லோக்பால் குறித்து மிகப் பெரிய போராட்டங்களும், விவாதங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சட்டத்தினை சத்தமே இல்லாமல் 1960 களிலேயே நடைமுறையில் வைத்திருந்த இயக்கம் தி.மு.க. ஆம், 1960களில் தி.மு.க வின் ஒவ்வொரு மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக் கழக செயலாளர்களும் கூட தங்களது சொத்து மதிப்பினை தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் கோப்புகள் அனைத்தும் அப்போதைய பொருளாளர் எம்.ஜி.ஆரிடமே இருந்து வந்தது.
இது நடைமுறையில் இருந்த காரணத்தால் தி.மு.க 1971 ல், அமைச்சர் கே.ஏ.மதியழகனின் சகோதரர் சொத்து சேர்த்ததாக புகார் வர, திமுக வும், அதன் தலைவருமான கலைஞர் தலைமையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது கே.ஏ.மதியழகனுக்கு அமைச்சர் பட்டியலில் இடம் தர மறுக்கப்பட்டது என்பது வரலாறு.
அதே நேரத்தில் பொருளாளர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் பதவி கேட்க, திரைத்துறையை விட்டு விலகுங்கள், அமைச்சர் திரைத்துறையிலும் செயல்பட்டால் பல்வேறு விமர்சனங்கள் எழும் என கலைஞர் சொன்ன போது, சில சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்து, அமைச்சரவையில் தன்னை சேர்க்கும் படி கோரிக்கை வைக்கிறார் எம்.ஜி.ஆர். பின், அவரே, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாமென ஒதுங்கி விடுகிறார். இதில் தான் எம்.ஜி.ஆருக்கு கலைஞர் மீது, திமுக வின் மீது கொஞ்சம் பெரிய மனக்கசப்பு வருவதற்கான தொடக்கப்புள்ளி.
பின்னர் ஆட்சி பல்வேறு சங்கடங்களுக்கு மத்தியிலே புயலுக்கு நடுவே செலுத்தும் படகைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு நிதி விவகாரங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்தது தாங்காமல் மதுவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. அதற்கான காரணங்கள் குறித்தும் மதுவால் வருகிற தீங்குகள் குறித்தும், ஒரு குழு அமைத்து விழிப்புணர்வு செய்ய திட்டமிடப்படுகிறது. அதன் தலைவராக எம்ஜிஆரே பொறுப்பேற்று, அதில் இருந்த தர்மசங்கடமான காரணங்களையும், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எம்ஜிஆ.ர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தார்.
அந்த நேரத்தில் தான் "இந்திராகாந்தி அம்மையாரால் திமுக வைச் சிதைக்க மூன்று பேரை அந்த அம்மையார் திமுக வில் இருந்தே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற செய்தி ஜார்ஜ் பெர்னான்டஸ் மூலம் பரவலாகப் பரவுகிறது. எம்ஜிஆர் தான் திமுக காரர் தான் எனவும் கலைஞரின் ஆதரவாளர் தான் எனவும் நிரூபிக்க அதன் பின் நடந்த கூட்டங்களில் முயல்கிறார்.
அதன்பின் மதுரையில் நடந்த கூட்டமொன்றில் தன்னோடு நடிக்கிற முன்னணி நடிகை ஒருவருக்கு மேடையில் அமரவைக்க இடம் தரும்படிகோருகிறார். திமுக தலைமை இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளாது என்கிற பாணியில் திமுக வின் முன்னணியினரிடமிருந்து எதிர்ப்புக் குரல் வர, அதிலும் எம்ஜிஆர் மிகுந்த வெறுப்படைகிறார்.
பின்னர் தான் மத்திய அரசின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிய எலி கொஞ்சம் கொஞ்சம் வெளிவருவது எம்ஜிஆரின் பேச்சுக்களில் இருந்து வெளிப்படுவது கண்டு சிக்கிய எலி எம்ஜிஆர் தான் என்பதை பலர் உணர்கின்றனர்.
மத்திய அரசு எம்ஜிஆர் என்ற எலியைப் பிடிப்பதற்காக வைத்திருந்த ரொட்டித்துண்டு, அவர் அளவுக்கதிகமாய் திரைத்துரையில் வரி ஏய்ப்பு செய்து சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்களின் மீதான வருமான வரித்துறை சோதனை.
