Tuesday, December 23, 2014

2014 ம் அரசியலும்

மோடி அலையின் சீற்றம் தொடங்கிய நேரத்தில் அலைகளுக்குப் பின்னால் அழகுற உதித்த கதிரவன் போல் உதயமான 2014 ஆம் ஆண்டில் மத்தியிலும் மாநிலத்திலும் எத்தனையோ பெரிய மாற்றங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கின்ற அளவிற்கு நிகழ்ந்து விட்டன என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2014 ஆம் ஆண்டு  வரலாற்றில் தன் திமிலை உயர்த்தி நிற்கப் போகிறது.

      அமைச்சர்கள் மாற்றம் அதிகாரிகள் மாற்றம் அதைத் தொடர்ந்து அவ்வப்போது சிறு சிறு நலத்திட்டங்கள் என்று மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த மாநில அரசில்  மாபெரும் இடி விழுந்த ஆண்டும் இந்த 2014 தான். அதே போல், எந்தவொரு இந்தியனும் எதிர்பாராத விதமாக மாபெரும் வெற்றியைக் குவித்து காங்கிரசைக் கசக்கிப் பிழிந்தெறிந்து ஆட்சிக் கட்டிலில் பா.ஜ.க அமர்ந்ததும் இந்த 2014 ல் தான்.
   
    நாடு முழுவதும் மோடி அலை வீசியிருந்தாலும், தமிழ்நாட்டில் அது செல்லாக்காசய்ப் போய், திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில் எந்த சுனாமியும்  கூட, தமிழகத்தைத் தாக்கி விட முடியாது என நிரூபிக்கப்பட்டதும் இந்த 2014 ல் தான். அதேபோல், நான் சார்ந்த திராவிட முன்னேற்ற கழகம் வரலாறு காணாத அளவில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்ததும் இந்த ஆண்டு தான். எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும், அதற்கெல்லாம் அஞ்சி நிற்காமல், தி.மு.க எனும் மாபெரும் இயக்கம் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி பீடு நடை போடுவதும் இதே ஆண்டில் தான்.

      பதினெட்டு ஆண்டுகளாக கன்னித் தீவு தொடர்கதை போல இழுத்துக் கொண்டே வந்த வழக்கை, சட்டென நிறுத்தி அதற்கென ஒரு தீர்ப்பையும் வழங்கி,  காழ்ப்புணர்ச்சியின் மொத்த அடையாளமான ஜெயலலிதாவிற்கு நூறு கோடி அபராதமும், நான்காண்டு சிறைத்தண்டனையும் விதித்து, ஒட்டுமொத்த இந்தியாவும் பார்வையையும் தன் வசம்  மதிப்பிற்குரிய நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா திருப்பியதும் இதே 2014 ல் தான். அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று என் போன்ற இளம் தலைமுறையினர் அ.தி.மு.க வினர் செய்த அட்டூழியங்களைக் கண்ணெதிரே கண்டு மனம் புழுங்கிக் கொண்டு நடந்து சென்ற காட்சிகளும் இதே ஆண்டில் தான் அரங்கேற்றப்பட்டன.

         தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதவியேற்ற முதல்வர்கள் பலர், இந்த தமிழ்நாட்டை நான் காப்பேற்றியே தீருவேன் என்கின்ற வெறியோடு பதவியேற்றதைப் பார்த்த மக்கள், ஒரு வித குதூகலிப்போடு முதல்வர்கள் பதவியேற்றதைப் பார்த்த மக்கள், நான் இந்தப் பதவியை நான் ஏற்கிறேனே, இதைக் காப்பாற்றி விடுவேனா என்கின்ற பதட்டத்தோடு பதவியேற்றவர்களைப் பார்த்த மக்கள்,  உலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஊழல் குற்றவாளி தண்டிக்கப்பட்டதற்காக அழுது கொண்டே ஒரு முதல்வரும், அதைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் பதிவியேற்றதை  மக்கள் பார்த்ததும் இதே 2014 ல் தான்.
      
