ஆவணி பிறந்து விட்டாலே, புரட்டாசி வரப்போகிறது, புதுத் துணி எடுக்க வேண்டும், வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள், அவர்களை உபசரிக்க வேண்டும், பலூன்கள் தொடங்கி அத்துனை விளையாட்டுப் பொருட்களும் நம் கண்ணால் வந்து நிற்கும், பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்தாண்டு திருவிழாவை சென்ற வருடத்தை விட கொஞ்சம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும், அதற்கெல்லாம் பணம் வேண்டும். ஆதலால் இந்த மாதம் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்ய வேண்டுமென்று ஆவணி மாதம் பிறந்த உடனேயே அலர்ட் ஆகி ஓடியாடி உழைக்கத் தொடங்கி விடுவர் எங்கள் ஊர் மக்கள்.
ஆவணியில் ஒரு ஐந்து நாள் திருவிழா தொடங்கியவுடன், ஐந்து நாள் நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு, கொஞ்சம் கூடுதலாகவே உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் உழைக்க ஆரம்பித்து விடுவர்.
புரட்டாசி பிறந்த உடனேயே மக்கள் முகங்களில் ஒரு புது மலர்ச்சியும் மகிழ்ச்சியும் கண் கூடாகத் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊர் மக்களுக்கு புரட்டாசி மாதமென்பது புத்துணர்ச்சி மாதமாக காணப்படும்.
புத்துணரச்சியின் வெளிப்பாடாக இன்று ஒன்றாம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிவிட்டது. விருதுநகர் மாவட்டம் ராசபாளையம் தாலுகா சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் முப்புடாதியம்மன் கோவில், மாரியம்மன் கோவில்களில், எங்கள் கிராமத்து மக்களின் பெருமையை பறைசாற்றுகின்ற விதமாக, புரட்டாசித் திருவிழா இனிதே துவங்கியது. எங்கள் கிராமம் முழுவதும் மின்னொளியில் அழகுற மின்னத் தொடங்கிவிட்டது. பட்டாடை உடுத்திய பருவ மங்கை போல், ஜொலிக்கத் தொடங்கிவிட்டது.
இன்று தொடங்கிய திருவிழா இன்னும், பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். எங்கள் சுற்று வட்டார பகுதி கிராமங்களிலேயே எங்கள் ஊர் திருவிழா சற்று விசேசமான திருவிழா தான் என்பதை நீங்கள் வந்து பார்த்து விட்டால் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.
கிட்டதட்ட பதிமூன்று சமுதாய மக்கள் முப்புடாதி அம்மன் கோவிலிலும், பிற சமுதாய மக்கள் மாரியம்மன் கோவிலும், இன்னொரு பிரிவினர் கீழூர் மாரியம்மன் கோவிலிலும், இன்னும் ஒரு முப்புடாதி அம்மன் கோவிலிலும் பல தரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து எவ்வித சச்சரவுகளுமே இல்லாமல், கொண்டாடுவது தான் எங்கள் ஊரின் மிகப்பெரிய சிறப்பு.
பதினொரு நாளிலும் இரவு தூக்கத்தை முழுவதும் தொலைத்து விட்டு, சுற்றிய காலங்களெல்லாம் உண்டு. அப்படி என்னப்பா உங்க ஊருல இருக்குனு கேக்குறிங்களா சொல்றேன்.
திருவிழா நடப்பது மொத்தம் நான்கு கோவில்கள். நான்கு கோவில்களிலுமே ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி கட்டாயம் உண்டு. ஒரு கோவிலில் நிகழ்ச்சி சலிப்படைத்து விட்டால், இன்னொரு கோவிலில் கரகாட்டம் பார்க்கப் போய்விடலாம். கரகாட்டம் சரியில்லை என்றால், அடுத்த கோவிலில் பட்டிமன்றம் பார்க்கச் சென்று விடலாம். இப்படியாக ஒவ்வொரு கோவிலும் மாறி மாறி நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, வீடு போய் சேர, அதிகாலை நான்கு மணியாகி விடும்.
முதல் ஐந்து நாட்கள் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாகவே இருக்கும். ஆறாம் நாள் முடிந்து ஏழாம் நாள் வரும். மூன்று பெரிய பூம்பல்லக்குகள் மலர்ச்சோலைகளாய் வீதிகளில் வலம் வரும். அதைக்காண கண்கள் கோடி வேண்டும்.
அந்த நாளே, விருந்தினர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். இராசபாளையத்திலிருந்தும் , சிவகிரியிலிருந்தும் சொக்கநாதன்புத்தூர் வரக்கூடிய பேருந்துகளில் கால் வைக்கக் கூட இடம் இருக்காது. அவ்வளவு நெரிசல் காணப்படும்.
