Thursday, January 30, 2014

மு.க.ஸ்டாலின்-நெருப்பாற்றில் பூத்த குறிஞ்சி மலர்

ஆமாம், ஸ்டாலின் எங்கே போனார்? கழக அரசு கலைக்கப்பட்டவுடன் தலைமறைவாகச் செயல்படலாமா என்ற எண்ணம் சிட்டிபாபு போன்றவர்களுக்கு ஏற்பட்டது. அது கூடாது. 'தேடப்படுகிறவர்கள் கைதாக வேண்டும்.சிறை செல்ல வேண்டும்' என்று கலைஞர் அறிவுரை கூறினார்.

ஆகவே ஸ்டாலின் வீட்டில் பதுங்கி இருக்கவும் இல்லை, தலைமறைவாகச் செல்லவும் இல்லை.

மதுராந்தகத்தில் "முரசே முழங்கு" நாடகம் நடைபெற ஏற்பாடாக இருந்தது. அந்த நாடகத்தில் ஸ்டாலின் கலைஞராக நடிப்பார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நாடகம் ஆரம்பமாக வேண்டும். ஸ்டாலினும் மற்ற நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.

'கழக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டது' என்ற சேதி எட்டியது. எனவே நாடகமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அன்று இரவு ஸ்டாலின் மதுராந்தகத்திலேயே தங்கிவிட்டார்.

அரசியல் மாணவர் ஒவ்வொருவரும் சிறைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியாக வேண்டும்.  ஓர் அரசியல்வாதி புடம்போடப்படும் உலைக்கூடமும் அதுதான். தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் அதிக மார்க் போடுவர். அந்தப் பரீட்சை எழுத ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. அவர் வீடு வந்து சேர்ந்த போது தான், அந்த அழைப்பு காத்திருப்பது தெரிந்தது.

அதற்கு முன்னரே தலைமைக் கழக செயலாளர்களான ஆற்காட்டார், நீலநாராயணன், சிட்டிபாபு, செ.கந்தப்பன், கோவை ராமநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுதும் கைதுப்படலம் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தச் செய்திகளெல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அந்தக் கைங்கரியத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று  ஏடுகளுக்குத் உத்தரவிடப்பட்டது. எங்கெங்கே யார் யார் கைது செய்துப்பட்டனர் என்ற தகவல் வாய்மொழி செய்தியாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தது.

"காவல்துறையினர் உன்னைத் தேடுகிறார்கள். சிறைக்கோட்டப் பயணத்துக்குத் தயாராய் இரு!" என்று வீடு வந்த ஸ்டாலினிடம் கலைஞர் தெரிவித்தார். அவரும் குளித்து உடைமாற்றி விட்டுத் தயாரானார்.

அப்போது ஸ்டாலின் 23 வயது இளைஞர். மணம் முடித்து ஐந்தே நாள்கள் தான் ஆகியிருந்தது. அவருக்கு எப்படி இருந்திருக்கும்?

"நான் பத்து நாள் சுற்றுப் பயணம் செல்வதாக நினைத்துக் கொள். அதற்குள் வந்துவிடுவேன்",  என்று துணைவியாருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார். வசந்தத்தைத் துய்க்க வேண்டிய வானம்பாடிகள்  பிரிந்திருப்பது என்பது எவ்வளவு வேதனையான செயல்?

  அப்பா, அம்மாவை வணங்கி ஸ்டாலின் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.

  "ஸ்டாலின் வந்து விட்டான், அவனை அழைத்துப் போகலாம்" என்று கலைஞரே காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தகவல் தந்தார்.

   ஸ்டாலின் கைதாகப் போகிறார் என்கிற தகவல், காட்டுத் தீயாகப் பரவியது. எனவே, கழகத் தொண்டர்கள் அணை உடைத்த வெள்ளமாக வந்து கொண்டிருந்தனர். கோபாலாபுரம் மக்கள் கடலானது.

  முற்றத்தில் பேராசிரியர், நாவலர், ப.உ.ச, அன்பில், மாதவன் ஆகியோர் குழுமியிருந்தனர். அவர்களிடமும் ஸ்டாலின் விடைபெற்றார். வாயிலுக்கு வந்தார். உணர்ச்சிப் புயலாக திரண்டிருந்த தொண்டர்கள், ஆவேச முழக்கங்கள் எழுப்பினர். ஸ்டாலினை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தை மறித்தனர்.வெற்றிகொண்டான் தலைமையில் வீறுகொண்ட ஆர்ப்பாட்டம் அலைமோதியது.