        நம் சட்டமன்றத்தில் ஓமந்தூரார்,காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,  கலைஞர் என எத்தனையோ முதல்வர்களை முதல்வர் அரியணையில் அழகுறப் பார்த்த தமிழ்நாட்டு மக்கள் முதன் முறையாக "முதல்வர் நாற்காலி"யில் கூட உட்காரத் தயங்கிய முதல்வரைப் பார்த்திருக்கிறது என்றால் அது மிகையாது.
  
     முதல் முறையாக தமிழ்நாட்டு மக்கள், ஒரு மாநிலத்திற்கு இரண்டு முதல்வர்களைப் பாரத்ததும் இந்த ஆண்டு என்பதை மறக்க முடியாது. ஆம், ஒன்று தமிழக முதல்வர், இன்னொன்று மக்கள் முதல்வர், ஹாஹா,, தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு கொடுத்து வைத்த மக்கள்.

      மாநிலத்தில் தான் இத்தனை களேபரங்கள் நடந்து முடிந்து விட்டனவே. மத்தியில் என்ன நடந்தது என்பதை விட்டுவிட்டீர்களே என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை.

     ஊழலை ஒழித்தே தீருவேன். கருப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பேன். இந்திய நாட்டை வல்லரசு நாடாக்குவேன் என்றெல்லாம் பேசி விளம்பரங்கள் பல செய்து இந்தி நாட்டில் ஆட்சியைப் பிடித்து விட்டு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையே மறந்து விட்டு, இந்து மதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், இலங்கையிலே வாழந்த தமிழின மக்களைக் கொன்று குவித்து, இன்று வரை வடக்கு மாகாணத்திலே வாழக் கூடிய மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கும் ராஜபட்சேவை தன் பதவியேற்பு விழாவிற்கு சிம்மாசனம் கொடுத்து அமர வைக்கிறார். அதே ராஜபட்சேவை நீங்கள் தான் அடுத்த முறையும், இலங்கையின் அதிபராக வேண்டுமென்று வாழ்த்து தெரிவிக்கிறார். அது மட்டுமா, அரச மரியாதையோடு அழைத்து வந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் வேறு. இந்த இடத்தில் தான் காங்கிரசை எண்ணி, அடச்சே,,, இந்த காங்கிரஸ்கிரன் எவ்வளவோ தாவலடா,,, என்று தமிழ் மக்கள் எண்ணாமல் இல்லை.

     பகவத் கீதையை தேசிய நூல் என்கிறார். இந்தியை மீண்டும் திணிக்க வருகிறார் எதிர்ப்பு கிளம்பியவுடன் அப்படியே அமுக்கிக் கொள்கிறார்.

     மதச்சர்பற்ற நாட்டின் பிரமராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைக் கூலியாகச் செயல்படுகிறார்.  அடுத்து, பிரதமர் மோடி பதவியேற்ற நாள் முதல், இன்று வரை அதிக நாட்கள் எங்கே இருந்திருக்கிறார் என்றால் சத்தியமாக இந்தியாவில் இல்லை. நட்பு நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் என்கிறார். யாருடைய செலவில் என்றால் மூத்த தொழிலதிபர்களின் செலவில் சென்று, இந்திய நாட்டின் அரசு நிறுவனங்கள் எத்தனையோ நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்க, அயல் நாட்டு வங்கியில் இருந்து, இந்தியத் தொழிலபதிர்களுக்கு, குறிப்பாக அதானி குழுமத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகளைக் கடனாகப் பெற்றுக் கொடுத்து, அயல் நாட்டு வங்கிகளுக்கும், டாட்டா பிர்லாக்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதற்காககவா இந்திய நாட்டு மக்கள் இவரைப் பிரதமராக்கினார்கள்.

        இப்படி பலவித விசமத்தனமான செயல்களில் பிரதமர் ஈடுபட்டுக் கொண்டிருக்க, விளம்பரத்தை நம்பி வாக்களித்து இப்படி ஏமாந்து போய்விட்டோமே என்று புலம்பத் தொடங்கி விட்டார்கள்.

         இந்த நிலையில், இனி வரக்கூடிய ஆண்டாவது யாவருக்கும் நலம் பயக்கும் ஆண்டாக அமையட்டும் என்கின்ற வாழ்த்துக்களோடு, விளம்பரமிருந்தால் போதும், இந்திய நாட்டின் பிரதமராகக் கூட ஆகலாம் எனும் எண்ணத்தை ஈடேற்றிக் காட்டிய பிரதமர் மோடி இனியாவது, இந்துத்துவா கொள்கைகளை விட்டு விட்டு, இந்தியத்துவா கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்ற  முன்மொழிதலோடு தொடர்கிறேன்.