எட்டாம் திருவிழா இன்னும் சிறப்பாக இருக்கும். தண்டியல் சப்பர வீதிவுலா. செண்டை மேளங்கள் காதைப் பிளக்கும். ஏதோ கேரளாவிலே போய் திருவிழா பார்க்கிறோமோ என்கின்ற உணர்வு ஏற்படும். அவ்வளவு ரம்மியமாக கேரளப் பெண்களின் நடனம் நம்மை அசத்தும். தெருக்கள் எல்லாம் மக்களாலும் பூக்களாலும் பூத்துக் குலுங்கும். பூவையர் யாவும், அதைச் சொல்லவே வேண்டாம்.
ஒன்பதாம் திருவிழா எங்கள் ஊர் மக்களுக்குத் தரும் மகிழ்ச்சியை வேறு எந்த விழாக்களாலும் கொடுக்க இயலாது.
காலையிலே தேரோட்டம், வீதிகளில் செண்டை மேளங்களும், பல வித கேரள வாத்தியங்களுடன் தேர் பவனி வரும். தேரை வரவேற்கவென்று கொள்வதா தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள என்று கொள்வதா என்கின்ற வகையில் "வருத்தப்படாத வாலிபர் சங்கங்களின்" பிளக்ஸ் போர்டுகள் அடிக்கொன்றும் பிடிக்கொன்றுமாய் கண்களை இதப்படுத்தும்.
வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள் யாவரும், தங்கள் அணிக்கான பளபளக்கும் சீருடையில் தேரை இழுப்பதும், தன் அழகை தன் உறவுக்காரப் இளைஞிகளுக்கும், தன்னோடு படித்த தோழிகளுக்கும் காட்ட நினைக்கின்ற விதம், ரசிப்புத் தன்மையுடையதாக இருக்கும். எல்லா கிராமங்களிலும் பத்து குழுக்கள் இருந்தால், எங்கள் ஊரில் குறைந்தது நூறு குழுக்களாவது தென்படும்.
வீதிகள் யாவும் விழாக்கோலத்தில் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் அழகு, அதைவிட அழகு.
மாலையில் முப்புடாதி அம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா. பக்தர்கள் யாவரும் பூக்குழி இறங்கி வருவர். அன்றைய இரவு, மிகமிக ரசிக்கக் கூடிய நிகழ்ச்சி அமையும். அப்படியொரு நாளில் எங்கள் ஊரில் திண்டுக்கல் லியோனி, ஈரோடு மகேஷ் போன்ற பலர் எங்கள் ஊர் மக்களை மகிழ்வித்துச் சென்றிருக்கின்றனர்.
அடுத்த நாள் சனிக்கிழமை, கறிவிருந்து கொடுத்து உறவினர்களை உபசரிக்க வேண்டுமென்று கறிக்கடைகள் திருநெல்வேலி அல்வாக் கடை கூட்டத்தை விட அதிக கூட்டத்தோடு காணப்படும்.
அன்று மாலை இரண்டு பெரிய கோயில்களிலும் கொடியிறக்கம் செய்யப்படும். அதன் பின் முளைப்பாரி வீதிவுலா தொடங்கும். முளைப்பாரியின் அழகை ரசிப்பதா இல்லை முளைப்பாரி கொண்டு வரும் பெண்ணின் அழகை ரசிப்பதா, இல்லை இரண்டையும் சேர்த்து ரசிப்பதா என்று என் போன்ற இளைஞர்கள் கிரங்கிக் கிடப்பர்.
இப்படியாக பதினொரு நாட்களும் எங்கள் ஊர் களை கட்டும்.
இத்தனையும் படித்து விட்டு, என்போல் விழாக்களை ரசிப்பவர்களாக, நீங்கள் இருந்தால், உங்கள் மனம் இந்தியா மேப்பில் எங்கள் ஊர் எங்கே இருக்கிறது என்று தேடத்துவங்குமென நினைக்கிறேன். அப்படி துவங்கினால் விருதுநகர் மாவட்டம் ராசபாளையம் தாலுகா சொக்கநாதன்புத்தூருக்கு வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி வாருங்கள். மனதை மகிழவிட்டுச் செல்லுங்கள்.
சொந்த ஊர்ப்பாசம் யாரைத் தான் விட்டது. என்னை மட்டும் விட்டு விடுமா யென்ன!!
வாருங்கள்!!!
மனமகிழக் கொண்டாடுவோம்!!
அன்போடு அழைக்கிறேன்!"
அதிகாலையில உப்புமா, கேசரி சூடா கிடைக்கும்
ReplyDeleteஆமா சொல்ல மறந்துட்டேன்.
ReplyDeleteநம்ம ஊர் திருவிழா பற்றி வருணிக்க வார்த்தைகளே இல்லை அண்ணா...
ReplyDelete