Thursday, February 7, 2019

நீட் தேர்வில் தமிழகம் மிகப்பெரிய வெற்றி.

தமிழகத்தில் தான் நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆகவே, திமுக வின் தமிழன் பிரசன்னா தற்கொலை செய்யத் தயாரா?? யென ஒரு தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
  அட முட்டாப் புன்னகைகளே,,, நாங்கள் கேட்டது எண்ணிக்கை அல்ல. அனிதாக்களும் மருத்துவராக வேண்டும் என்பது மட்டுந்தான். தமிழகத்தில் யார் அந்த வெற்றியை அடைந்திருக்கிருக்கிறார்கள் என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா இடங்களையும் சிபிஎஸ்இ மாணவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அரசுப்பள்ளியோ அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்தோ மருத்துவக்கல்லூரிக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 95 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. சரி,, சிபிஎஸ்இ பள்ளியில் படிப்பவர்கள் யார்? ஏழை வீட்டுப் பிள்ளைகளா?? இரும்படிப்பவர் வீட்டுப் பிள்ளைகளா?? மூட்டை தூக்கும் தொழில் செய்வோரின் பிள்ளைகளா?? தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளா?? இல்லை.  அவர்கள் எல்லாம் செல்வத்தில் திகைப்போரின் பிள்ளைகள். அவர்கள் நீட் தேர்வு என்று ஒன்று இல்லாமல் போனாலும் கூட, கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனாலும், செல்ப் பைனான்ஸில் படிக்கிற அளவிற்கு வசதி படைத்தோர் வீட்டுப் பிள்ளைகளே, பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்க முடிகிறது.
  திமுக தலைமையால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் பெறப்பட்ட தகவல்களின் மூலம் பின்வருவனவற்றைப் பகுத்தாய்கிறார் நண்பர் பழூரான்விக்னேஷ்.  இதைப் பார்த்துவிட்டு கொஞ்சம் சிந்தித்து முடிவு செய்யுங்கள். எல்லா தமிழகத்து மாணவர்களும் இதிலே வெற்றி தான் பெற்றிருக்கிறார்களா?? யென்று. கீழே அவர் பெற்ற புள்ளிவிவரங்கள் வருமாறு.
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 04
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 03
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2226
2015 -2016 : 2247
2016-2017 : 2321
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 20 ( huge difference)
அரசாங்க மருத்துவ கல்லூரியில்  CBSE  பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 0
2015 -2016 : 0
2016-2017 : 14
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 611
——————————————————————
தனியார் மருத்துவ கல்லூரியில்  அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 12
2015 -2016 : 3
2016-2017 : 3
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 01
தனியார்  மருத்துவ கல்லூரியில்  அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015: 0
2015 - 2016 :16
2016 -2017 :26
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 0
தனியார்  மருத்துவ கல்லூரியில்  தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 798
2015 -2016 : 657
2016-2017 : 1173
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 03 ( huge difference)
தனியார்  மருத்துவ கல்லூரியில்  CBSE  பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :
2014 -2015 : 2
2015 -2016 : 2
2016-2017 : 21
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018  : 283
நன்றிபழூரான் விக்னேஷ் ஆனந்த்

Wednesday, February 6, 2019

எம் ஜி ஆர் கணக்கு கேட்ட கதை

லோக்பால் குறித்து மிகப் பெரிய போராட்டங்களும், விவாதங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சட்டத்தினை சத்தமே இல்லாமல் 1960 களிலேயே நடைமுறையில் வைத்திருந்த இயக்கம் தி.மு.க. ஆம், 1960களில் தி.மு.க வின் ஒவ்வொரு மாவட்ட,ஒன்றிய, நகர, கிளைக் கழக செயலாளர்களும் கூட தங்களது சொத்து மதிப்பினை தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் கோப்புகள் அனைத்தும் அப்போதைய பொருளாளர் எம்.ஜி.ஆரிடமே இருந்து வந்தது.

  இது நடைமுறையில் இருந்த காரணத்தால் தி.மு.க 1971 ல், அமைச்சர் கே.ஏ.மதியழகனின் சகோதரர் சொத்து சேர்த்ததாக புகார் வர, திமுக வும், அதன் தலைவருமான கலைஞர் தலைமையில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது கே.ஏ.மதியழகனுக்கு அமைச்சர் பட்டியலில் இடம் தர மறுக்கப்பட்டது என்பது வரலாறு.