   நன்றி!!

Friday, December 19, 2014

2014 ஓர் சிறப்புப் பார்வை-1

இனிமையான இந்த 2014 ஆம் ஆண்டினை,  அத்தனையும் கடித்துச் சுவைத்து சக்கையைத் துப்பி விட்ட கரும்பைப் போன்று,  ருசித்து விட்டு, அடடா, இந்த அடிப்பகுதி எவ்வளவு இனிமையா இருந்ததே, அதை இன்னும் கொஞ்சம் சுவைத்திருக்கலாமே என்று நாம் எண்ணக் கூடிய நேரம் வந்து விட்டது. ஆம், 2014 ஆம் ஆண்டின் இறுதி நாட்களைக் கடந்து விட்டு 2015 ன் நாட்கள் எப்படியிருக்குமென எண்ணிக் கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்களில் இந்த ஆண்டில் இந்த ஆண்டில் நடந்த அத்துனை நன்மைகள், தீமைகள், கொடுமைகள், இகழ்ச்சிகள், புகழ்ச்சிகள் என அத்துனையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, அடுத்த ஆண்டில் நம்முடைய இலக்கு என்ன என்பதை ஒவ்வொருவரும் இப்போது நிர்ணயிக்கத் தொடங்கி விடுவர் என நான் நினைக்கிறேன், ஏனெனில் நான் என்னுடைய அடுத்த ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்து விட்டேன், நீங்களும் அப்படியே இருப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் என்னோடு இருக்கின்ற பலரும் ஒத்த கருத்துடையோர் என்பதால், அப்படித்தான் நீங்களும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆகவே, நடந்தவைகளை நினைவில் வைத்துக் கொண்டு, நடக்கப் போகிறவற்றைச் சிந்தையில் உதிக்கச் செய்து வெற்றி நடைபோட்டு வலம் வர, முதலில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    சரி,  அடுத்த ஆண்டுக்குத் தான் போகப் போகிறோமே, இதை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டுப் போய் விடுவோம் என்றில்லாமல், இந்த ஆண்டில் அப்படியென்ன அளப்பரிய சாதனை இந்த நாட்டில் நடந்திருக்கிறது என்று நாம் ஒவ்வொருவருமே திரும்பிப் பார்க்க வேண்டுமெனக் கருதுகிறேன். அதனாலேயே 2014 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகள் என்ன? அப்படியென்ன மாற்றத்தை இந்த ஆண்டு நமக்குத் தந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

        2014 என்றதுமே எனக்கு முதலில் நினைவில் வருவது என் அன்பு அண்ணன் டான் அசோக் அவர்கள் தான். ஏனெனில் நான் 2014 ன் தொடக்கத்தின் போது, எழுதிய கட்டுரையில் " தம்பி நீ இந்த ஆண்டு மிக அழகாக எழுதவும் தொடங்கி விட்டாய், சூப்பர், வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார். அது தான் என் மனதை மிகக் கவர்ந்த 2014 ன் முதல் வாழ்த்தாகவே அமைந்தது. அந்த டான் அசோக் அண்ணன், இன்றைக்கு நடிகர் விமல் நடித்துக் கொண்டிருக்கும் "மாப்ள சிங்கம்" படத்தின் கதையாசிரியராய் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறார் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

     2014 ன் தொடக்கக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த ஏக்கங்களில் ஒன்றான, "இந்தாண்டாவது பேச ஒரு மேடை கிடைக்காதா" என்ற எனது ஏக்கத்தை தைப் பொங்கல் தினத்தன்று, என் ஆருயிர் அண்ணன் வி.பி.ஆர்.இளம்பரிதி, தி.கல்லுப்பட்டி அருகே உள்ள  ராயப்பாளையம் கிராமத்தில் வழக்கறிஞர் குமணன் அவர்களோடு இணைந்து, உறவா,, நட்பா,,, வாழ்வில் சிறந்தது எது? என்ற தலைப்பில் நட்பை நான் எடுத்துக் கொண்டு என் வாழ்வில் முதன் முதலில் பட்டிமன்றம் பேசியது, இரண்டாம் ஹிட். அதில் அண்ணன் வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்களுக்குக் நன்றி சொல்ல கோடி கடமைப்பட்டுள்ளேன்.

