Monday, November 17, 2014

அதென்ன 200 கோடி!!!

  ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி கடன் பெற்றதற்காக தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரனை  துவங்கியது. நல்ல விசயம் தான், விரைவில் நல்ல தீர்ப்பு வருமென்று எதிர்பார்க்கிறோம்.

    இதுவரை 1.76 லட்சம் கோடி என்று குறிப்பிட்ட பல பத்திரிக்கைகள், இந்தக் குற்றச்சாட்டு ஊதப்பட்ட ஊத்தாமட்டி தான் என்பது பல்வேறு வகைகளில் நிரூபிக்க தயாராக இருக்கிறன்ற நிலையில், இப்போதெல்லாம் 1.76 ஐ விட்டுவிட்டு கோடிக்கணக்கில் ஊழல் என்று மட்டுமே குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது பின் வாங்கத்தொடங்கிவிட்டன பத்திரிக்கை தர்மங்கள்.

     சில பத்திரிக்கைகள் 1.76 பற்றி பேசுவதையே நிறுத்தி விட்டு, அந்தர்பல்டி அடித்து வெறும் 200 கோடி கடன் பெற்ற வழக்கைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். சரி அப்படி என்னதான் இந்த வழக்கில் நடந்திருக்கிறது என்று பார்த்தோமேயானால், அட, இவ்வளவுதானா இதற்குத்தானா இவ்வளவு களேபரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆமாம்,

  கலைஞர் டி.விக்கு 200 கோடி வாங்கியதை, எந்த இடத்திலும் ஜெ, போல் தலைகீழாய் நின்று நான் போட்ட கையெழுத்தே இது இல்லை, சுதாகரனின் திருமணச் செலவை சிவாஜியின் மகனே கவனித்துக் கொண்டார் என்றெல்லாம் பீலா விட்டு, வழக்கைத் திசை திருப்ப முயலவில்லை, தைரியமாகவேச் சொல்கிறோம் 200 கோடி வாங்கத்தான் செய்தோம் என்று. லஞ்சம் வாங்கிய எவராவது நான் வாங்கத்தான் செய்தேன் என்று வாதிடுவார்களா கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதையும் தாண்டி வாங்கிய 200 கோடி ரூபாய் பணத்தை வட்டியோடு சேர்த்து 214 கோடியாக திருப்பிச் செலுத்தியிருக்கிறது கலைஞர் டி.வி நிர்வாகம். லஞ்சம் பணம் என்றால் வட்டியோடு ஏன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இன்னொரு கேள்வியும் நீதியரசர் ஓ.பி.ஷைனியின் முன் வைக்கப்படுகிறது.

  அடுத்து, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, 200 கோடி வாங்கிய பணம் முறைப்படி பதிவு செய்யபட்டு, அதற்கான வரித் தொகையும் கட்டப்பட்டிருக்கின்ற நிலையில், அது எப்படி லஞ்சப் பணமாக முடியும், பித்தம் தெளியாத பைத்தியங்கள் கூட, லஞ்சப் பணத்தைப் பதிவு செய்து வாங்கமாட்டார்கள், பகுத்தறிவும் அறிவுத் தெளிவும் கொண்ட தி.மு.க வினரா, லஞ்சத்தை பதிவு செய்து வாங்கப் போகிறார்கள் என்ற கேள்வியிலேயே, இந்த வழக்கின் உறுதித்தன்மை சுக்குநூறாய்ச் சிதைந்து போகிறது.

    ஏற்கனவே, இந்த வழக்கில் வாதிட்ட ராம்ஜெத்மலானி போன்றவர்கள் , கனிமொழியை கலைஞரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மிகத் தெளிவான வாதங்களில் அதுவும் முக்கியமான ஒன்று.

    ஸ்வான் நிறுவனத்திடம் இருந்து பணம் கடன் வாங்குவதற்கு முன்னரே, கனிமொழி கலைஞர் டி.வி பங்குதாரரில் இருந்து விலகியிருக்கும் போது, அவர் எப்படி இந்த வழக்கில் குற்றவாளியாக முடியும் என்ற வாதத்திலே இதன் இந்த வழக்கின் இன்னொரு அடிநாதமும் சிதைந்து போகிறது.

   ஆக, இந்த வழக்கின் தீர்ப்பையும், 1.76 லட்சம் கோடி ஊழல் வழக்கின் தீர்ப்பையும் மிகுந்த ஆர்வத்துடனே தி.மு.க வினர் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

     ஊழல் நடந்ததா இல்லையா அரசுக்கு இழப்பு ஏற்பட்டதா இல்லையா என்பதையெல்லாம் கடந்து, இந்த வழக்கில் அதிக லாபம் அடைந்தவர்கள் ஊடகப் பெருச்சாளிகள் மட்டுமே.

    ஒரு மனிதனிடம் இருந்து, அரசுத்தொடர்புடைய இன்னொரு மனிதன் கடன் வாங்கக் கூடாது என்றும் எந்தச் சட்டத்திலுமே குறிக்கப்படாத போது, அப்படி வாங்கப்பட்ட கடன் லஞ்சம் என்று சொல்லி பொய்யான பரப்புரைகளைச் செய்து, தி.மு.கழகத்தை வீழ்த்த நினைக்கும் கருங்காகங்களுக்கும் ஓநாய்களுக்கும் தக்க சம்மட்டியடியாக இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர விரும்புகிறேன்.

   தி.மு.க எத்தனையோ குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு பீடு நடைபோட்டு வலம் வந்த இயக்கம் என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது

No comments:

Post a Comment