Monday, September 29, 2014

யார் குற்றவாளி??

   இன்று காலையில் பெயர் தெரியாத, புதிய நண்பர் ஒருவருடன்,  ஜெ, விற்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பேசிக் கொண்டிருக்கையில், ஜெ, இனி தேர்தலில் நிற்க முடியாது என்று சொல்லிய போது, அவர் கேட்டார் அப்போ ஆ.ராசா மட்டும் தேர்தலில் நின்றாரே என்றார்.

  எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இன்னும் நம் மக்கள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்குமான வித்தியாசத்தைக் கூட புரிந்து கொள்ளவில்லையே என வியந்தேன்.

  ஆனாலும் அவருடைய இந்நக் கேள்வி என்னை கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது.

   முதலில் நம் நாட்டில் எந்தக் குற்றவாளியாவது, குற்றம் சாட்டப்பட்ட உடனேயே தண்டனை அனுபவித்த வரலாறு உண்டா என எண்ணிய போது, யாருமே என் கண் முன்னால் வரவில்லை.

  ஆனால், குற்றம் சாட்டப்பட்ட உடனே, சிறையிலடைக்கப்பட்டதற்கு, ராசா வெளியில் இருந்தால் சாட்சிகளை மாற்றி விடுவார்,என்று காலணம் கூறியது நம் நாட்டு சி.பி.ஐ.  அப்படியென்றால் இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற வரை ஆ.ராசா சிறையில் தானே அடைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன்  தேர்தல் முடிந்த உடனேயே ஜாமீனில் விடுதலை செய்தார்கள்.

சரி,

  பதினெட்டு ஆண்டு காலம் ஜெ, வின் வழக்கு நடந்து கொண்டு தான் இருந்தது. எப்போதாவது ஜெ, சாட்சிகளை மாற்றி விடுவார் என்று சிறையில் அடைக்கப்பட்டதுண்டா!!
ஜெ, வெளியே இருந்து கொண்டு சாட்சிகளை மனமாற்றம் செய்யாமலா இருந்தார். இல்லை மனமாற்றம் செய்ததால் அவருக்குத் தண்டனை கிடைக்காமல் தான் போய்விட்டதா!!

   நம் நாட்டு மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு விட்டாலே, அவர் குற்றவாளி என நம்பி விடுவார்களென்பதை ஆரிய சக்திகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதனாலேயே ராசாவைக் குற்றவாளியாகத் தெரிவித்த உடனேயே, அவரைச் சிறையில் அடைத்து ஊழல் செய்ததால் தண்டனை பெற்றவர் போல காட்டிக் கொண்டனர். இறுதியில் தேர்தலில் வென்றனர். தங்கள் வேலை முடிந்து விட்டது, ஆ.ராசாவை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

   ஸ்பெக்ட்ரம் வழக்கின் முதல் படி, இங்கே தான் இருக்கிறது. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அப்போது யார் குற்றவாளி என்று உங்களுக்கு நன்கு புலப்படும்.

Saturday, September 27, 2014

ஊடகங்களும் மாணவர்களும்

சற்றேறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் அந்த நிகழ்ச்சியின்  காணொளியை இப்போது தான் பார்த்தேன். சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கலந்து கொண்ட விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி.

   இன்றைய இளம் மாணவ தலைமுறையினருக்கும் சமூக அக்கறையில் கவனம் செலுத்திக் கொண்டிருப்போரும் கலந்து கொண்டு விவாதித்த நிகழ்ச்சி.

  அதில் நான் உணர்ந்ததெல்லாம், இன்றைய மாணவர்கள் அரசியலை, அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களை, அரசியல்வாதிகளின் நிலையை, சமூகப் பிரச்னைகளை எல்லாம் ஊடகங்கள் மூலமாக மட்டுமே பார்க்கின்றனர் என்பது மிகத் தெளிவாய் விளங்கியது.

