பள பாக்கி வைக்கும் நிலையில் உள்ளது இந்தியப் பொருளாதாரம். அதை மீட்க நிபுணர் குழு அமைக்கப்படும். நிபுணர் குழு என்றால் குருமூர்த்தி போன்ற ஃப்ராடுகள் இல்லை.  ரகுராம் ராஜன் போன்ற ஜெயிச்சு கப் வாங்கியவர்கள். 

• மினிமம் பேலன்ஸ் வைக்க முடியாதவர்களிடம் பிடிங்கித் தின்ற பணம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்படும்.

• கேஸ் மானியத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை.  முன்புபோல் கேஸ் வாங்கும் போதே மானியம் கேஸ் விலையில் கழிக்கப்படும்.

இதுபோல் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு.  சேலம் ஸ்டீல் ஆலையை இந்திராகாந்தியுடன் சண்டைபோட்டு தமிழகம் கொண்டு வந்த கலைஞரின் வரலாற்றில் துவங்குகிறது தமிழகம் திமுகவின் போராட்டத்தால் மத்திய அரசிடம் பெற்ற உரிமைகளின் வரலாறு. 

"வலியுறுத்துவோம், வலியிறுத்துவோம்," எனக் குழையும் அதிமுக அடிமைகளின் முனகல் ஒருபக்கம்.  "செய்துமுடிப்போம்," என உறுதியாய்ச் சொல்லும் திமுகவின் முழக்கம் ஒருபக்கம்.

நாற்பது பேராக மக்களவையில் நுழைந்து "காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்," எனப் பாடி தமிழ்நாட்டின் மானத்தை வாங்கும் அதிமுக மொக்கைகள் ஒருபக்கம். 

தனி ஆட்களாகத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றக் கர்ஜிக்கும் திருச்சி சிவாக்கள் ஒருபக்கம்.  "இதென்ன அநியாயமா இருக்கு," என சமூகநீதிக்கெதிராக எது நடந்தபோதும் வீறுகொண்டெழும் கனிமொழிகள் ஒரு பக்கம்.  

நீங்கள் யாரை மக்களவைக்கு அனுப்பப் போகிறீர்கள்?   வில்லன்களுக்கு காவடி தூக்கி, ஆயில் மசாஜ் செய்துவிடும் காமடியன்களையா, அல்லது  கதாநாயகர்களையா? 

-டான் அசோக்
மார்ச் 19, 2019

Thursday, February 7, 2019

நீட் தேர்வில் தமிழகம் மிகப்பெரிய வெற்றி.

தமிழகத்தில் தான் நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆகவே, திமுக வின் தமிழன் பிரசன்னா தற்கொலை செய்யத் தயாரா?? யென ஒரு தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
  அட முட்டாப் புன்னகைகளே,,, நாங்கள் கேட்டது எண்ணிக்கை அல்ல. அனிதாக்களும் மருத்துவராக வேண்டும் என்பது மட்டுந்தான். தமிழகத்தில் யார் அந்த வெற்றியை அடைந்திருக்கிருக்கிறார்கள் என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா இடங்களையும் சிபிஎஸ்இ மாணவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அரசுப்பள்ளியோ அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்தோ மருத்துவக்கல்லூரிக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 95 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. சரி,, சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பவர்கள் யார்? ஏழை வீட்டுப் பிள்ளைகளா?? இரும்படிப்பவர் வீட்டுப் பிள்ளைகளா?? மூட்டை தூக்கும் தொழில் செய்வோரின் பிள்ளைகளா?? தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளா?? இல்லை.  அவர்கள் எல்லாம் செல்வத்தில் திகைப்போரின் பிள்ளைகள். அவர்கள் நீட் தேர்வு என்று ஒன்று இல்லாமல் போனாலும் கூட, கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனாலும், செல்ப் பைனான்ஸில் படிக்கிற அளவிற்கு வசதி படைத்தோர் வீட்டுப் பிள்ளைகளே, பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்க முடிகிறது.
  திமுக தலைமையால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் பெறப்பட்ட தகவல்களின் மூலம் பின்வருவனவற்றைப் பகுத்தாய்கிறார் நண்பர் பழூரான்விக்னேஷ்.  இதைப் பார்த்துவிட்டு கொஞ்சம் சிந்தித்து முடிவு செய்யுங்கள். எல்லா தமிழகத்து மாணவர்களும் இதிலே வெற்றி தான் பெற்றிருக்கிறார்களா?? யென்று. கீழே அவர் பெற்ற புள்ளிவிவரங்கள் வருமாறு.
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 04
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 03
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 20 ( huge difference)
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  CBSE  பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 611
——————————————————————
தனியார் மருத்துவ கல்லூரியில்  அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 01
தனியார்  மருத்துவ கல்லூரியில்  அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :16
2016 -2017 :26
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 0
தனியார்  மருத்துவ கல்லூரியில்  தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 03 ( huge difference)
தனியார்  மருத்துவ கல்லூரியில்  CBSE  பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2
2015 -2016 : 2
2016-2017 : 21
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 283
நன்றிபழூரான் விக்னேஷ் ஆனந்த்