   அதே நேரத்தில் பொருளாளர் எம்.ஜி.ஆர்., அமைச்சர் பதவி கேட்க, திரைத்துறையை விட்டு விலகுங்கள், அமைச்சர் திரைத்துறையிலும் செயல்பட்டால் பல்வேறு விமர்சனங்கள் எழும் என கலைஞர் சொன்ன போது, சில சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்து, அமைச்சரவையில் தன்னை சேர்க்கும் படி கோரிக்கை வைக்கிறார் எம்.ஜி.ஆர். பின், அவரே, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாமென ஒதுங்கி விடுகிறார். இதில் தான் எம்.ஜி.ஆருக்கு கலைஞர் மீது, திமுக வின் மீது கொஞ்சம் பெரிய மனக்கசப்பு வருவதற்கான தொடக்கப்புள்ளி.

    பின்னர் ஆட்சி பல்வேறு சங்கடங்களுக்கு மத்தியிலே புயலுக்கு நடுவே செலுத்தும் படகைப் போல நகர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு நிதி விவகாரங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்தது தாங்காமல் மதுவிலக்கு ரத்து செய்யப்படுகிறது. அதற்கான காரணங்கள் குறித்தும் மதுவால் வருகிற தீங்குகள் குறித்தும், ஒரு குழு அமைத்து விழிப்புணர்வு செய்ய திட்டமிடப்படுகிறது. அதன் தலைவராக எம்ஜிஆரே பொறுப்பேற்று, அதில் இருந்த தர்மசங்கடமான காரணங்களையும், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எம்ஜிஆ.ர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தார்.

    அந்த நேரத்தில் தான் "இந்திராகாந்தி அம்மையாரால் திமுக வைச் சிதைக்க மூன்று பேரை அந்த அம்மையார் திமுக வில் இருந்தே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்ற செய்தி  ஜார்ஜ் பெர்னான்டஸ் மூலம் பரவலாகப் பரவுகிறது. எம்ஜிஆர் தான் திமுக காரர் தான் எனவும் கலைஞரின் ஆதரவாளர் தான் எனவும் நிரூபிக்க அதன் பின் நடந்த கூட்டங்களில் முயல்கிறார்.

     அதன்பின் மதுரையில் நடந்த கூட்டமொன்றில் தன்னோடு நடிக்கிற முன்னணி நடிகை ஒருவருக்கு மேடையில் அமரவைக்க இடம் தரும்படிகோருகிறார். திமுக தலைமை இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளாது என்கிற பாணியில் திமுக வின் முன்னணியினரிடமிருந்து எதிர்ப்புக் குரல் வர, அதிலும் எம்ஜிஆர் மிகுந்த வெறுப்படைகிறார்.

   பின்னர் தான் மத்திய அரசின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிய எலி கொஞ்சம் கொஞ்சம் வெளிவருவது எம்ஜிஆரின் பேச்சுக்களில் இருந்து வெளிப்படுவது கண்டு சிக்கிய எலி எம்ஜிஆர் தான் என்பதை பலர் உணர்கின்றனர்.

   மத்திய அரசு எம்ஜிஆர் என்ற எலியைப் பிடிப்பதற்காக வைத்திருந்த ரொட்டித்துண்டு, அவர் அளவுக்கதிகமாய் திரைத்துரையில் வரி ஏய்ப்பு செய்து சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்களின் மீதான வருமான வரித்துறை சோதனை.

    எந்த மதுவிலக்கு ரத்தை ஆதரித்துப் பேசினாரோ, அதே மதுவிலக்கு ரத்து குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். தி முக வில் பலரும் பல வகையில் உள்ளுக்குள்ளேயே புளங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மாவட்ட செயலாளர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் எம்ஜிஆர் அளவுக்கதிகமாய் சொத்து சேர்த்து அதைக்காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசோடு சேர்ந்து கள்ளநாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார் எம்ஜி ஆர் என்கிற ரீதியில் அந்தக் கடிதம் பத்திரிக்கைகளுக்கு பெருந்தீனியாகப் போய்ச் சேர்ந்தது.
பின்னர் அந்த மாவட்ட செயலாளரும் கூட கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்துக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தனிக்கதை.