  ஊடகங்கள் எதையெல்லாம் தூக்கி நிறுத்துகிறதோ அது மட்டுமே அவர்களின் கண்களுக்குத் தெரிகிறது. டெல்லியில் நடந்த பாலியல் கொடுமையை ஊடகங்கள் தூக்கி நிறுத்திய போது, மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு உருவானதும், திருமங்கலத்தில் நடந்த அமில வீச்சு அதிகளவில் ஊடகங்கள் தூக்கி நிறுத்தாத காரணத்தால் அப்பிரச்னை மாணவர்கள் மத்தியில் கடலில் கரைத்த பெருங்காயம் போலவும் ஆனது.

  அதே போல், இலங்கைத் தமிழர் விவகாரமாகட்டும், ஊடகங்கள் எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களை பற்றி பேசுகிறார்களோ அப்போது மட்டுமே, அது பற்றி நம் நாட்டு மாணவர்கள் பேசுகிறார்கள்.

  ஆட்சி மையத்தில் எடுத்துக் கொண்டால், ஊடகங்கள் மோடியைத் தூக்கிக் கொண்டாடினால் இளம் தலைமுறையினரும் தூக்கிக் கொண்டாடுகிறோம். ஊடகங்கள் கலைஞரைத் தூற்றினால், அதே நேரத்தில் மாணவர்களும் தூற்றுகிறார்கள்.

   இப்படி பலதரப்பட்ட பிரச்னைகளை ஊடகங்கள் என்ன சொல்கிறார்களே அதைப் பின்பற்றியே நம் இளைய தலைமுறையினர் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

   இன்றைய இளம் தலைமுறையினர், இப்படி ஊடகங்கள் எதைச் சொன்னாலும் அதன்படியே செம்மறி ஆட்டுக் கூட்டம் போல், தலையாட்டிக் கொண்டே தான் சென்று கொண்டிருக்கின்றனர்.
அது அவர்களுடைய விருப்பம் நான் வேண்டாமென்று சொல்லவில்லை.

   ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னால் தான், நாம் அனைவருமே சமூகப் பிரச்னைகளை என்ன என்று பார்க்கவே தொடங்குகிறோம். அந்தத் தருவாயில் குறைந்தது நம்முடைய இளம்ஙதலைமுறையினர்ஙகல்லூரி கட்டத்தையாவது தொட்டிருக்கிறோம்.

  அந்தப் பருவத்தில் நமக்கு வகுப்பெடுக்க வரும் ஆசிரியர் என்ன தகுதியில் இருக்கிறார். அவரென்ன படித்திருக்கிறார். அவருடைய முழுமையான நிலைப்பாடு என்ன என்பதை எல்லாம் நம்முடைய மாணவ சமுதாயம் ஆராயத் தொடங்குகிறது.

  அதே வழியை, ஊடகங்கள் வழியாக மட்டுமே சமூகப் பிரச்னைகளைப் பார்க்கின்ற இளம் தலைமுறையினர், ஊடகங்கள் யார், அவர்களுடைய சிந்தனையென்ன, நோக்கமென்ன, முடிவென்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதன்பின் ஊடகங்கள் கூறுவதை இன்றைய இளம் தலைமுறையினர் நம்ப வேண்டும்.

  எடுத்துக்காட்டாக புதிய தலைமுறை தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டால், புதிய தலைமுறை என்று பெயரில் ஒரு சிறு புரட்சியை வைத்து, நடுநிலை ஊடகம் போல் தன்னைக் காட்டிக் கொள்ள முனைவதை வைத்து  மட்டுமே நாம் ஏமாறக் கூடாது. 

  புதிய தலைமுறை மோடியை தேர்தல் சமயத்தில் வெளிப்படையாக ஆதரித்தது. நம்மில் பலர் நம்பினோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இயக்குநர், பா.ஜ.க வின்  வேட்பாளர் மோடி போல, அவரும் ஒரு வேட்பாளர் என்பதனை எத்தனை பேர் அறிந்து வைத்திருந்தோம்.  ஆக, ஊடகங்கள் நம்மை எத்தனையோ விதங்களில் நம்முடைய இளம் தலைமுறையினர் பலரை தங்களுடைய பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

   ஊடகங்களை நம்புங்கள் வேண்டாமென்று நிச்சயம் சொல்லவில்லை. தயவு செய்து அவர்கள் யார் அவர்களுடைய நோக்கமென்ன, அவர்கள் சொல்வது சரி தானா! என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் பின், அவர்களின் வழியாக சமூகத்திற்கான பிரச்சனைகளைப் பாருங்கள்.