     அடுத்து, இராசபாளையத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என் அன்பு அண்ணன் ஸ்டார் செ.வேல்முருகன் அவர்களுக்குப் பெரிதும் நன்றி சொல்லி அகமகிழ்ந்தேன்.

   பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் என் அன்பு அண்ணன் சிவகிரி விஜய் பிரவீன் அவர்களின் திருமணம் சகோதரி கனிமொழி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அத்திருமணத்திற்கு முகநூல் நண்பர்களுக்கு அண்ணன் அழைப்பிதழ் கொடுக்கனும்டா தம்பி, அதை நீ பாத்துக்கோ என்று ஒருநாள் போன் செய்து சொல்லி விட்டு, அடுத்து, எல்லார் பெயரையும் பத்திரிக்கையில போட்டேன்டா தம்பி, உன் பேரை போட்டு என்ன பொறுப்பு போடனு தெரியல, அதனால "பேஸ்புக் சீத்தாராமன்" னு போட்ருக்கேன்டா தம்பி , என்றார். அந்த நொடி நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே,, அடடடா!! அதைச் சொல்ல வார்த்தை இல்லை அந்தகளவுக்கு எனக்கு மகிழ்ச்சி, ஏனெனில் முதன் முதலில் என் பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழி என்கின்ற போது சொல்லவா வேண்டும். அத்திருமணத்திற்கு இணையதளம் சார்பாக, அண்ணன்கள் வைரமுத்து, தம்பி பிரபு, அமர்நாத் மற்றும் ஆசைத்தம்பி அவர்களின் சகோதரர் வைரம் ஆகிஓரும் முத்துகணேஷ், நாகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

          மார்ச்சில் தான் திருச்சி மாநாடு துவங்கிவிட்டதே. சொல்லவா வேண்டும் இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது. ஆமாம், அய்யா வி.பி.ஆர். அவர்கள் மாநாட்டுக்குச் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே, எங்கள் அய்யா வி.பி.ஆர் அவர்கள் என் அம்மாவிடம் போன் செய்து, யம்மா,, உங்க பையனை என் கூட அனுப்பிருங்கம்மா" னு சொல்லிக் கூப்பிட்டு, மாநாட்டிற்கு அவரோடே சென்று, மதுரையிலே அவரோடு சென்ற பத்துக்கு மேலான வாகனங்களில் வந்த கழக உடன்பிறப்புக்களுக்கு உணவு பரிமாறி, திருச்சியை அடைந்து, பின்னர் அவர்கள் இரவில் உணவருந்த ஏற்பாடு செய்ய வி.பி.ஆரோடு ஆட்டோவில் சென்று அழைந்து, ஒரு வழியாக அனைவரையும் இரவு உணவருந்தச் செய்தாயிற்று. அதற்கிடையிலேயே, முகநூல் நண்பர்களான தினகரன் அரசு, அபி அப்பா, நரசிம்மன், செந்தில் குமார், தளபதி பரணி மற்றும் பலரைச் சந்தித்து விட்டு, முகநூல் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சீருடையை வாங்கி வந்து விட்டேன்.

      இரவில் ஹோட்டல் அறைக்கு பரிதி அண்ண் வந்த போது தான், உடன் வந்த கன்னிகை ஸ்டாலின் அண்ணனை முதன் முதலில் சந்தித்தேன். அய்யா நான் அண்ணனோடு கிளம்புகிறேன், என்று சொல்லி விட்டு மாடிப்மடியில் இறங்கி வந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு குரல், பரிதி சார்,,, என்று யாரென்று பார்த்தால், சொக்கம்பட்டி முஸ்தபா அவர்கள், துபாயில் இருந்து மாநாட்டிற்கு வந்து கலந்து கொண்டு, வீட்டிற்குச் செல்லாமல் மீண்டும் துபாய் செல்கிறார்,, அடடடா,,, என்னே,, அவர் கழகப் பற்று என உடனிருந்த அனைவரும் வியந்தோம்.  இப்பொழுதெல்லாம் கடையநல்லூர் தென்காசிப் பக்கம் பேருந்தில் போகிற பொழுது, சொக்கம்பட்டி வந்தவுடன் முஸ்தபாவும் நினைவில் வந்து ஒட்டிக் கொள்கிறார். இரவில் திருச்சி முழுவதும் அண்ணனோடு சேர்ந்து போஸ்டர்களை ஒட்டி விட்டு, வழக்கறிஞர் மதிப்பிற்குரிய கண்சதாசன் அவர்கள் இருந்த அறைக்குத் தூங்கச் சென்றோம்.