ஸ்டாலினை எளிதாகக் கைது செய்துவிட்டனர். ஆனால் அவ்வளவு சுலபமாக கோபாலாபுரம் கடந்து அவரை அழைத்துச் செல்ல முடியவில்லை. காவல்துறை வாகனம் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்த போது கோபாலபுரம் மக்களும் தேம்பித் தேம்பி கண்ணீர் சொரிந்தனர்.

-சோலை
மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்.

Wednesday, January 1, 2014

என் அரசியல் உதயம்

மன்னிக்கவும், இருந்தாலும் நான் இவ்வளவு பெரிய பதிவைத் தந்து உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடாது தான்.
கொடுக்க வேண்டிய சூழ்நிலை கொடுத்திருக்கிறேன்.

ஏனெனில் இவையெல்லாம் நீங்கள் எனக்குப் போட்ட பிச்சை(லைக்)களால் விளைந்தவை தானே.
ராஜபாளையத்தின் ஏதோ ஒரு மூலையிலே உள்ள உரக்கடையிலே மூடை தூக்கி வேலைபார்த்துக் கொண்டிருக்கும் என்னை இவ்வளவு சிந்திக்கத் தூண்டியவர்கள் நீங்கள் தானே..

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்து விடுங்கள்.

2013ஐ விட்டுச் செல்ல எனக்கு மனதே இல்லை. இதுவரை இருந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த 2013  என் வாழ்விலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக இருக்கிறது.

ஆமாம்,

ஏன் என்று கேட்கிறீர்களா?

சொல்கிறேன், கேளுங்கள்.

2013 ன் தொடக்கம் எனக்கு மாநில மாணவரணியின் துணைச் செயலாளர் அண்ணன் மகிழன் அவர்கள் விஜய்பிரவீன் அண்ணனின் மூலம் அறிமுகம் ஆனார்.

என் இல்ல விழாவாக என் தங்கையின் திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு, இந்த 23 வயது சிறுவன் அழைத்த குரலுக்கு எந்த வித எதிர்பார்ப்புமின்றி மதுரையில் இருந்து ஓடோடி வந்தார் மாணவரணி துணைச் செயலாளர் அண்ணன் மகிழன் அவர்கள். அதற்கு நான் விஜய் பிரவீன் அண்ணனுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் தங்கையின் திருமணத்திற்கு முதல் நாள் மாணவரணியின் இன்னொரு துணைத்தூண் அண்ணன் பூவை ஜெரால்ட் அவர்கள் போன் செய்து "தம்பி எனக்கு அழைப்பிதழ் கூட அனுப்பாம விட்டுட்டியேப்பா" என்று கேட்டு வாழ்த்துக்கள் தம்பி என்று சொன்ன போது என் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் கரை புரண்டோடியது.

2013 ல் தான் அண்ணன் க.மகிழன் அவர்கள் எனக்கு மிகப்பெரிய மாடமாளிகை ஒன்றை விருதுநகரிலே வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட எங்கள் மாவட்டச் செயலாளரின் வலதுகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணன் கே.ஜி.இராஜகுரு அவர்கள் தான் அந்த மாடமாளிகை.
ஆம் மகிழன் அண்ணன் என்னை இராஜகுரு அண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்தது, இந்த 2013 ல் தான்.

அடுத்து என் ஆருயிர் அண்ணன் வி.பி.ஆர்.இளம்பரிதி திருமணம். முதன்முதலில் என்னுடைய பெயரும் ஒரு திருமண அழைப்பிதழிலே கருப்பு சிவப்பு கரை போட்டு வந்தது என்றால் அது பரிதி அண்ணனின் திருமண விழா அழைப்பிதழ் தான்.

அதே விழாவிற்கு நம் இணையதள உடன்பிறப்புக்கள் வந்து சிறப்பித்ததும் இதே 2013 ல் தான்.

அதே விழாவில்அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை நேரில் கண்டதும் இதே 2013 ல் தான்.

சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் இல்லத் திருமண விழா.  நான் நேசிக்கும் ஆலயம், அண்ணா அறிவாலயத்திற்குள் முதன்முதலில் அழுக்குச் சட்டையோடு நுழைந்ததும், நான் அணுநொடியும் நேசிக்கும், என் உயிரோடு, உணர்வோடு, சிந்தனையோடு, செயலோடு, பேச்சோடு கலந்த கலைஞர்,

"தலைவர் கலைஞரை" முதன் முதலில் நேரில் கண்டதும் இதே 2013 ல் தான்.

அடுத்து மாணவரணியின் கலந்தாய்வுக் கூட்டம். அண்ணன் ஸ்டார் வேல்முருகன் அவர்களோடு மதியமே சென்று விட்டதால் அந்த கூட்டம் நடைபெற இருந்த  அரங்கத்தை ஒரு படமெடுத்து முகநூலில் விளையாட்டாக பதிந்தேன்.
கூட்டம் தொடங்கி மாணவரணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி அவர்கள் பேசத் தொடங்கினார். திடீரென இணையத்தைப் பற்றிப் பேசினார். பேசிவிட்டு இங்கே கூட ஒரு பையன் இருக்கிறான் என நினைக்கிறேன், அது யாரென்று தெரியவில்லை என்றார். நான் எழுந்து நின்று இருகரம் கூப்பி வணங்கினேன். தங்கம் தென்னரசு அண்ணன் பார்த்து அந்தா ஒரு பையன் எந்திரிக்கிறான் பாருங்க என்றார். மேடையிலே இருந்து மைக்கிலே கேட்கிறார். உன் பெயர் என்னப்பா என்று கேட்டு என்னை மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தினார். அந்த நிமிடத்தில் என்னை விட ஒருவர் மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியுமானால் அது என் தாயாகத் தான் இருக்க முடியும்.
ஏனென்றால் அதே கூட்டத்தின் ஒரு ஓரத்தில் என் தாயாரும் அமர்ந்திருந்தார்.
 
அடுத்து டெசோ ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் எங்கள் மாவட்டச் செயலாளரைச் சந்தித்து விட்டு, திடீரென எங்கள் மாணவரணி அமைப்பாளர் அண்ணன் இராஜகுரு அவர்கள் " வாடா தம்பி" என்று அழைத்துச் சென்று தங்கம் தென்னரசு அண்ணிடம் அறிமுகம் செய்தார் . அப்போது நான் அண்ணனிடம் முகநூல் குறித்துக் கூறினேன். மகிழ்ச்சியோடு "எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் தம்பி" என்று கூறினார். அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களிடம் நான் அறிமுகமானதும் இதே 2013ல் தான்.

ஆகஸ்ட் 8, அது எங்கள் அண்ணாச்சியின் பிறந்த நாள் விழா மட்டுமல்லாமல் தலைவர் கலைஞரின் ஆணையின்படி சேதுசமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாள்.
அண்ணாச்சியை வாழ்த்தியும் வாழ்த்துப் பெற்றும் ஆரப்பாட்டக் களத்திற்கு கேமராவோடு வந்தேன். புகைப்படமெல்லாம்  எடுத்து விட்டு தங்கம் தென்னரசு அண்ணனைச் சந்தித்து வணக்கம் அண்ணா என்று சொன்ன போது "தம்பி உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

செப் 1, புதுகையில் இணைய நண்பர்களின்  பயிற்சிப் பாசறைக் கூட்டம். உங்களில் பலரை நேரில் சந்திதுத நாள்.

அதே நாளில் அண்ணன் ஜெரால்ட் அவர்கள் எதிர்பாராத விதமாக என்னை ஐபிஎஸ் அண்ணனிடம் அழைத்துச் சென்று, அறிமுகம் செய்து விட்டு வெளியே வந்த போது என் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது.

செப் 13, என் வாழ்விலே முதன் முதலில் பிறந்த நாள் கொண்டாடிய நாள்.
எங்கள் மாவட்டச் செயலாளரிடமும் தங்கம் தென்னரசு அண்ணனிடமும் வாழ்த்துப் பெற வேண்டும் என்பதற்காகவே பிறந்த நாள் கொண்டாடினேன்.
அன்று தான் மல்லாங்கிணறு சென்று தங்கம் தென்னரசு அண்ணனோடு வெகுநேரம் உரையாடிவிட்டு, அண்ணன் தன் வீட்டு சாப்பாட்டு அறையில் என்னையும் என் நண்பனையும் அவரே சாப்பிட அழைத்துச் சென்றபோது சொர்க்கத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சி.

