Friday, March 20, 2015

தாலி அறுப்புப் போராட்டம்

திராவிடர் கழகம் தாலி அறுப்புப் போராட்டமெனும் நிகழ்வை வருகின்ற ஏப்ரல் பதினான்காம் தேதி நடத்துமென்று தி.க தலைவர் மதிப்பிற்குரிய கி.வீரமணி அவர்கள் அறிவித்திருக்கிறார்.

தாலி அறுப்புப் போராட்டமென்றால் ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கின்ற பெண்களைப் பலவந்தமாகப் பிடித்து வந்து ஏதோ கொள்ளைக்காரனைப் போல கழுத்திலே கிடக்கும் தாலியை அறுத்துக் கொண்டு ஓடுவதன்று. நீங்கள் இவ்வளவு தூரம் கொதித்தெழ.

தன் மனைவியின் கழுத்திலே தானே கட்டிய தாலியை தன் மனைவியின் விருப்பத்தோடு பகுத்தறிவாளர்கள் நிரம்பிய சபையில் அனைவரின் சம்மதத்தோடும் கணவனே அந்தத் தாலியை அறுத்தெறிவது தான் தாலி அறுப்புப் போராட்டம். இதனால் அவர்கள் இருவருக்குள் இடையேயான அன்போ பாசமோ உறவில் உள்ள நெருக்கமோ என எதுவும் குண்டூசி முனையளவு கூட குறைந்து விடப்போவது கிடையாது.

இது அவரவர் சுய விருப்பம். தாலியை அறுக்கப் போகின்ற கணவனுக்கும் அதற்கு கழுத்தை நீட்டுகின்ற மனைவிக்கும் இடையேயான பிரச்னை. இதில் மற்றவர்கள் தலையிட்டுக் கருத்துக் கூற எவ்வித அதிகாரமும் கிடையாது. அவ்வளவு தான் தாலி அறுப்புப் போராட்டம்.

மிக முக்கியமான நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில் தாலி அறுப்புப் போராட்டத்தை தி.க தலைவர் கி.வீரமணி அறிவித்திருக்கிறார். அவர் அதை நடத்தப் போகிறார். இப்போராட்டத்தை தி.மு.க வோ அல்லது கலைஞரோ, மு.க.ஸ்டாலினோ அறிவிக்கவில்லை, நீங்கள் தி.மு.க வையும் கலைஞரையும் ஸ்டாலினையும் அவங்க பொன்டாட்டி தாலியை அறுக்கச் சொல்லுடா பாப்போம் என்று பேசுவதற்கு.

அப்படி நீங்கள் இந்த போராட்டத்திற்காக தி.மு.க வை விமர்சிக்க வேண்டுமென்றால், ஏன் தி.மு.க வோடு நிறுத்தி விட்டீர்கள், அ.தி.மு.க வை விமர்சியுங்கள், ம.தி.மு.க வின் வை.கோ வை கேள்வி கேளுங்கள். இன்னும் சொல்லப்போனால் லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்திரனைக் கூட நீங்கள் கேள்வி கேட்கத் தான் வேண்டும்.ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள அத்துனை திராவிடக் கட்சிகளுக்கும் தாய்க் கழகம் தி.க தானே.

அது கூட இருக்கட்டும். தாலி அறுப்புப் போராட்டம் கலாச்சாரத்திற்கே இழிவென இவ்வளவு கலாச்சாரம் பேசுகின்ற நீங்கள், முதலில் தாலி கட்டின பொன்டாட்டியை வைத்துக் காப்பாற்றக் கூட வக்கில்லாத ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கிய ரோபோவான இந்தியப் பிரதமர் மோடியைப் போய் முதலில் கேள்வி கேளுங்கள்.

Thursday, March 19, 2015

வினோத்ராயை என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டு இளைஞர் கூட்டமெல்லாம், அய்யோ,, என் நாட்டு வளங்களை எல்லாம் ராசாவும் தி.மு.க வும் சேர்ந்து திருடிச் சென்று விட்டது. இவர்கள் தமிழர்களென்பதால் எங்கள் நாட்டின் வெளி மாநிலங்களில் நாங்கள் செல்கின்ற போது, எங்களைத் தமிழர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கின்றது என்று புலம்பித் தள்ளினார்கள்.

அதற்குக் காரணமான 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விட்டதில் ஆ.ராசா 1.76 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டாரென்று இந்தியத் தணிக்கைத் துறை அதிகாரி வினோத்ராய் அறிவித்தது தொடர்பான வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை தகவல் தொழில்நுட்ப ஆணையம் ஏலம் விட்டதில் இருந்து வினோத் ராய் எவ்வளவு பெரிய பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் என்பது நிரூபணமாகி விட்டது.

இக்குற்றச்சாட்டால் ஆ.ராசாவையும் தி.மு.க வையும் தாண்டி எத்தனையோ தமிழ் இளைஞர்களின் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமான வினோத் ராய்க்கு, என்னைப் பொறுத்தவரை அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுத்தால் கூட அது குறைவு தான்.

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"