   திராவிட இயக்க அரசியலைத் துண்டாகப் பிளக்கக் காரணமான அந்த பெரும் சம்பவம் இனிதான் நடக்கிறது. ஆம், பெரும்பிரளயமாகக் கருதப்படும் நிகழ்வான  "எம்.ஜி.ஆர் பொதுநிகழ்ச்சியில் கணக்குக் கேட்பு விவகாரம்" வெடிக்கிறது. கழகமும் தொண்டர்களும் கொதித்துப் போகின்றனர். கிளைச் செயலாளர் முதல் மாவட்டசெயலாளர் வரை, உள்ளாட்சியில் இருந்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது எண்ணிக்கையும் பல ஆயிரக்கணக்கில் அடங்கும். அவர்களுடைய சொத்துக் கணக்குகளையெல்லாம் திரட்டுவது சிரமமமான காரியம் என ஒருதரப்பும், இவர் எப்படி பொது இடத்தில் கட்டுப்பாட்டை மீறி கணக்கு கேட்கலாம்,கணக்கு கேட்க வேண்டிய இடம் பொது இடமல்ல,,, பொதுக்குழுவாகத் தானே இருக்க வேண்டும் என்றொரு தரப்பும்,, இவர் தானே பொருளாளர் எல்லா கணக்குகளும் இவரிடம் தானே இருக்கிறது என மற்றொரு தரப்பும் தங்கள் விமர்சனங்களை எம்ஜிஆர் மீது கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.

   என்னதான் கோவம் இருந்தாலும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு, சமாதானப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக ஒரு குழு எம்ஜிஆரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பேச்சு வார்த்தை முடிவில் எம்ஜிஆர் இனியும் தான் உங்களோடு இணைவதாக இல்லை என்று சொல்லி விட்டு தன்னுடைய ரசிகர் மன்றங்களையெல்லாம் கிளைக்கழகங்களாக மாற்றத் தொடங்கினார்.

   ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கிட்டதட்ட கழகப்பதவிகள் அரசுப்பதவிகள் என அனைவரது வருடாந்திர சொத்துக்கணக்குகளையும் லோக்பாலை நடைமுறையில் வைத்திருந்த திமுக ஒவ்வொரு  வருடாந்திரமும் கணக்குகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டே வந்தது.

  அந்தக் கணக்குகள் யாவும் கழகப் பொருளாளரான எம்ஜிஆரிடமே இருந்த போது அவர் பொதுவெளியில் கணக்குக் கேட்ட காரணம் தன்னை திமுகவில் இருந்து பிரித்துக்கொள்ளவேயன்றி வேறில்லை.

   கடைசியாக இன்னொரு மிக முக்கியமான சம்பவம், கழக சட்டவிதிகளின் படி சொத்துக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் தலைமைக்கு தாக்கல் செய்து கொண்டிருந்த நிர்வாகிகளில் ஒரே ஒருவர் மட்டும் தான் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டைத் தவிர பின் வந்த ஆண்டுகளில் தன்னுடைய சொத்முக் கணக்குகளை தாக்கல் செய்யவே இல்லை. அந்த ஒருவர் தான் எம்.ஜி.ஆர்.

  ஆக, எம்.ஜி.ஆர் என்பவர் தி.மு.கவில் கணக்குக் கேட்டவர் அல்ல. கணக்கே காட்டாதவர்.

-மு.சீதாராமன்.

Monday, February 4, 2019

வாவ் இவர் டிஜிட்டல் எம் எல் ஏ.

பள்ளி நண்பர்களுடான அரசியல் கலந்துரையாடல்கள் எப்போதுமே பெரும் களேபரத்தில் தான் முடிவடையும். அப்படியொரு நாள் பள்ளித் தோழர்களோடு விவாதித்துக் கொண்டிருந்த போது, கோபமடைந்த நண்பன் அருண்குமார்,,, நீ அரசியல்ல பெரிய புடுங்கிண்ணா,,, நம்ம ஊரு ரோடையெல்லாம் பாருடா,,, உங்காளு தான எம் எல் ஏ. அவருகிட்ட சொல்லி போடச் சொல்லு பார்ப்போம் என்கிற சவாலோடு அன்றைய விவாதத்தை முடித்த  வைத்தான் வகுப்புத்தோழன் சென்ன ஐ.டி.கம்பெனியில் பணிபுரியன் என் ஆருயிர் நண்பன் கோ.அருண்குமார் B.E.