அடுத்து எங்கள் மாவட்டச் செயலாளரிடம் ஆசி வாங்கச் சென்றேன். அவர் " வாப்பா பேஸ்புக்கு பிறந்த நாளா" என்றார்.
அதே நாள் அண்ணன் இராஜகுரு அவர்களிடம் ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே என்று சொல்லி கலங்கிய போது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"நீ என் தம்பிடா ஏன் கலங்குற" என்று என்னை தோளோடு தோள் அணைத்தார்.

அடுத்து அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சப்போட்டி இளைஞரணி சார்பாக நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எதிர்பாரா விதமாக அண்ணன் ஐ பி எஸ் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் தம்பி வாடா நீ தான் எங்களோட இணையம் இல்ல இல்ல அதயம்னு கூட சொல்லலாம் என்று கே.ஜி.இராஜகுரு அண்ணனிடம் கூறிய போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
பின்பு எங்கள் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் அந்நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்த வழக்கறிஞர் நன்மாறன் அவர்கள் பேசும் போது "என் அன்பிற்கினிய முகநூல் நண்பர் அன்புத் தம்பி சீதாராமன் அவர்களே" என்று அழைத்த போது புல்லரித்துப்போனேன்.

பின்பு எங்கள் மாவட்ட செயலாளர் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்த என்னை விரல் நீட்டி அழைத்து "என்ன வேலை பாக்குற, எவ்ளோ சம்பளம் வாங்குற,சரி, விருதுநகர் மாவட்ட செய்தியும் பேஸ்புக்ல வரனுமே" என்ற போது அதைத்தானய்யா நான் பண்ணிட்டிருக்கேன், என்ற போது ஒரு அவருக்கே உரித்தான ஸ்டைலோடு புண்சிரிப்பு சிரித்து "சரிப்பா நல்லா பண்ணு" என்றார். அருகில் அண்ணன் தங்கம் தென்னரசு அமர்ந்திருந்தார்.
அன்று முகநூல் நண்பர் நாகராஜ், பிராபகரன் ஆகியோரைச் சந்திக்க நேர்ந்தது.

அடுத்து திருவில்லிபுத்தூரிலே வழக்கைச் சந்திக்க வந்த அணிச்செயலாளர் கடலூர் இள.புகழேந்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவர்கள் கழகத்தில் இணையும் விழாவிலே மாணவர்களோடு பேசும் போது விருதுநகர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தம்பி சீதாராமனைப் போல இணையத்தில் செயல்படுங்கள் என்றார்.

அடுத்து சேலத்திலே நந்தா அண்ணனின் உபசரிப்பு. ஏற்காட்டிலே எங்கள் மாவட்ட முன்னோடிகளும் முகநூல் நண்பர்களுமான அய்யா கோதண்டராமன் மற்றும் ஏ எஸ் கே இரமேஷ்குமார் ஆகியோருடனான சந்திப்பு.

இந்த ஆண்டின் கடைசியிலே நிகழ்ந்தது தான் என் வாழ்வின் வரலாற்றுச் சிறப்பு.
"மாண்புமிகு தளபதியாரோடு ஒரு புகைப்படம்".

2013 முடிந்து விட்டது.

குப்பைமேட்டிலே குப்பையோடு குப்பையாக கிடந்த சீதாராமனுக்கு 2013 லே அரசியல் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் சொல்லப்போனால் முகநூல் எனக்கு மிகப் பெரிய
"முகவரி" தந்திருக்கிறது.
ஆனால் இவையெல்லாமே நான் எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்வுகள் தான்.

அதே போல் "2014" யும் எதிர்பாராமலே தொடங்குகிறேன்.

இருந்தாலும் இந்த 2014 லாவது
" தலைவர் கலைஞரோடு ஒரு புகைப்படம் எடுத்து விடமாட்டேனா"

இந்த ஆண்டிலாவது "ஒரு முறையாவது பேச ஒரு மேடை கிடைக்குமா" என்பது போன்ற ஏக்கங்களோடே இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2014 இனிமை தரும் ஆண்டாக இருக்கட்டும்.