       விடிந்து விட்டது. திருச்சி மாநகருக்குள் மதுரை இணையதளப்படை நுழைந்தது. எல்லோரும் சீருடை அணிந்து மாநாட்டுப் பந்தலுக்குள் நுழையத் தயாரானோம். ஒரு வேனை இடைமறித்து ஏறினோம். போகிற வழியில் வேன் இடைஞ்சலில் நின்றது. எங்கள் வேனை நோக்கி சைரன் சத்தம் பீறிட்டது. வருவது யாரென்று சன்னலின் வெளியே தலையை நீட்டிக் கொண்டிருந்தோம், விர்ரென விரைந்தது முதல் இரண்டு வாகனங்கள், மூன்றாவது காரில் தலைவரின் உதவியாளர் சண்முகநாதன், அவ்வளவு தான், வண்டிக்குள் கூச்சல் சத்தம் வெடித்துக் கிளறியது. நான்காவது காரில் வந்தார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.  அட்ராசக்கை. அப்போது உடலுக்குக் கிடைத்த உற்சாகம் தான், ஊர் வந்து சேர்கின்ற வரை கொஞ்சம் கூட குறையவே  இல்லை.

     மாநாட்டுப் பந்தலை அடைந்தோம். என்ன தான் நான் பிறந்தது முதலே, தி.மு.க காரனாக இருந்தாலும், என் வீட்டில் என்னை மாநாட்டுக்கெல்லாம் அழைத்துச் சென்றதில்லை. ஏனெனில், அவர்கள் செல்வதே சிரமமான காரியமாகத்தான் இருந்திருக்கும் என்பதால், அவர்கள் என்னை இதற்கு முன்னால் அழைத்துச் செல்லவில்லை என்றே எண்ணுகிறேன். ஆனால் என் தம்பி கூட, ஒன்றிரண்டு மாநாடுகளுக்குச் சென்றுவந்து விட்டான்.

     முதன் முதலில் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்த போது, முதலில் 90 அடி உயரக் கொடிக்கம்பம் ஒன்று வானாளவி நின்று கொண்டிருக்க, அதில் கருஞ்சிவப்பு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கலைஞர் ஏற்றி வைத்த கொடியல்லவா மிகக் கம்பீரமாகவே பறந்தது. அதன் கீழ் நின்று ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். தான் மட்டும் விடுவேனா யென்ன, நானும் எடுத்துக் கொண்டேன். அதைவிட ஒரு படி மேலே போய் நண்பர் எட்வின், ஒரு பெரியவரை போட்டோ எடுத்து, அவருக்கு ப்ரின்ட் செய்து அனுப்ப அவர் முகவரியையும் வாங்கிக் கொண்டது அவர் மீது எங்களை உச் கொட்ட வைத்து விட்டது மனது. எட்வின் அண்ணன் தன் மனைவிக்குப் புகைப்படங்களை அனுப்பிய போது, பக்கத்திலிருந்த வைரமுத்து அண்ணனும், பிரபு அண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு "நம்மளும் இருக்கோமே" என்று ஒருவருக்கொருவர் தங்கள் கண்களால் பேசிக் கொண்டதை, என் கண்களால் க்ளிக் செய்து விட்டேன்.