எந்த மதுவிலக்கு ரத்தை ஆதரித்துப் பேசினாரோ, அதே மதுவிலக்கு ரத்து குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். தி முக வில் பலரும் பல வகையில் உள்ளுக்குள்ளேயே புளங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மாவட்ட செயலாளர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் எம்ஜிஆர் அளவுக்கதிகமாய் சொத்து சேர்த்து அதைக்காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசோடு சேர்ந்து கள்ளநாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார் எம்ஜி ஆர் என்கிற ரீதியில் அந்தக் கடிதம் பத்திரிக்கைகளுக்கு பெருந்தீனியாகப் போய்ச் சேர்ந்தது.
பின்னர் அந்த மாவட்ட செயலாளரும் கூட கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்துக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தனிக்கதை.
திராவிட இயக்க அரசியலைத் துண்டாகப் பிளக்கக் காரணமான அந்த பெரும் சம்பவம் இனிதான் நடக்கிறது. ஆம், பெரும்பிரளயமாகக் கருதப்படும் நிகழ்வான "எம்.ஜி.ஆர் பொதுநிகழ்ச்சியில் கணக்குக் கேட்பு விவகாரம்" வெடிக்கிறது. கழகமும் தொண்டர்களும் கொதித்துப் போகின்றனர். கிளைச் செயலாளர் முதல் மாவட்டசெயலாளர் வரை, உள்ளாட்சியில் இருந்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது எண்ணிக்கையும் பல ஆயிரக்கணக்கில் அடங்கும். அவர்களுடைய சொத்துக் கணக்குகளையெல்லாம் திரட்டுவது சிரமமமான காரியம் என ஒருதரப்பும், இவர் எப்படி பொது இடத்தில் கட்டுப்பாட்டை மீறி கணக்கு கேட்கலாம்,கணக்கு கேட்க வேண்டிய இடம் பொது இடமல்ல,,, பொதுக்குழுவாகத் தானே இருக்க வேண்டும் என்றொரு தரப்பும்,, இவர் தானே பொருளாளர் எல்லா கணக்குகளும் இவரிடம் தானே இருக்கிறது என மற்றொரு தரப்பும் தங்கள் விமர்சனங்களை எம்ஜிஆர் மீது கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
என்னதான் கோவம் இருந்தாலும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு, சமாதானப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக ஒரு குழு எம்ஜிஆரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பேச்சு வார்த்தை முடிவில் எம்ஜிஆர் இனியும் தான் உங்களோடு இணைவதாக இல்லை என்று சொல்லி விட்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களையெல்லாம் கிளைக்கழகங்களாக மாற்றத் தொடங்கினார்.
ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கிட்டதட்ட கழகப்பதவிகள் அரசுப்பதவிகள் என அனைவரது வருடாந்திர சொத்துக்கணக்குகளையும் லோக்பாலை நடைமுறையில் வைத்திருந்த திமுக ஒவ்வொரு வருடாந்திரமும் கணக்குகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டே வந்தது.
அந்தக் கணக்குகள் யாவும் கழகப் பொருளாளரான எம்ஜிஆரிடமே இருந்த போது அவர் பொதுவெளியில் கணக்குக் கேட்ட காரணம் தன்னை திமுகவில் இருந்து பிரித்துக்கொள்ளவேயன்றி வேறில்லை.
கடைசியாக இன்னொரு மிக முக்கியமான சம்பவம், கழக சட்டவிதிகளின் படி சொத்துக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் தலைமைக்கு தாக்கல் செய்து கொண்டிருந்த நிர்வாகிகளில் ஒரே ஒருவர் மட்டும் தான் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டைத் தவிர பின் வந்த ஆண்டுகளில் தன்னுடைய சொத்முக் கணக்குகளை தாக்கல் செய்யவே இல்லை. அந்த ஒருவர் தான் எம்.ஜி.ஆர்.
ஆக, எம்.ஜி.ஆர் என்பவர் தி.மு.கவில் கணக்குக் கேட்டவர் அல்ல. கணக்கே காட்டாதவர்.
-மு.சீதாராமன்.
No comments:
Post a Comment