Wednesday, February 6, 2019

எம் ஜி ஆர் கணக்கு கேட்ட கதை

லோக்பால் குறித்து மிகப் பெரிய போராட்டங்களும், விவாதங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சட்டத்தினை சத்தமே இல்லாமல் 1960 களிலேயே நடைமுறையில் வைத்திருந்த இயக்கம் தி.மு.க. ஆம், 1960களில் தி.மு.க வின் ஒவ்வொரு மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக் கழக செயலாளர்களும் கூட தங்களது சொத்து மதிப்பினை தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் கோப்புகள் அனைத்தும் அப்போதைய பொருளாளர் எம்.ஜி.ஆரிடமே இருந்து வந்தது.

  இது நடைமுறையில் இருந்த காரணத்தால் தி.மு.க 1971 ல், அமைச்சர் கே.ஏ.மதியழகனின் சகோதரர் சொத்து சேர்த்ததாக புகார் வர, திமுக வும், அதன் தலைவருமான கலைஞர் தலைமையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது கே.ஏ.மதியழகனுக்கு அமைச்சர் பட்டியலில் இடம் தர மறுக்கப்பட்டது என்பது வரலாறு.

   அதே நேரத்தில் பொருளாளர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் பதவி கேட்க, திரைத்துறையை விட்டு விலகுங்கள், அமைச்சர் திரைத்துறையிலும் செயல்பட்டால் பல்வேறு விமர்சனங்கள் எழும் என கலைஞர் சொன்ன போது, சில சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்து, அமைச்சரவையில் தன்னை சேர்க்கும் படி கோரிக்கை வைக்கிறார் எம்.ஜி.ஆர். பின், அவரே, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாமென ஒதுங்கி விடுகிறார். இதில் தான் எம்.ஜி.ஆருக்கு கலைஞர் மீது, திமுக வின் மீது கொஞ்சம் பெரிய மனக்கசப்பு வருவதற்கான தொடக்கப்புள்ளி.

    பின்னர் ஆட்சி பல்வேறு சங்கடங்களுக்கு மத்தியிலே புயலுக்கு நடுவே செலுத்தும் படகைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு நிதி விவகாரங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்தது தாங்காமல் மதுவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. அதற்கான காரணங்கள் குறித்தும் மதுவால் வருகிற தீங்குகள் குறித்தும், ஒரு குழு அமைத்து விழிப்புணர்வு செய்ய திட்டமிடப்படுகிறது. அதன் தலைவராக எம்ஜிஆரே பொறுப்பேற்று, அதில் இருந்த தர்மசங்கடமான காரணங்களையும், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எம்ஜிஆ.ர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தார்.