      நாடாளுமன்றம் போலவே ஒரு பிரமிப்பான அமைப்பு, அதற்குள் நுழைந்தால் சட்டமன்றத்தின் அமைப்பு என்று ஒவ்வொரு நுணுக்கத்தையும் என் கண்களால் ரசித்துக் கொண்டே சென்றேன். இடையிலே ஒருவர் மறித்து நீங்கள்லாம் பேஸ்புக்கா,, வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்,, என்றார், யாரென்று கேட்டோம்,, புதுச்சேரி மாநில இளைஞரணி துணைச்செயலாளர் என்றார்,, கூட்டமாக சேர்ந்து அவருடன் ஒரு புகைப்படத்தைக் க்ளிக்கிக் கொண்டு உள் நுழைந்தோம்.

      நுழைந்தவுடன் அய்யா தென்றல் செல்வராஜ் அவர்களின் புன்னகை எங்களை வரவேற்றது. அவரோடும் க்ளிக்கிக் கொண்டு நகர்ந்தோம். இணையதள நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருந்தனர் அண்ணன் சேலம் நந்தா உட்பட. அனைவரோடும் ஒவ்வொரு சிறப்புப் பேச்சாளரின் பேச்சுக்கும் கூச்சலும் கும்மாளமுமாய் ரசித்துக் கொண்டிருந்தோம். வானவேடிக்கை முழங்கியது தளபதி பேசத்துவங்கினர்,, தளபதி பேச்ணு என்றவுடன்,, நான் அவர் பேச்சைக் கேட்கிறேனோ இல்லையோ,, அவல் கரங்களை மட்டும் ரசித்துப் பார்ப்பேன். வாள் வீசி விளையாடுகின்ற வீரனைப் போல,, பேசும்போது கைகளை வீசி விளையாடுவார் நம் தளபதி அதுவே என்னை அவரை ரசிக்கச் செய்தது.

        இதற்கிடையே மேடைக்கு முன் சென்று நானும் தம்பி பிரபு அண்ணனும் பட்டபாடு இருக்கிறதே,, அப்பப்பா,, சொல்லி மாளாது.

       தளபதி  பேசி முடித்தவுடன் கிளம்பி விட்டோம். நடந்து வந்து கொண்டிருக்கையிலே இடைமறித்தது ஒரு குரல் யாரென்று பார்த்தால்,, நம்ம ஐ பி எஸ் கணேஷ் அண்ணன். அவரோடு கொஞ்சநேரம் அளவளாவிக் கொண்டு இருந்து விட்டு,, எனக்கு மிகப்பிடித்த தலைவர் படங்களின் கட் அவுட்டுக்கு முன்னால் நின்று அங்கும் க்ளிக்கிக் கொண்டு, ஐ.பி.எஸ். கணேஷ் அண்ணன் விடைபெற்றார்.

       பிறகு நடந்தோம்,, நடந்தோம்,, நடந்து கொண்டே இருந்தோம்,, குறைந்தது ஒரு ஆறு கிலோமீட்டர்களாவது நடந்திருப்போம் நாங்கள் செல்கின்ற வாகனத்தை அடைய,, நடந்த போது தான் திரும்பிய திசையெல்லாம் ஜனத்திரள் பெருகி திருச்சி திக்குமுக்காடிக் கொண்டிருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.