Tuesday, September 23, 2014

சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்கு- கலைஞர்

என்னுரை:
           "சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு" தலைப்பைக்
கேட்டவுடனேயே என் மனதில் ஒரு மகிழ்ச்சி பூகம்பம் வெடித்துக் கிளம்பியது.  ஏனென்றால் நான் நேசிக்கின்ற ஒரு தலைவரைப் பற்றிய கட்டுரைக்கு இப்படி ஒரு உன்னதமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தவருக்கு முதலில் எனது பாராட்டுக்களை, கலைஞரின் கடைகோடித் தொண்டர்களில் ஒருவனாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.ஏனெனில் இந்தத் தலைப்பு முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்வில் மேலும் ஒரு மணிமகுடம் . என் உயிரில் உணர்வில் உதிரத்தில் கலந்த தலைவர் கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத "சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு" என்கின்ற தலைப்பைக் கொடுத்து எழுதவைத்த இணையதள தி.மு.க வினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பகுத்தறிவுச் சுடரொளி தந்தை பெரியாரும், தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கோபால்சாமியும் ஏனைய எவ்வளவோ தலைவர்களும் புகழ்ந்து நூற்றுக்கணக்கான மேடைகளிலே தலைவர் கலைஞரினுடைய உழைப்பையும், அவருடைய பெருமையையும் புகழையும் எடுத்துரைவத்தவற்றோடு என்னுடைய இந்தக்கட்டுரையை ஒப்பிட்டுப் பார்த்தால் தூசுக்குச் சமானம் தான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எண்ணற்ற திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களெல்லாம்  புகழ்ந்துரைத்த தலைவர் கலைஞரைப் பற்றி இந்த எளிய கடைக்கோடித் தொண்டணான நான் ஒரு கட்டுரை எழுதுவது என்னுடைய வாழ்வில் ஒரு வைரக்கல். ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளித் தேர்விலே பெரியாரைப் பற்றியோ, பேரறிஞர் அண்ணாவைப் பற்றியோ ஒரு கட்டுரை எழுதினால் அந்த விடைத்தாளை  வண்ண  வண்ண "மை" களால் அலங்கரித்து, அடிக்கோடிட்டு, குறிப்புச் சட்டத்தை அலங்கரித்து மிக அழகாக, அந்த விடைத்தாளை திருத்தக்கூடிய ஆசிரியர்  பார்த்தவுடன் கண்களை குளிர்விக்கும் விதமாக எழுதுவார்கள். அப்படியே தான் எனக்கும இந்தக்கட்டுரையை எழுத ஆசை. ஆனால் பல்வேறு அறிவியல் முன்னேற்றங்களின் காரணாமாக அப்படியெல்லாம் அலங்கரிக்க வாய்ப்பில்லாமல் எழுத்துக்களை மட்டுமே உங்களிடம் சமர்ப்பிக்க முடிகிறது என்ற வருத்தமும் எனக்குக் கொஞ்சம் உண்டு. இந்தக்கட்டுரையைப் படிக்கப்போகும் அனைவரையும் இருகரங்கூப்பி வணங்கி என் கட்டுரையைத் தொடங்குகின்றேன்.