    அந்த நேரத்தில் தான் "இந்திராகாந்தி அம்மையாரால் திமுக வைச் சிதைக்க மூன்று பேரை அந்த அம்மையார் திமுக வில் இருந்தே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற செய்தி  ஜார்ஜ் பெர்னான்டஸ் மூலம் பரவலாகப் பரவுகிறது. எம்ஜிஆர் தான் திமுக காரர் தான் எனவும் கலைஞரின் ஆதரவாளர் தான் எனவும் நிரூபிக்க அதன் பின் நடந்த கூட்டங்களில் முயல்கிறார்.

     அதன்பின் மதுரையில் நடந்த கூட்டமொன்றில் தன்னோடு நடிக்கிற முன்னணி நடிகை ஒருவருக்கு மேடையில் அமரவைக்க இடம் தரும்படிகோருகிறார். திமுக தலைமை இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளாது என்கிற பாணியில் திமுக வின் முன்னணியினரிடமிருந்து எதிர்ப்புக் குரல் வர, அதிலும் எம்ஜிஆர் மிகுந்த வெறுப்படைகிறார்.

   பின்னர் தான் மத்திய அரசின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிய எலி கொஞ்சம் கொஞ்சம் வெளிவருவது எம்ஜிஆரின் பேச்சுக்களில் இருந்து வெளிப்படுவது கண்டு சிக்கிய எலி எம்ஜிஆர் தான் என்பதை பலர் உணர்கின்றனர்.

   மத்திய அரசு எம்ஜிஆர் என்ற எலியைப் பிடிப்பதற்காக வைத்திருந்த ரொட்டித்துண்டு, அவர் அளவுக்கதிகமாய் திரைத்துரையில் வரி ஏய்ப்பு செய்து சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்களின் மீதான வருமான வரித்துறை சோதனை.

    எந்த மதுவிலக்கு ரத்தை ஆதரித்துப் பேசினாரோ, அதே மதுவிலக்கு ரத்து குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். தி முக வில் பலரும் பல வகையில் உள்ளுக்குள்ளேயே புளங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மாவட்ட செயலாளர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் எம்ஜிஆர் அளவுக்கதிகமாய் சொத்து சேர்த்து அதைக்காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசோடு சேர்ந்து கள்ளநாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார் எம்ஜி ஆர் என்கிற ரீதியில் அந்தக் கடிதம் பத்திரிக்கைகளுக்கு பெருந்தீனியாகப் போய்ச் சேர்ந்தது.
பின்னர் அந்த மாவட்ட செயலாளரும் கூட கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்துக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தனிக்கதை.

   திராவிட இயக்க அரசியலைத் துண்டாகப் பிளக்கக் காரணமான அந்த பெரும் சம்பவம் இனிதான் நடக்கிறது. ஆம், பெரும்பிரளயமாகக் கருதப்படும் நிகழ்வான  "எம்.ஜி.ஆர் பொதுநிகழ்ச்சியில் கணக்குக் கேட்பு விவகாரம்" வெடிக்கிறது. கழகமும் தொண்டர்களும் கொதித்துப் போகின்றனர். கிளைச் செயலாளர் முதல் மாவட்டசெயலாளர் வரை, உள்ளாட்சியில் இருந்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது எண்ணிக்கையும் பல ஆயிரக்கணக்கில் அடங்கும். அவர்களுடைய சொத்துக் கணக்குகளையெல்லாம் திரட்டுவது சிரமமமான காரியம் என ஒருதரப்பும், இவர் எப்படி பொது இடத்தில் கட்டுப்பாட்டை மீறி கணக்கு கேட்கலாம்,கணக்கு கேட்க வேண்டிய இடம் பொது இடமல்ல,,, பொதுக்குழுவாகத் தானே இருக்க வேண்டும் என்றொரு தரப்பும்,, இவர் தானே பொருளாளர் எல்லா கணக்குகளும் இவரிடம் தானே இருக்கிறது என மற்றொரு தரப்பும் தங்கள் விமர்சனங்களை எம்ஜிஆர் மீது கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.

