Sunday, November 16, 2014

இவரல்லவோ தலைவர்!!

திராவிட இயக்கத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மதிப்பிற்குரிய அய்யா சின்னக்குத்தூசி அவர்கள், ஒப்புயர்வில்லா தலைவர் கலைஞரைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்பை இன்று எனக்குப் படிக்க நேர்ந்தது. பாதி தான் படித்திருக்கிறேன். பாதியிலே என் உள்ளம் சொக்கிப் போய் நிற்கின்றேன். அடடா!! இப்படி ஒரு திறமைமிக்க மனிதரையா நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் வியந்து போனேன். இதுவரை நான் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் படித்ததில் இருந்து, உங்களுக்கும் அந்த நிகழ்வுகளையெல்லாம் சொல்லாமல் இருக்க என் மனம் எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆதலால் அவற்றில் இருந்து சில முக்கியமான நிகழ்வுகளை என்னுடைய நடையிலே எழுதுகிறேன்.

   திருவாரூரிலே விவசாயிகள் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்ட போது, அதன் முழுப் பொறுப்பையும் அண்ணா கலைஞரிடம் கொடுக்க, கலைஞர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுற்றி, பல பொதுக்கூட்டங்களை நடத்தி, மாநட்டிற்கான நிதியைச் சேர்த்ததோடில்லாமல், பொதுக்கூட்டங்கள் முடிந்தவுடன் மாநாட்டுப் பந்தலுக்குச் சென்று, பசையும் போஸ்டருமாய், கம்பும் கொடியுமாய் வேட்டியை முழங்காலுக்கு மேல் கட்டி, மாநாட்டுக்கான அத்தனை வேலைகளையும் முன்னின்று செய்து, மாநாட்டையும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களிடம் சிறப்பாக நடத்திக்காட்டி, மாநாட்டுச் செலவு போக மீதமுள்ள கொஞ்சம் பணத்தையும் கழகத்திற்கு முதன்முதலில்  நிதியாகக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.

     திருச்சி மாவட்டம் அண்ணா காலத்திலேயே பல்வேறு அணிகளைக் கொண்ட மாவட்டமாக திகழ்ந்ததால், தொண்டர்கள் சோர்வுற்றிருந்ததைக் கண்டு, பலமுறை முக்கிய நிர்வாகிகள் அழைத்தும் அண்ணா திருச்சிக்கு வரவே மாட்டேன் என்று கூறிவிட,  பின் தன் தம்பியை அனுப்பி திருச்சியை சரிசெய்து வரச் சொல்லியிருக்கிறார் அண்ணா.
  
  களமிறங்கிய கலைஞர் ஒரே நாளில் திருச்சியில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கழகக் கொடியினை ஏற்றி, தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிளவுபட்டுக் கிடந்த அணிகளையும் ஒன்று சேர்த்திருக்கிறார்.

  திடீரென, நெசவாளர்களின் துயரம் தீர்க்க ஒவ்வொரு கழகத் தொண்டனும் கைத்தறித் துணிகளை தோலிலே சுமந்து வியாபாரம் செய்யச் செல்ல வேண்டுமென தீர்மானிக்க, யார் எங்கே செல்வது என்று திட்டமிட்டக் கொண்ணிருந்த போது, எந்த அண்ணா நான் திருச்சிக்கே போகமாட்டேன் என்று சொன்னாரே, அதே திருச்சியில் நான் கைத்தறி ஆடைகளைத் தோலிலே சுமந்து வியாபாரம் செய்கிறேன் என்று முதல் ஆளாய் தெரிவித்தார். அந்தளவிற்கு கலைஞர் திருச்சியை கழகத் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுறச் செய்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   அண்ணா காலத்தில் 1959 ல் என நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி நூறு வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. தி.மு.க சார்பில் நூறில் தொண்ணூறு வார்டுகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது பேரறிஞர்ப் பெருந்தகை அவர்கள், கலைஞரிடம் நாற்பது சீட்டுக்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் உனக்கு கணையாழி அணிவிக்கிறேன் என்று சபதமிட, நூறு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே முப்பத்தைந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற, கலைஞரின் அயராத உழைப்பால் தொண்ணூறு இடங்களில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் நாற்பத்தைந்து இடங்களில் வெற்றிபெற்றது., பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டு விழாவொன்றை நடத்தி, "என் தம்பி கருணாநிதிக்கு நானே கடை கடையாய்த் தேடி அழைந்து வாங்கி வந்த கணையாழியைப் பரிசளிக்கிறேன்" என்று சொல்லி கலைஞருக்கு கணையாழி ஒன்றை அணிவித்தார் அண்ணா.