முன்னுரை:
                 சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு தலைவர் கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது. கலைஞர் மு.கருணாநிதி என்கின்ற பெயரை திராவிட இயக்க வரலாற்றிலும் சரி, தமிழக அரசியல் வரலாற்றிலும் சரி சற்று விலக்கிப் பார்த்தோமேயானால் அந்த வரலாறு உப்பில்லாப் பண்டமாகவே இருக்கும். தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசியலில் ஏறாத உயரங்களும் இல்லை. பார்க்காத பள்ளங்களும் இல்லை. சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து மாணவநேசனாய் தன்னுடைய சமூகப் பணியைத் தொடங்கி  இன்றைய தினம் முகநூலிலும் கால்பதிக்கக் கூடிய தலைவராய் தன் வாழ்க்கையைத் தொடர்கிறார். இவரை எந்த அளவிற்கு வாழ்த்தியவர்கள் உண்டோ அதே அளவிற்கு வசைபாடியவர்களும் உண்டு. ஆனால் இவரை வாழ்த்தியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவரை வசைபாடியவர்களில் பலருக்கு இயற்கை சீக்கிரமாகவே இடம் கொடுத்து அனுப்பிவிடுகிறது. இயற்கையை அடைந்தவர்களுக்கு இவர் இரங்கற்பா எழுதிக் கொண்டிருக்கிறார். ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் "இவரை வாழ்த்தியவர்கள் வீழ்ந்ததில்லை,வசைபாடியவர்கள் வாழ்ந்ததில்லை". கலைஞர் அவர்கள் தன்னுடைய பதினான்கு வயதிலே,

"பரணி பல பாடி
பாங்குடன் வாழ்ந்த
பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமிலாச்
சுயநலத்துச் சோதாக்கள்- சிலகூடி
வருணத்தை நிலைநாட்ட
வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே
மானங்காக்க மறத்தமிழா போராடு"

என்று தன்னுடைய முதல் கவிதையிலே போர்க்குண விதை விதைத்து 91 வயதைத் தொடும் போது தன் வாழ்வில் கோடிக்கணக்கான தமிழர்கள் தஞ்சம்புகும் மிகப்பெரிய ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறார். அப்பேர்பட்ட ஆலமரத்தை நீரூற்றி, உரமிட்டு வளர்த்தவர்களும் உண்டு, அந்த ஆலமரத்தை வெட்டி வீழ்த்த நினைத்தவர்களும் உண்டு,  அந்த ஆலமரத்தில் தஞ்சம் புகுந்த கருநாகப் பாம்புகளும் உண்டு. அங்கே கூடு கட்டி வாழ்ந்த பறவைகளும் உண்டு. அந்த ஆலமரத்திலே தன்னுடைய உணவைச் சேமித்து மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போன தேனீக்களும் உண்டு. கோடை வெயிலின் உச்சம் தாங்க முடியாமல் சிறிது நேரம் நிழலில் அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் சென்றவர்களும் உண்டு.

      சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக  அரசியலுக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த "அற்புத விளக்கு". கீழ்வருபவனவற்றில் அதுபற்றி மிக விளக்கமாய்க் காணலாம்.

சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு கலைஞரின் பிறப்பும் வளர்ப்பும்:

                நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை குடும்பத்தில் திரு.முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப்பிறந்தார். தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக் கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர்அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள், தனது 13 ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டார்.
தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப்பின், அவ்வமைப்பு மாநில
அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக
உருபெற்றது. ஒரு இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள்
மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர்
அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற
நிலையை ஏற்படுத்தினார். தலைவர் கலைஞரும்  அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலை களிலும் ஈடு பட்டனர்.

       தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளியிலே படித்துக்கொண்டிருந்த போது ஐந்தாம் வகுப்பை முடித்தவுடன், ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு தலைமை ஆசிரியர் இடம் தராத போது, தனக்குப் பள்ளியில் படிக்க இடம் தராததால் அருகிலே இருக்கின்ற தெப்பக்குளத்தில் குதிக்கச் சென்று தன்னுடைய வாழ்வின் முதல் போராட்டத்தைத் துவக்கினார். அப்போதே, தலைவர் கலைஞர் அவர்கள் அணைக்கப்பட்டிருந்தால், இந்நேரம் திராவிட இனம் கலைஞர் என்கின்ற வைடூரியத்தை நினைத்திருக்கக் கூடமாட்டார்கள். ஆக, பதிமூன்று வயதிலே சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்காய்த்தான் கலைஞர் திகழ்ந்தார்.

கலைஞர் சந்தித்த முதல் சூறாவளி:

            திராவிட இயக்கக் கருத்துக்களும் கோட்பாடுகளும் நாடகங்களாக மக்கள் மத்தியிலே  கொண்டு சேர்க்கப்பட்ட காலம் அது. அப்போது கலைஞர் நாடக நடிகராக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

1945 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டிலே கலைஞர் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்ற நாடகத்தில் "சிவகுரு" என்ற வேடத்தில்  மிகச் சிறப்பாக நடித்தார். நாடகம் முடிந்து கலைஞர், காஞ்சி கல்யாணசுந்தரம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மூவரும் மாநாட்டுப் பந்தலை விட்டு வெளியேறினர். அப்போது வெளியே குழுமியிருந்த காங்கிரஸ்காரர்கள் "அந்தா வாரான் சிவகுரு" என்று விரட்டிப்பிடித்து அடிக்கத் தொடங்கினர். காஞ்சி கல்யாணசுந்தரமும், பாரதிதாசனும் ஒதுங்கிக்கொண்டனர். கலைஞரை அடித்துச் சாக்கடையிலே தூக்கி வீசினார்கள் காங்கிரஸ்கார கயவர்கள்.

அப்போது அந்த வழியாக வந்த மூதாட்டி ஒருவர் கலைஞர் மீது படிந்திருந்த சாக்கடையைத் துடைத்து,அவர் யாரெனக் கேட்டறிந்து பெரியாரிடமும், அண்ணாவிடமும் கொண்டு போய்ச் சேர்த்தனர். அவர் உடலில் இருந்த காயங்களுக்குப் பெரியாரும் அண்ணாவும் மருந்து போட்டனர்.

      எதிரிகளால் சாக்கடையில் அடித்துத் தூக்கிவீசப்பட்ட பின்பும், மீண்டு வந்து தமிழகத்தின் அரசியல் சக்கரத்தை தன் கை விரலில் சுழற்றுகின்ற அளவிற்கு திறமை கொண்ட ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே.

மிசாவிற்கு அணையாத சூரியவிளக்கு:

                   1975 ஜூன் 26 ஆம் நாள் நெருக்கடி நிலைப் பிரகடனச் சட்டம் இந்தியா முழுவதும் பிரதமர் இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டது. தேசத்துக்கே ஆபத்து. அதனை தி.மு.கழகம் துணிச்சலோடு எதிர்த்தது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட அடுத்த நாளே( ஜூன் 27) தி.மு.க செயற்குழு கூடியது. இருபத்தி நான்கு மணிநேர இடைவெளிதான் என்றாலும், 75 உறுப்பினர்களில் 63 பேர் கலந்து கொண்டனர்.அவர்களுடன் இரவு முழுவதும் கலந்துரையாடினார். விடிவெள்ளி முளைக்கும் நேரம் அப்போது அவரே தீர்மானத்தை வடித்தெடுத்தார். நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அந்தத் தீர்பானம் வேதனையைத் தெரிவித்தது. மைய அரசு சற்று வியந்து தான் போனது.

1975  ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாள் தி.மு.க அரசு கவிழ்க்கப்பட்டது. மயான அமைதியில் தமிழகம். இந்தியாவே மௌனித்துத் தான் இருந்தது.அடுத்த சில நிமிடங்களில் முமலமைச்சருக்கான காரை கலைஞரே திருப்பி அனுப்பினார்.

பொதுக்கூட்டம் பேசி முடித்து வீட்டுக்கு வந்த ஆற்காட்டார் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் முதன்முதலில் மிசாவில் கைது செய்யப்பட்டவர் அவரே. அடுத்து கலைஞரின் வீட்டிற்கு காவல்துறை வருகிறது. கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்கள். சரி வாருங்கள் போகலாம் என்ற போது கலைஞருக்கே சற்று அதிர்ச்சி, கைது உங்களை இல்லை, உங்கள் மகன் ஸ்டாலினை என்றனர். அவன் இப்போது வீட்டில் இல்லை வந்தவுடன் நானே அனுப்பி வைக்கிறேன் என்கிறார். அப்போது ஸ்டாலின் மதுராந்தகத்தில் கலைஞர் வேடமிட்டு நாடகம் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆட்சி கலைக்கப்பட்ட செய்தியறிந்து நாடகத்தை நிறுத்தி விட்டுவீட்டுக்கு வந்தார் ஸ்டாலின். தம்பி உன்னை கைது செய்ய வருவார்கள் புறப்படத் தயாராயிரு என்று தன் மகனிடம் சொல்லிவிட்டு காவல் துறைக்கு போன் செய்து கைது செய்ய வரச்சொன்னார். அப்போது ஸ்டாலினுக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகியிருந்தது.