   என்னதான் கோவம் இருந்தாலும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு, சமாதானப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக ஒரு குழு எம்ஜிஆரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பேச்சு வார்த்தை முடிவில் எம்ஜிஆர் இனியும் தான் உங்களோடு இணைவதாக இல்லை என்று சொல்லி விட்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களையெல்லாம் கிளைக்கழகங்களாக மாற்றத் தொடங்கினார்.

   ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கிட்டதட்ட கழகப்பதவிகள் அரசுப்பதவிகள் என அனைவரது வருடாந்திர சொத்துக்கணக்குகளையும் லோக்பாலை நடைமுறையில் வைத்திருந்த திமுக ஒவ்வொரு  வருடாந்திரமும் கணக்குகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டே வந்தது.

  அந்தக் கணக்குகள் யாவும் கழகப் பொருளாளரான எம்ஜிஆரிடமே இருந்த போது அவர் பொதுவெளியில் கணக்குக் கேட்ட காரணம் தன்னை திமுகவில் இருந்து பிரித்துக்கொள்ளவேயன்றி வேறில்லை.

   கடைசியாக இன்னொரு மிக முக்கியமான சம்பவம், கழக சட்டவிதிகளின் படி சொத்துக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் தலைமைக்கு தாக்கல் செய்து கொண்டிருந்த நிர்வாகிகளில் ஒரே ஒருவர் மட்டும் தான் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டைத் தவிர பின் வந்த ஆண்டுகளில் தன்னுடைய சொத்முக் கணக்குகளை தாக்கல் செய்யவே இல்லை. அந்த ஒருவர் தான் எம்.ஜி.ஆர்.

  ஆக, எம்.ஜி.ஆர் என்பவர் தி.மு.கவில் கணக்குக் கேட்டவர் அல்ல. கணக்கே காட்டாதவர்.

-மு.சீதாராமன்.

Monday, February 4, 2019

வாவ் இவர் டிஜிட்டல் எம் எல் ஏ.

பள்ளி நண்பர்களுடான அரசியல் கலந்துரையாடல்கள் எப்போதுமே பெரும் களேபரத்தில் தான் முடிவடையும். அப்படியொரு நாள் பள்ளித் தோழர்களோடு விவாதித்துக் கொண்டிருந்த போது, கோபமடைந்த நண்பன் அருண்குமார்,,, நீ அரசியல்ல பெரிய புடுங்கிண்ணா,,, நம்ம ஊரு ரோடையெல்லாம் பாருடா,,, உங்காளு தான எம் எல் ஏ. அவருகிட்ட சொல்லி போடச் சொல்லு பார்ப்போம் என்கிற சவாலோடு அன்றைய விவாதத்தை முடித்த  வைத்தான் வகுப்புத்தோழன் சென்ன ஐ.டி.கம்பெனியில் பணிபுரியன் என் ஆருயிர் நண்பன் கோ.அருண்குமார் B.E.

    என்னதான் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் எனக்கு நேரிடையாகவோ, நல்ல தொடர்புடன் அவரோடு இருப்பவனாகவே இருந்தாலும் கூட, மக்கள் பிரச்சனைய தனியொருவனாகக் கொண்டு சென்று, அதில் அவர் கவனம் ஈர்க்கப்படுகிற அளவிற்கு நான் ஒன்றும் மக்கள் பிரதிநிதியோ அல்லது கழகத்தில் பொறுப்பில் இருப்பவனோ கிடையாது. சாதாராண திமுக தொண்டன். அடிமட்டத் தொண்டன்.

  என்ன செய்வது, நண்பர்கள் நம் அரசியல் ஆர்வத்தை எள்ளிநகையாடிவிட்டார்களேயென்ற தாழ்வுமனப்பான்மையோடு தான் பலநாட்கள் இருந்தேன்.

   திடிரென ஒரு நாள் கடகடவென்று "குண்டும் குழியுமாகக் கிடக்கிற சாலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்களே சீரமைத்துத் தாருங்கள்" என்கிற ரீதியாக பொதுப்படையான  கடிநம் ஒன்றை எழுதினேன். நண்பர்களுக்கும், சொக்கநாதன்புத்தீர் இளைஞர்கள், யுவதிகள் பலருக்கும் அந்தக் கடிதம் வாட்ஸ் அப்பில் பரந்தது. கூடவே, சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்களின் வாட்ஸ் அப் எண்ணும் சேர்த்து, நம்முடைய சட்டமன்ற உறுப்பினருக்கு நமது ஊர் நலம் பெறுவதில் அக்கறைகொண்டு இந்தக் கடிதத்தை அனுப்பிடுங்கள் என்ற செய்தியும் கூடவே பறந்தது.

  எல்லோரும் அனுப்பினார்கள். அனுப்பியதில் பலருக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் போன் செய்து பேசியிருக்கிறார். அவர் பேசிய செய்தியை நண்பர்கள் சொல்கிற போது அவர் மீதான மதிப்பையும் அவரது செயல்பாட்டையும் பாராட்டியது கண்டு அந்த இடத்தில் ஒரு தி.மு.க காரனாக உள்ளம் மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

  சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கடந்த ஜன 13 ஆம் நடந்த தி மு க கிராமசபைக் கூட்டத்தில் எங்கள் ஊரில் பேசிய போது,  ரூபாய் முப்பது லட்சம் மதிப்பீட்டில் சொக்கநாதன்புத்தூரின் உட்புற சாலைகளுக்கு டென்டர் விடப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் சீக்கிரம் துவங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தார். அடடா!! யென்ன ஆச்சரியம் இது என்று வியந்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

   அதையெல்லாம் கடந்து, இன்று நான் மிகப்பெரிய மகிழ்ச்சியில் திகைத்து நிற்கிறேன். காரணம், சொக்கநாதன்புத்தூரின் உட்புற சாலைகள் சீரமைக்கப்படுவதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்களே நேரடியாக வந்து தொடங்கி வைத்திருக்கிறார்.

    சொக்கநாதன்புத்தூரின் பல்வேறு இடங்களில் படித்து நல்ல பணியில் இருக்கக் கூடிய இளைஞர் பெருமக்களும், சொக்கை மண்ணின் மைந்தர்கள் பலரும் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே அனுப்பிய கோரிக்கைக் கடிதத்திற்கு மதிப்பளித்து நிதி ஒதுக்கி சாலைகள் சீரமைப்புப் பணி துவங்குவதற்காக மக்கள் பணியாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்களுக்கு எனது முதல் கோடி நன்றிகள்.

  இந்தக் கடிதத்திற்கு உறுதுணையாக இருந்து, எதைப்பற்றியும் சிந்திக்காமல் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணுக்குப் பகிர்ந்த பல மண்ணின் மைந்தர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வராத நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதியில், வாட்ஸ் அப் கோரிக்கைக்கு செவி சாய்த்து செயலாற்றும் உங்கள் பணி மிகப்பெரிய பாராட்டுக்குரியது.

  சட்டமன்ற உறுப்பினரே உங்கள் பணி தொடரட்டும். உங்களின் மக்கள் பயணம் வெல்லட்டும்.

Monday, April 3, 2017

வரதட்சனை பற்றிய நீயா நானா வின் மீதான என் பார்வை

எவ்வளவோ பெண்கள் கல்வியிலே முன்னேறி,' வேலை வாய்ப்புகளில் முன்னேறி பெரும் இடத்தைப் பெற்று தவிர்க்க முடியாதவர்களாக வளர்ந்த பின்னும், இன்னும் அவர்களை அடிமை மனநிலையில் இருக்கச் செய்து கொண்டிருக்கத்தான் பலரும் விரும்புகிறார்கள் என்பதை வரதட்சனை குறித்த நீயா நானா விற்கு வருகிற விமர்சனங்களைப் பார்க்கிற போது தெரிகிறது.