Wednesday, November 26, 2014

சீமானும் வரலாறும்

   தமிழ்நாஜிக்களின் தலைவன் சீமான் பேசிய காணொளி ஒன்றைக் காணநேரிட்டது.
   அதிலே சீமான் பேசுகின்ற போது ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாஞப் பண்டிதர், வேலுநாச்சியார், கட்டபொம்மன், வீரன் அழகுமுத்து, தீரன் சின்னமலை ஆகியோர் எனது தமிழப்பாட்டன்கள் என்றும், அவர்களையெல்லாம் அந்தந்த சாதிகளிடம் இருந்து மீட்பது தான் எங்களுடைய முதல் பணி என்றும் பேசியிருந்தார்.
     முதலில் மேற்சொன்ன மாவீரர்களில் எத்தனை பேர் தமிழர்கள் என்பதை அறிந்து விட்டாவது, அவர் "என் தமிழ்ப்பாட்டன்கள்" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மாவீரன் அழகுமுத்துவின் வரலாற்றை படித்துப் பார்த்தவன் என்கின்ற முறையில், அவர் பற்றி இங்கே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
    மாவீரன் அழகுமுத்து விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த "யது குல"த்தைச் சார்ந்தவர். அவர்கள் கண்ணனையும், பெருமாளையும் தங்களின் வழிபாட்டுத் தெய்வங்களாக வணங்கி வந்தனர். பின்னர் விஜயநகரப் பேரரசு அழிந்த உடன், அங்கிருந்து  தங்களின் குடிகளை இடம்பெயர்த்துக் கொண்டு விஜயநகரப் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்கள் அனைவரும், தென்பகுதியை (தற்போதைய தென்னிந்தியா) நாடி வந்தவண்ணம் இருந்தனர்.  மாவீரன் அழகுமுத்து உட்பட.
       மதுரையின் பாண்டிய மன்னனின் கட்டுப்பாட்டிற்குள் இடம்புகுந்த மாவீரன் அழகுமுத்து, அவரின் சகோதரர் மற்றும் சகோதரியும், தென்காசி பகுதியில் ஆண்டுகொண்டிருந்த அழகர்முத்து என்பவரின், எல்லைக் காவலனாக மதுரை மன்னனால் அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னர் கழுகுமலையின் அரசவைக்கு உயர்வுபெற்றார். அதன்பின் "கட்டாளங்குளம்" எனும் ஊரில் ஒரு கோட்டை கட்டி அங்கே மன்னராக நியமிக்கப்பட்டார்.
   வடக்கே இருந்து வந்த மாவீரன் அழகுமுத்து, இங்கே வாழ்ந்து கொண்டிருந்த, கண்ணனையும் பெருமாளையும் வணங்குகின்ற எடையர் இன மக்களோடு, தான் வணங்கும் அதே தெய்வங்களைத் தான், இந்த மக்களும் வணங்குகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு தன்னையும் எடையரின மக்களோடு ஒப்புமைப்படுத்திக் கொண்டு அம்மக்களுக்கு காவலராகவும் வாழ்ந்து வீரதீர செயல்களைச் செய்து கொண்டிருந்த அழகுமுத்து, ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாகி மடிந்து போனார் என்பது வரலாறு.
    விஜயநகப் பேரரசின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த "யதுகுல" மக்களில் ஒருவரான "மாவீரன் அழகுமுத்து" தமிழப்பாட்டன் என்று சொல்லி, வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக்கும் சீமான் போன்றவர்களின் முகத்திரை கிழிக்கப் பட வேண்டுமென்தற்காகவே இதைப் பதிகிறேன்.
     இப்படி வரலாறு தெரியாமல்,  பிறப்பால் தமிழரல்லாதவர்களையெல்லாம், தமிழரென்றும், பிறப்பால் தமிழரானவர்களையெல்லாம் தமிழரல்லாதோர் என்றும் பேசிக் கொண்டிருக்கும்,  சீமானின் பேச்சையும் கேட்டு கை தட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும், உணர்ச்சிப் பிளம்பாய் வெடித்துக் கொண்டிருக்கும் "ஈழத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை" கொண்ட இளைஞர்கள் கூட்டம் தடம் மாறிச் செல்வதை நினைத்தால் வருத்தமாய்த் தான் உள்ளது.

Monday, November 17, 2014

அதென்ன 200 கோடி!!!

  ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி கடன் பெற்றதற்காக தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரனை  துவங்கியது. நல்ல விசயம் தான், விரைவில் நல்ல தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கிறோம்.

    இதுவரை 1.76 லட்சம் கோடி என்று குறிப்பிட்ட பல பத்திரிக்கைகள், இந்தக் குற்றச்சாட்டு ஊதப்பட்ட ஊத்தாமட்டி தான் என்பது பல்வேறு வகைகளில் நிரூபிக்க தயாராக இருக்கிறன்ற நிலையில், இப்போதெல்லாம் 1.76 ஐ விட்டுவிட்டு கோடிக்கணக்கில் ஊழல் என்று மட்டுமே குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது பின் வாங்கத்தொடங்கிவிட்டன பத்திரிக்கை தர்மங்கள்.