கைதுப்படலம் அத்தோடு நின்று விடவில்லை. தி.மு.க வின் முன்னணித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கலைஞர் பாளையங்கோட்டை சிறையிலே அடைக்கப்பட்டார். சிட்டிபாபு போன்ற கழகத்தின் செயல்வீரர்கள் சிறைச்சாலையிலே மாண்டனர். முரசொலி மாறனுக்கு முதுகு தண்டுவடத்திலே பாதிப்பு ஏற்பட்டது.

      இத்தனை துயரங்களையும் சந்தித்த கலைஞர் அரசியலில் இருந்து ஒதுங்கி ஓடிவிடவில்லை. எதிர்நீச்சல் போடுகிறார். 1989 ல் பதினான்கு ஆண்டு கால வனவாசத்திற்குப் பின்னால் மீண்டும் ஆட்சியமைக்கிறார் கலைஞர்.

பிரதமர் படுகொலையில் அணையாத சூரியவிளக்கு:

             பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்த கலைஞர், கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னால் 1989 ல் ஆட்சியைப் பிடிக்கிறார். ஜூன் 1990 ல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா விடுதலைப் புலிகள் அமைப்பினரால் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி, மத்திய சட்ட அமைச்சர் சுப்பிரமணியசாமி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்கிறார். 1991 ஜனவரியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி தி.மு.க ஆட்சிக் கலைக்கப்பட்டது. 1991 ஜூன் மாதம் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் தி.மு.க வி.பி.சிங் தலைமையிலான ஜனதா கட்சியுடனும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் உடன்பாடு கொண்டது. அ.தி.மு.க காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைபுரிந்த பிரதமர் ராஜீவ்காந்தி மே 20 ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.

      இப்படுகொலைக்கு தி.மு.க வும் ஒரு காரணம் எனக் கருதி, அ.தி.மு. காரர்களாலும் காங்கிரஸ்காரர்களாலும் தி.மு.க கொடிக்கம்பங்களும், தி.மு.க வின் முன்னனித் தலைவர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன. தி.மு.க தொண்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கலைஞர் போட்டியிட்ட துறைமுகம் தொகுதியைத்தவிர்த்து, அத்துனை தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்து படு தோல்வி அடைந்தது.

1993 ல் தி.மு.க வைத் தாங்கி நிற்கும் மிகப்பெரிய  தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட கோபால்சாமி, தி.மு.க வின் பலமிக்க மாவட்ட செயலாளர்களான மதுராந்தகம் ஆறுமுகம், பொன்முத்துராமலிங்கம், நெல்லை டி.ஏ.கே.லக்குமணன், கண்ணப்பன் உட்பட ஒன்பது மாவட்ட செயலாளர்களைத் தன் பக்கம் இழுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்றொரு கட்சியைத் துவக்குகிறார். கலைஞர் அசந்துவிடவில்லை.

1994 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க சொல்லிக் கொள்கின்ற அளவிற்கு வெற்றி பெறவில்லை. மீண்டும் வருகிறது 1996 சட்டமன்ற தேர்தல், இத்தனை பிளவுகளையும் துன்பியல் சம்பவங்களையும் சந்தித்த கலைஞர் துவண்டு விடவில்லை. நெஞ்சை தமிர்த்தி தடந்தோள் உயர்த்தி சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறார். அத்தோடு நின்றுவிடவில்லை. 1999 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வோடு கூட்டணி அமைத்து பெரும் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாயை பொறுப்பேற்க வைக்கிறார்.

நள்ளிரவுக் கைதுக்கு அணையாத சூரிய விளக்கு:

            கடந்த 2001 ல் கலைஞருக்கு வயது78. ஜூன் 30, என் தலைவர் கலைஞரின் வாழ்விலும், அவரின் தொண்டர்களின் வாழ்விலும் மிகப் பெரிய துக்கமான நாள் அது. நள்ளிரவிலே படுக்கையறையிலே தூங்கிக் கொண்டிருந்தவரை அடித்து இழுத்துச் சென்றார்கள். வீட்டிற்கு வெளியே நின்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கதறுகிறார்.உள்ளே முரசொலி மாறனும் அவர்தம் குடும்பத்தாரும் எவ்வளவோ தடுக்க முயல்கின்றனர் முடியவில்லை. காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் தலைமையிலான அணி கலைஞரின் படுக்கையறைக்குச் சென்று அவரைத் துன்புறுத்திக் கைது செய்கிறது. எதற்கென்றால் சென்னையிலே மேம்பாலம் கட்டியதிலே ஊழல் நடந்திருக்கிறது அதற்காக கைது செய்திருக்கிறோம் என்று சொல்லி நீதிபதி வீட்டிலே ஆஜர்படுத்தி விட்டு, சிறையிலே அடைக்கிறார்கள். ஆனால் அந்த வழக்கின் ஆவணம் எந்த எலிக்கு இரையானது என்பது கூட இதுவரை தெரியவில்லை.

      இந்த கைதுக்கு நாற்பது நாட்களுக்கு முன்னால் அவர் இந்த தமிழ்மாநிலத்தின் முதல்வராய் ஐந்தாண்டு காலம் மிகச்சிறப்பாய் செயல்பட்டு, சூரியனாய்ச் சுழன்று கொண்டிருந்த முதலமைச்சர்  என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

      ஆனால் அதற்கடுத்து நடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச்செய்தார். அத்தோடு நின்றுவிடவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த 2006 சட்டமன்ற தேர்தலிலும் அமோகவெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார் எங்கள் ஒப்பற்ற தலைவர் கலைஞர்.

சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு கலைஞரின் தனிச் சிறப்புகள்:

             முத்தமிழில் கலைஞர் வாய்திறந்தால் எட்டுத்திக்கும் தமிழ் மணக்கும். அவரின் கொள்கைக்கு தலையசைக்காதவர்கள் கூட அவருடைய செந்தமிழ்ப் பேச்சுக்கு கரவொலி எழுப்பிய காலங்களெல்லாம் உண்டு. ஒரு தலைவருக்கு மிக முக்கியமான தகுதி எது என்று சொன்னால் "தொண்டர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அந்த வகையில்  திராவிட இயக்கத்தில் தொண்டர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டு செயல்பட்ட தலைவர்களிலே மிக முக்கியமான தலைவர் கலைஞர் மட்டுமே. அடுத்து பத்திரிக்கை நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதம்  ரத்தினச் சுருக்கமான பதில்களாகவும், நறுக் சுருக்கென்றும் நகைச்சுவையாகவும் இருக்கும். தற்போது கூட  காங்கிரசில் இருந்து தி.மு.க விலகியபோது, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'காங்கிரசைப் பிடித்த சனி தொலைந்துவிட்டது என்று பேட்டியளித்திருந்தார். அதற்குப் பதிலளித்த தலைவர் கலைஞர் அவர்கள் "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரசில் இருந்து விலகி விட்டாரா என்ன?? என்று வினாயெழுப்பி அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தினார். அதன்பின் தேர்தல் முடிவு பற்றி நிருபர்கள் தி.மு.க வின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபோது அவரளித்த பதில் "வாக்குகள் குறைந்தது தான் காரணம்" என்று பதிலளித்து இவ்வளவு பெரிய தோல்வியிலும் இந்த மனிதரால் இவ்வளவு நகைச்சுவையாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க முடிகிறதோ என்று, அனைவரையும் ஆச்சர்யமூட்டினார்.இச்சீர்மிகு தமிழ்நாடும், சிறப்பு வாயந்த தமிழ்நாட்டு மக்களும் அவரால் அடைந்த பலன்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்கு இது தலைப்பல்ல என்பதால் இந்த விசயத்தை இப்படியே விட்டு விடுகிறேன்.

      அடுத்து, இந்தக்கட்டுரையை நான் எழுதி முடிக்கின்ற தருவாயில் தொண்ணூறு வயதை இன்பமாய் விழுங்கிவிட்டு தொண்ணூற்றியொரு வயதினை சுவைக்கத் தொடங்குகிறார். மாபெரும் உலகிற்கு இந்தக் கட்டுரையிலே சவால் ஒன்றை விடுக்கக் கடமைப்பட்டிருக்கறேன். உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்துச் சொல்லுங்கள், தொண்ணூறு வயதிலே அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்திலே மேடையிலே அமர்ந்து கொண்டு, கேட்கின்ற கோடிக்கணக்கான தொண்டர்களும், நிமிடத்திற்கு ஒரு முறை கரவொலி எழுப்பி ரசிக்கும் வண்ணம் "ஒன்றரை மணி நேரம்" இடைவிடாது பேசக்கூடிய ஒரு பேச்சாளரை யாராவது காட்ட முடியுமா ?

இன்னும் அவருடைய சிறப்புக்கள் தமிழக அரசியலிலும், திராவிட இயக்க வரலாற்றிலும் ஏராளம் உண்டு. இந்தக் கட்டுரையை படிப்பவர்களுக்கு அலுத்துப் போய்விடக்கூடாது என்பதற்காக  சுருக்கமாகவே "சூறாவளிக்கும் அணையாத சூரியவிளக்கு" கலைஞரின் சிறப்புக்களை முடிக்கிறேன்.

முடிவுரை:
              இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு என்னுடைய ஒரு சிறு கண்டனத்தைத் தெரிவித்து, இத்தனை சூறாவளியையும் தாண்டி சாதனை படைத்துக் கொண்டிருக்கக் கூடிய தலைவர் கலைஞர் சூறாவளிக்கும் அணையா சூரிய விளக்கல்ல, சூறாவளி என்ன சுனாமியே அடித்தாலும் அசைந்து கொடுக்காத சூரியன் என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன்.  91 வயதைத் தொட்ட கலைஞர், இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்களின் ஊதாரித் தனத்திற்கு இரையாகி மிகப் பெரிய தோல்வியை கலைஞரும் தி.மு.க வும் அடைந்திருக்கின்றது. மலை குலைந்தாலும் நிலை குலையாத தலைவர் கலைஞர் இருக்கின்ற வரை தி.மு.க எனும் மாபெரும் இயக்கம் எத்தனை பெரிய தோல்வியைச் சந்தித்திருந்தாலும் மீண்டு வந்துவிடும் என்கின்ற நம்பிக்கை என் போன்ற தொண்டர்களுக்கு நிரம்ப உண்டு. எதிர்நீச்சல் போட்டே வாழ்ந்த மனிதர் கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்பேர்பட்ட தலைவர் கலைஞரை பெற்றதற்கு தமிழினமும் திராவிட இயக்கமும் பெரும்பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

நான் தாய் தந்தையை பெரிதும் வணங்குபவன் இல்லை. ஏனெனில் நான் வளர்ந்து வந்த சூழல் அவ்வளவு கரடு முரடானது. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வணங்குகின்றேன். இந்த இணையத்தில் நுழைந்ததற்குப் பின்னால், தி.மு.க என்றாலே திரு.மு.கலைஞர் என்றெண்ணிக் கொண்டே வளர்ந்த நான், பல்வேறு வரலாறுகளையும் அர்ப்பணிப்புக்களையும், கொடுமைகளையும் தெரிந்து கொண்டு கலைஞரை ஒரு உன்னதமான தலைவராகப் பார்க்கிறேன். ஆதலால், இவர் தான் உனக்குத் தலைவர்  என்று எனக்கு கை காட்டிய என் தாய் தந்தையை கலைஞர் பிறந்த நன்னாளான ஜூன் 3 அன்று என் மனதார வணங்குகின்றேன்.

நான் மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் என் உயிரணுவில் இருந்து உருவாகும் ஒவ்வொரு உயிரையும் கருப்பு சிவப்புக் கொடி பிடித்து, நெஞ்சில் தி.மு.க காரன் எனும் முத்திரை குத்தி வளர்த்தெடுப்பேன் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்.

வாழ்க கலைஞர்!!
வளர்க கலைஞர் புகழ்!!
வெல்க தி.மு.க!!