   ஒருபெண் தன் தாயிடம் தானே, தனக்கு என்ன தேவை என்பதைக் கேட்க முடியும், அடுத்தவரிடமா கேட்க முடியும். திருவிழா விற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், அங்கே இருக்கிற விலையுயர்ந்த பொருட்களைப் பார்த்து, அப்பா எனக்கு இது தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதும், தன்னால் முடிந்தால் அப்பா வாங்கிக் கொடுப்பதும்,' முடியாதென்றால் அதை எடுத்துச் சொல்லி, வா,, உனக்கு அப்பா வேறு பொருள் வாங்கித் தருகிறேன் என்று வாங்கிக் கொடுப்பதும் தான் வழக்கம். எந்தத் தந்தையும் நீ அந்தப் பொருளை எப்படிக் கேட்கலாம் என அடிப்பதோ, நீ குழந்தைகளின் அவலம் எனத் தூக்கி எறிந்து விட்டு வருவதோ கிடையாது. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடக்கிற உரிமையும் கடமையும் சார்ந்த அன்புப் போராட்டம்.

   ஒரு இளம்பெண் ஹெலிகாப்டரில் வந்து மணமக்கள் இறங்க வேண்டும் என்று கேட்டதை, ஏதோ ஹெலிகாப்டரையே சீதனமாகக் கேட்டது போலச் சித்தரித்ததெல்லாம் ரொம்ப அநியாயம். தன்னுடைய திருமணம் இப்படி நடக்க வேண்டுமென ஒரு இளம்பெண் தன்னுடைய தாயிடம் சொல்வதில் என்னபெரிய குற்றத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று உண்மையிலே தெரியவில்லை. என் திருமணத்திற்கு இந்தக் கடையில் ஜவுளி எடுக்க வேண்டும், இப்படி ஒரு சமையல் மாஸ்டர் தான் சமையல் செய்ய வேண்டும், இந்த மேளம் தான் அடிக்க வேண்டும், இந்த கச்சேரிக்காரர்கள் தான் பாடல்கள் படிக்க வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவதில் எந்தவொரு குற்றமும் இல்லை.

     இதற்காகவெல்லாம் மீம் போட்டு கலாய்த்தவர்களில் பெண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் இல்லவே இல்லை. எல்லாம் இளைஞர்கள் தான். பெண்களின் எண்ணங்களின் மீதும் ஆசைகளின் மீதும் அடிக்கிற ஆணிகள் இந்த மீம்ஸ்கள். இவர்களுக்கு யார் இந்த உரிமை கொடுத்தது.

    ஒரு பெண் தன் பெற்றோரிடம் கேட்கிற தனிமனித உரிமைகளைக் கேட்பதைக் கூட மிகக் கொடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஏனெனில் இவர்கள் தான் தன்னைக் காதலிக்காத பெண் மீது ஆசிட் ஊத்துவோர்களாக, வெட்டிக் கொள்வோர்களாக,  தன் வீட்டுப் பெண்களின் உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ளாதவர்களாக சமூகத்தின் பெரும் கேள்விக்குறியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான இளைஞர்கள் திருந்த வேண்டும் அல்லது சட்டத்தின் மூலம் திருத்தப்பட வேண்டும்.

Wednesday, July 6, 2016

கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்குமா!!

கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா,,, நான் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற முழு ஆவலோடு தான் எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதிய "கச்சத்தீவு" புத்தகத்தை வாங்கினேன். முழுமையாகப் படித்தேன்.

   கச்சத்தீவு அம்மையார் இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கலைஞருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. 1974 ஜூன் மாதம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட உடனே,, ஜூலை மாதத்தின் முதல்வாரத்திலே  ஆட்சியில் இருக்கிற கலைஞர் மாநிலம் முழுவதும் நாற்பத்தைந்து இடங்களில் மாபெரும் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறார். தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய செழியன், முரசொலிமாறன், மாதவன் போன்றோர் நாடாளுமன்றத்தில் கடுமையாய் தங்களின் குரல்களை எழுப்புகின்றனர். கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர்.