    ஒருமுறை தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாற்றுக்கு அப்போதைய மத்திய அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி வருவதாக இருந்ததையொட்டி, அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.  மன்னை நாராயணசாமி அவர்களுடன் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் கருப்புக் கொடி காட்டத் தயராவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி அறிந்த காவல் துறையினர், தி.மு.க வினர் பலரையும் கைது செய்யத் தொடங்கினர். கருப்புக்கொடி காட்டவேண்டிய அந்த நாளன்று புகைவண்டியிலே சென்னையில் இருந்து கிளம்பிய கலைஞரை, தஞ்சை நிலையத்தில் கைது செய்து அழைத்துச் செல்ல, காவல்துறை தயாராக இருந்தது.

   இதை அறிந்த கலைஞர், புகைவண்டியை விட்டு இறங்கியதுமே தோலிலே போட்டிருந்த துண்டையெடுத்து, தலையிலே முண்டாசு கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக கலந்து காவல் துறையினரிடம் தப்பித்து, காட்டு வழியாக நடந்து சென்று, கழக உடன்பிறப்புக்கள் குழுமியிருந்த இடத்தை அவர் அடைந்த போது காவல் துறையினரே திகைத்துப் போயி நின்றிருக்கின்றனர். அவரை அத்துனை கூட்டத்திற்கும் நடுவில் கைது செய்தால் பிரச்னை பெரிதாகும் என்று கருத்தில் கொண்டு கைது செய்யாததால், திட்டமிட்டபடி ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.

       இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்துக் கிளம்பிய நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டார்.  அவரைப் பார்க்க அண்ணா வருகின்ற செய்தியறிந்த கலைஞர் மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தார். அண்ணாவும் கலைஞரைத் தனிமைச் சிறையிலே பார்த்து விட்டு அன்றிரவு நெல்லையிலே நடந்த பொதுக்கூட்டத்திலே பேசுகின்ற போது, "என் தம்பி அடைபட்டுக் கிடக்கின்ற பாளையங்கோட்டைச் சிறைச்சாலை எனக்கு யாத்திரை ஸ்தலம், எல்லோரும் தனிமைச் சிறையில் என் தம்பி வாடுவதாகக் குறிப்பிட்டனர். பக்தவத்சலம் அவ்வளவு கொடுமைப்படுத்தக் கூடியவரெல்லாம் அல்லர் அவனோடு பாம்புகளையும் பல்லிகளையும் குடியமர்த்திருக்கிறார் என்று பேசிவிட்டு, என் தம்பி நான் சென்றதும் அண்ணா என் மனையாளைப் பார்த்தீரா, என் செல்வங்கள் நலமாக இருக்கிறார்களா, என் இல்லத்திற்குச் சென்றீர்களா,என்று கேட்பானென்று தான் நினைத்தேன், அவன் நம் கழக நிலவரமென்ன என்று கேட்டறிந்த போது நானே பூரித்துப் போனேன்" என்று பேசினார்.

      எத்துனை சோதனைகளே வரினும் எடுத்த காரியத்தைஙவெற்றியோடு முடித்துக்காட்டுகின்ற கலைஞரின் திறத்தையும், எந்த நிலையிலும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமூட்டுகின்ற கலைஞர் இருக்கின்ற வரை, தி.மு. கழகத்தை எவராலும் அசைக்க முடியாது என்கின்ற செய்தியெல்லாம் நான் படித்த போது  கலைஞர் மீது, இதுவரை இருந்த அன்பையும் மரியாதையையும் விட இப்போது ஒரு நூறு மடங்கு கூடிவிட்டதாகக் கருதுகிறேன். இவ்வளவு திறமை மிக்க தலைவரையும் நேரிலே சந்தித்துப் பேசிவிட்டு வந்து விட்டோமே என்று என் மீதே நானே பொறாமைப்பட்டுக் கொள்ளவே தோன்றுகிறது.

   எத்தனை தலைவர்கள் இருந்தாலும் , கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் இதுவரை பிறக்கவேயில்லை என்பது நூறு சதவிகித உண்மை.

    

  

No comments:

Post a Comment