     சில பத்திரிக்கைகள் 1.76 பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டு, அந்தர்பல்டி அடித்து வெறும் 200 கோடி கடன் பெற்ற வழக்கைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். சரி அப்படி என்னதான் இந்த வழக்கில் நடந்திருக்கிறது என்று பார்த்தோமேயானால், அட, இவ்வளவுதானா இதற்குத்தானா இவ்வளவு களேபரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆமாம்,

  கலைஞர் டி.விக்கு 200 கோடி வாங்கியதை, எந்த இடத்திலும் ஜெ, போல் தலைகீழாய் நின்று நான் போட்ட கையெழுத்தே இது இல்லை, சுதாகரனின் திருமணச் செலவை சிவாஜியின் மகனே கவனித்துக் கொண்டார் என்றெல்லாம் பீலா விட்டு, வழக்கைத் திசை திருப்ப முயலவில்லை, தைரியமாகவேச் சொல்கிறோம் 200 கோடி வாங்கத்தான் செய்தோம் என்று. லஞ்சம் வாங்கிய எவராவது நான் வாங்கத்தான் செய்தேன் என்று வாதிடுவார்களா கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதையும் தாண்டி வாங்கிய 200 கோடி ரூபாய் பணத்தை வட்டியோடு சேர்த்து 214 கோடியாக திருப்பிச் செலுத்தியிருக்கிறது கலைஞர் டி.வி நிர்வாகம். லஞ்சம் பணம் என்றால் வட்டியோடு ஏன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இன்னொரு கேள்வியும் நீதியரசர் ஓ.பி.ஷைனியின் முன் வைக்கப்படுகிறது.

  அடுத்து, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, 200 கோடி வாங்கிய பணம் முறைப்படி பதிவு செய்யபட்டு, அதற்கான வரித் தொகையும் கட்டப்பட்டிருக்கின்ற நிலையில், அது எப்படி லஞ்சப் பணமாக முடியும், பித்தம் தெளியாத பைத்தியங்கள் கூட, லஞ்சப் பணத்தைப் பதிவு செய்து வாங்கமாட்டார்கள், பகுத்தறிவும் அறிவுத் தெளிவும் கொண்ட தி.மு.க வினரா, லஞ்சத்தை பதிவு செய்து வாங்கப் போகிறார்கள் என்ற கேள்வியிலேயே, இந்த வழக்கின் உறுதித்தன்மை சுக்குநூறாய்ச் சிதைந்து போகிறது.

    ஏற்கனவே, இந்த வழக்கில் வாதிட்ட ராம்ஜெத்மலானி போன்றவர்கள் , கனிமொழியை கலைஞரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மிகத் தெளிவான வாதங்களில் அதுவும் முக்கியமான ஒன்று.

    ஸ்வான் நிறுவனத்திடம் இருந்து பணம் கடன் வாங்குவதற்கு முன்னரே, கனிமொழி கலைஞர் டி.வி பங்குதாரரில் இருந்து விலகியிருக்கும் போது, அவர் எப்படி இந்த வழக்கில் குற்றவாளியாக முடியும் என்ற வாதத்திலே இதன் இந்த வழக்கின் இன்னொரு அடிநாதமும் சிதைந்து போகிறது.

   ஆக, இந்த வழக்கின் தீர்ப்பையும், 1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கின் தீர்ப்பையும் மிகுந்த ஆர்வத்துடனே தி.மு.க வினர் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

     ஊழல் நடந்ததா இல்லையா அரசுக்கு இழப்பு ஏற்பட்டதா இல்லையா என்பதையெல்லாம் கடந்து, இந்த வழக்கில் அதிக லாபம் அடைந்தவர்கள் ஊடகப் பெருச்சாளிகள் மட்டுமே.

    ஒரு மனிதனிடம் இருந்து, அரசுத்தொடர்புடைய இன்னொரு மனிதன் கடன் வாங்கக் கூடாது என்றும் எந்தச் சட்டத்திலுமே குறிக்கப்படாத போது, அப்படி வாங்கப்பட்ட கடன் லஞ்சம் என்று சொல்லி பொய்யான பரப்புரைகளைச் செய்து, தி.மு.கழகத்தை வீழ்த்த நினைக்கும் கருங்காகங்களுக்கும் ஓநாய்களுக்கும் தக்க சம்மட்டியடியாக இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர விரும்புகிறேன்.

   தி.மு.க எத்தனையோ குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு பீடு நடைபோட்டு வலம் வந்த இயக்கம் என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது