Saturday, September 27, 2014

ஊடகங்களும் மாணவர்களும்

சற்றேறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் அந்த நிகழ்ச்சியின்  காணொளியை இப்போது தான் பார்த்தேன். சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கலந்து கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி.

   இன்றைய இளம் மாணவ தலைமுறையினருக்கும் சமூக அக்கறையில் கவனம் செலுத்திக் கொண்டிருப்போரும் கலந்து கொண்டு விவாதித்த நிகழ்ச்சி.

  அதில் நான் உணர்ந்ததெல்லாம், இன்றைய மாணவர்கள் அரசியலை, அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களை, அரசியல்வாதிகளின் நிலையை, சமூகப் பிரச்னைகளை எல்லாம் ஊடகங்கள் மூலமாக மட்டுமே பார்க்கின்றனர் என்பது மிகத் தெளிவாய் விளங்கியது.

  ஊடகங்கள் எதையெல்லாம் தூக்கி நிறுத்துகிறதோ அது மட்டுமே அவர்களின் கண்களுக்குத் தெரிகிறது. டெல்லியில் நடந்த பாலியல் கொடுமையை ஊடகங்கள் தூக்கி நிறுத்திய போது, மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு உருவானதும், திருமங்கலத்தில் நடந்த அமில வீச்சு அதிகளவில் ஊடகங்கள் தூக்கி நிறுத்தாத காரணத்தால் அப்பிரச்னை மாணவர்கள் மத்தியில் கடலில் கரைத்த பெருங்காயம் போலவும் ஆனது.

  அதே போல், இலங்கைத் தமிழர் விவகாரமாகட்டும், ஊடகங்கள் எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களை பற்றி பேசுகிறார்களோ அப்போது மட்டுமே, அது பற்றி நம் நாட்டு மாணவர்கள் பேசுகிறார்கள்.

  ஆட்சி மையத்தில் எடுத்துக் கொண்டால், ஊடகங்கள் மோடியைத் தூக்கிக் கொண்டாடினால் இளம் தலைமுறையினரும் தூக்கிக் கொண்டாடுகிறோம். ஊடகங்கள் கலைஞரைத் தூற்றினால், அதே நேரத்தில் மாணவர்களும் தூற்றுகிறார்கள்.

   இப்படி பலதரப்பட்ட பிரச்னைகளை ஊடகங்கள் என்ன சொல்கிறார்களே அதைப் பின்பற்றியே நம் இளைய தலைமுறையினர் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

   இன்றைய இளம் தலைமுறையினர், இப்படி ஊடகங்கள் எதைச் சொன்னாலும் அதன்படியே செம்மறி ஆட்டுக் கூட்டம் போல், தலையாட்டிக் கொண்டே தான் சென்று கொண்டிருக்கின்றனர்.
அது அவர்களுடைய விருப்பம் நான் வேண்டாமென்று சொல்லவில்லை.

   ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னால் தான், நாம் அனைவருமே சமூகப் பிரச்னைகளை என்ன என்று பார்க்கவே தொடங்குகிறோம். அந்தத் தருவாயில் குறைந்தது நம்முடைய இளம்ஙதலைமுறையினர்ஙகல்லூரி கட்டத்தையாவது தொட்டிருக்கிறோம்.

  அந்தப் பருவத்தில் நமக்கு வகுப்பெடுக்க வரும் ஆசிரியர் என்ன தகுதியில் இருக்கிறார். அவரென்ன படித்திருக்கிறார். அவருடைய முழுமையான நிலைப்பாடு என்ன என்பதை எல்லாம் நம்முடைய மாணவ சமுதாயம் ஆராயத் தொடங்குகிறது.

  அதே வழியை, ஊடகங்கள் வழியாக மட்டுமே சமூகப் பிரச்னைகளைப் பார்க்கின்ற இளம் தலைமுறையினர், ஊடகங்கள் யார், அவர்களுடைய சிந்தனையென்ன, நோக்கமென்ன, முடிவென்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதன்பின் ஊடகங்கள் கூறுவதை இன்றைய இளம் தலைமுறையினர் நம்ப வேண்டும்.

  எடுத்துக்காட்டாக புதிய தலைமுறை தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டால், புதிய தலைமுறை என்று பெயரில் ஒரு சிறு புரட்சியை வைத்து, நடுநிலை ஊடகம் போல் தன்னைக் காட்டிக் கொள்ள முனைவதை வைத்து  மட்டுமே நாம் ஏமாறக் கூடாது. 

  புதிய தலைமுறை மோடியை தேர்தல் சமயத்தில் வெளிப்படையாக ஆதரித்தது. நம்மில் பலர் நம்பினோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இயக்குநர், பா.ஜ.க வின்  வேட்பாளர் மோடி போல, அவரும் ஒரு வேட்பாளர் என்பதனை எத்தனை பேர் அறிந்து வைத்திருந்தோம்.  ஆக, ஊடகங்கள் நம்மை எத்தனையோ விதங்களில் நம்முடைய இளம் தலைமுறையினர் பலரை தங்களுடைய பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

   ஊடகங்களை நம்புங்கள் வேண்டாமென்று நிச்சயம் சொல்லவில்லை. தயவு செய்து அவர்கள் யார் அவர்களுடைய நோக்கமென்ன, அவர்கள் சொல்வது சரி தானா! என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் பின், அவர்களின் வழியாக சமூகத்திற்கான பிரச்சனைகளைப் பாருங்கள்.

No comments:

Post a Comment