   ஆனால் இந்திராகாந்தி அம்மையாரோ, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மாநில அரசைக் கேட்காமல்  தெற்காசிய நாடுகளில் தன்னைப் பெருந்தலைவராக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்துக்காக பக்கத்து நாடுகள் தன்னுடைய தலையசைவின் கீழ் வரவேண்டும் என்கிற அரசியல் ஆதாயத்துக்காக,  அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

   இது நடந்த சில மாதங்களிலேயே இந்நிராகாந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்தில் வருகிறது. அம்மையார் நெருக்கடி நிலையை அமல்படுத்துகிறார். நாடு முழுவதும் மாநிலக் கட்சிகள் ஒடுக்கப்பட்டன. கலைஞரின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. கச்சத்தீவுக்கான போராட்டங்கள் திசைமாற்றப்பட்டன.

  அதற்குப் பின்னால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைகின்றது. 1977 லே நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் அவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் இருந்த போதும் அவர் கச்சத் தீவு பற்றி வாயே திறக்கவில்லை. இதற்கிடையிலே தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கச்சத்தீவு விவகாரத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

  நிற்க.

   முதலில் கச்சத்தீவு இந்தியவுக்கும் இலங்கைக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை. இதில் இரண்டு நாட்டு அரசுகளும் தான் முடிவெடுக்க வேண்டும். அப்படியெடுக்கப்பட்ட முடிவுகள் கூட அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, நாடாளுமன்றங்களை புறந்தள்ளி தனியொருவரான இந்திராகாந்தி அம்மையாரின் முடிவோடு மட்டுமே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் தன்னுடைய கோரிக்கைகளை, கண்டனங்களை, எதிர்ப்புகளை மத்திய அரசிடம் எந்தளவிற்குக் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவிற்குக் கொண்டு சென்றார். ஆனால் இந்திராகாந்தி சில அரசியல் ஆதாயங்களுக்காக தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டு சர்வாதிகாரப்போக்கோடு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டார்.

   அதே நேரத்தில் நெருக்கடி நிலையையும் அமல்படுத்தி கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்துவிட்டார்.

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் இந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலும் கச்சத்தீவு விவகாரத்தில் கலைஞர் பின்வாங்கினார் என்றோ அமைதி காத்தோர் என்றோ  புத்தகத்தின் எந்த வரியிலுமே இல்லாததைக் கண்டு, நான் அறிந்து கொண்ட விசயம் "கலைஞர் என்றால் சிலருக்குக் கிள்ளுக்கீரையாகப்படுகிறார்" என்பது மட்டுந்தான்.

    ஒன்றே ஒன்றை மட்டும் இதைப்படித்து முடித்த போது, நான் உணர்ந்து கொண்டேன்,,, நெருக்கடி நிலை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தாலோ அல்லது மாநில அரசு இந்த விசயத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்ற ஒரு நிலை இருந்திருந்தாலோ இந்த விசயத்தில் கலைஞர் தன்னுடைய முழுவீரியத்தையும் காட்டியிருக்க முடியும்.

    மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தித் திணிப்பு விவகாரத்தில்  இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் வகுத்து விட்டு,, "நான் என்னாலானதைச் செய்து விட்டேன், மத்திய அரசு தன்னாலானதைச் செய்து கொள்ளட்டும்" என்றொரு முடிவை எடுத்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

   கச்சத்தீவைத் தாரைவார்த்து தமிழர்களுக்குத் துரோகம் செய்தது கலைஞர் அல்ல,, சர்வாதிகாரியாகச் செயல்பட்ட அம்மையார் இந்திராகாந்தி என்பது வார்த்தைஜாலம் அல்ல வரலாறு.