நம்முடைய நாடு பலதரப்பட்ட தொழில் வளங்களைக் கொண்ட நாடு. அந்தத் தொழில்களிலே நாட்டின் இறையாண்மையில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய தொழில் எது என்றால் விவசாயம் மட்டுமே. அதனால் தான் மற்ற தொழில்களுக்கு இல்லாத முன்னுரிமையும், மானியங்களும்,நிவாரணங்களும், அரசு உதவிகளும் விவசாயத்திற்கு கிடைக்கின்ற அளவிற்கு மற்ற தொழில்களுக்குக் கிடைப்பதில்லை.
மற்ற தொழில்களைப் போல் விவசாயம் ஒன்றும் சாதாரண விசயமல்ல. மண்ணைப் பொன் ஆக்குகின்ற ஒரு உன்னதமான தொழில். விவசாயத்தைத் தவிர்த்த மற்ற தொழில்களெல்லாம் மனிதர்களோடு போட்டி போடக்கூடிய ஒரு தொழில். ஆனால் விவசாயம் என்பது இயற்கையோடு மனிதன் போட்டி போடக்கூடிய தொழில். அதனால் தான் என்னவோ, பல விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு ஏதேனும் வேலைபார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போல.
முந்தைய காலங்களில் விவசாயம் என்பது தொழில் என்பதைத் தாண்டி, இதயப்பூர்வமாக வணங்கி விவசாயத்தை மக்கள் செய்து கொண்டிருந்தனர். ஆதலால் தான் நம்முடைய நாடு தொடக்க காலங்களில் விவசாயத்தில் செழுமையான நாடாக விளங்கியது என்பது வரலாறு. அந்த வரலாறு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது.
யானை கட்டி போரடித்த காலங்களையெல்லாம் உண்டு என்பது நமது சங்க இலக்கியங்கள் பலவற்றில் பல அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகளை பழைய திரைப்படங்களில் கூட காண்பித்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால் உள்ள கால கட்டங்களில் காளை மாடுகள் விவசாயத்தில் பெரும்பங்கு வகித்தன.
காளை மாடுகளெல்லாம் உழவுத் தொழிலுக்கும், வண்டி கட்டி சுமை சுமக்கவும் விவசாய உலகில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அறுவடை காலங்களில் எல்லாம் சிறு சிறு களங்களில் கூட கிட்டதட்ட 50க்கும் மேலானோர் வேலை செய்வார்கள்.
ஒருவர் நெற்கதிரை அடித்து நெல்மணிகளைப் பிரித்தால், இன்னொருவர் அதில் இருக்கும் தூசுகளை காற்றில் பறக்க விட்டு, தூசுகளாற்ற நெல் மணிகாக்குவார். அதையெல்லாம் பார்ப்பதற்கே மிக ரம்யமாக இருக்கும். அவ்வளவு அழகானது அறுவடைக் களங்கள். ஆனால் இப்போது,
காடுகளில்
கண்களால் வலைவீசித்
தேடுகிறேன்; காணவில்லை
அந்தக் களங்களை!!
விவசாயத்தில் முதன் முதலில் டிராக்டர் நுழைந்தது. அப்போது கூட விவாசாயத்தில் மனிதர்களின் உழைப்பு அதிகமாகத்தான் இருந்தது. அதற்குப் பின், அறுவடை எந்திரம் வந்தது. விவசாயத்திற்கு மனிதர்களின் தேவை சற்று குறைந்தது. இத்தோடு நின்றுவிடவில்லை.
உழவு கலக்குவதற்கும் அறுவடைக்கும் எந்திரம் கண்டுபிடித்த மனிதன், சும்மாவா இருந்தான், நாற்று நடுவதற்கும் களையெடுப்பதற்கும் எந்திரம் கண்டுபிடித்துவிட்டான். விவசாயத்தைச் செய்வதே மனிதர்கள் தான் என்ற நிலை மாறி, எந்திரங்களாலும் விவசாயம் செய்யலாம் என்ற நிலை வரத் தொடங்கிவிட்டது. அதிலும் பயிர்களின் பராமரிப்புப் பணிகளில் ஒன்றான களையை அகற்றும் பணிக்கு நூற்றுக் கணக்கான பெண்கள் செய்ய வேண்டிய வேலைகளை சிறு சிறு குப்பிகளில் உள்ள மருந்துகள் முடித்து விட்டுப் போய்விடுகின்றன. இதனால் பல பின்விளைவுகளை பின்வரும் காலங்களில் மண்ணும் மனிதனும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பது மறைக்கப்பட்ட உண்மை. இதுபோன்ற விசயங்களைச் சில நேரங்களில் செய்ய முடியாமலும், செய்யத் தெரியாமலும், செய்வதற்கு தன்னிடம் சரியான முதலீடு இல்லாமலும், தன்னுடைய பொன் விளையும் பூமியை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு விவசாயம் செய்வதையே விட்டுவிட்டு பல விவசாயிகள் சென்று கொண்டிருக்கின்றனர்.
அறிவியல்பூர்வமான முன்னேற்றங்கள் தான், இப்படிப் பல விவசாயிகளை அதிருப்தியடையச் செய்து கொண்டிருக்கிறதென்றால், விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் அதைவிட ஒருபடி மேல்.
இன்றைக்கு பல விவசாயிகள், தாங்கள் தான் மண்ணில் கிடந்து வேகாத வெயிலில் வெந்து பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது. நம்முடைய பிள்ளைகளாவது நிழலிலும் உடலுழைப்புமற்ற வேலைகளைத் தேடிக்கொண்டு சுகவாழ்வு வாழட்டும் என்றெண்ணி, தங்கள் பிள்ளைகளைப் "பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்பதற்கு இலக்கணமாய் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைத்துவிட்டனர். அவர்கள் வளர்ந்த சூழலின் காரணமாக அவர்கள் விவசாய நிலங்களைத் திரும்பிக் கூட பார்க்க மறுக்கின்றனர்.
முப்பாட்டனும், பாட்டனும், தாத்தனும், அப்பனும் பொன்னாய், பெண்ணாய், உயிராய், உணர்வாய், மதித்த தன்னை, அவர்களுடைய பேரன்கள் திரும்பிக் கூட பார்க்க மறுக்கிறார்கள் என்பதை எண்ணி, விவசாய நிலத்திற்கு வாய் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் கதறி அழுதிருக்கும்.
மாறிக்கொண்டே வரும் அறிவியல் முன்னேற்றங்களாலும், மாறிக்கொண்டே வரும் மனிதனின் மன இயல்புகளினாலும், இனிவரும் காலங்களில் விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் தவழப் போகிறதா அல்லது எந்த நிலைக்குச் செல்லப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
No comments:
Post a Comment