    என்னதான் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் எனக்கு நேரிடையாகவோ, நல்ல தொடர்புடன் அவரோடு இருப்பவனாகவே இருந்தாலும் கூட, மக்கள் பிரச்சனைய தனியொருவனாகக் கொண்டு சென்று, அதில் அவர் கவனம் ஈர்க்கப்படுகிற அளவிற்கு நான் ஒன்றும் மக்கள் பிரதிநிதியோ அல்லது கழகத்தில் பொறுப்பில் இருப்பவனோ கிடையாது. சாதாராண திமுக தொண்டன். அடிமட்டத் தொண்டன்.

  என்ன செய்வது, நண்பர்கள் நம் அரசியல் ஆர்வத்தை எள்ளிநகையாடிவிட்டார்களேயென்ற தாழ்வுமனப்பான்மையோடு தான் பலநாட்கள் இருந்தேன்.

   திடிரென ஒரு நாள் கடகடவென்று "குண்டும் குழியுமாகக் கிடக்கிற சாலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்களே சீரமைத்துத் தாருங்கள்" என்கிற ரீதியாக பொதுப்படையான  கடிநம் ஒன்றை எழுதினேன். நண்பர்களுக்கும், சொக்கநாதன்புத்தீர் இளைஞர்கள், யுவதிகள் பலருக்கும் அந்தக் கடிதம் வாட்ஸ் அப்பில் பரந்தது. கூடவே, சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்களின் வாட்ஸ் அப் எண்ணும் சேர்த்து, நம்முடைய சட்டமன்ற உறுப்பினருக்கு நமது ஊர் நலம் பெறுவதில் அக்கறைகொண்டு இந்தக் கடிதத்தை அனுப்பிடுங்கள் என்ற செய்தியும் கூடவே பறந்தது.

  எல்லோரும் அனுப்பினார்கள். அனுப்பியதில் பலருக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்கள் போன் செய்து பேசியிருக்கிறார். அவர் பேசிய செய்தியை நண்பர்கள் சொல்கிற போது அவர் மீதான மதிப்பையும் அவரது செயல்பாட்டையும் பாராட்டியது கண்டு அந்த இடத்தில் ஒரு தி.மு.க காரனாக உள்ளம் மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

  சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கடந்த ஜன 13 ஆம் நடந்த தி மு க கிராமசபைக் கூட்டத்தில் எங்கள் ஊரில் பேசிய போது,  ரூபாய் முப்பது லட்சம் மதிப்பீட்டில் சொக்கநாதன்புத்தூரின் உட்புற சாலைகளுக்கு டென்டர் விடப்பட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் சீக்கிரம் துவங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தார். அடடா!! யென்ன ஆச்சரியம் இது என்று வியந்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

   அதையெல்லாம் கடந்து, இன்று நான் மிகப்பெரிய மகிழ்ச்சியில் திகைத்து நிற்கிறேன். காரணம், சொக்கநாதன்புத்தூரின் உட்புற சாலைகள் சீரமைக்கப்படுவதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்களே நேரடியாக வந்து தொடங்கி வைத்திருக்கிறார்.

    சொக்கநாதன்புத்தூரின் பல்வேறு இடங்களில் படித்து நல்ல பணியில் இருக்கக் கூடிய இளைஞர் பெருமக்களும், சொக்கை மண்ணின் மைந்தர்கள் பலரும் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே அனுப்பிய கோரிக்கைக் கடிதத்திற்கு மதிப்பளித்து நிதி ஒதுக்கி சாலைகள் சீரமைப்புப் பணி துவங்குவதற்காக மக்கள் பணியாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தங்கப்பாண்டியன் அவர்களுக்கு எனது முதல் கோடி நன்றிகள்.

  இந்தக் கடிதத்திற்கு உறுதுணையாக இருந்து, எதைப்பற்றியும் சிந்திக்காமல் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணுக்குப் பகிர்ந்த பல மண்ணின் மைந்தர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வராத நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதியில், வாட்ஸ் அப் கோரிக்கைக்கு செவி சாய்த்து செயலாற்றும் உங்கள் பணி மிகப்பெரிய பாராட்டுக்குரியது.

  சட்டமன்ற உறுப்பினரே உங்கள் பணி தொடரட்டும். உங்களின் மக்கள் பயணம் வெல்லட்டும்.