Tuesday, February 24, 2015

வழி மாறிக் கொண்டிருக்கிறோமே!!

எந்தவொரு செயலையும் தொடங்குகின்ற போது, தன்னுடைய இல்லத்தில் இருந்தே தொடங்க வேண்டும் அல்லது தனக்கு மிகத் தெரிந்த தகவல்களைக் கொண்டும் அல்லது தன்னுடைய அறிவிற்கு மிகத் தெளிந்த சிந்தனைகளைக் கொண்டும் தொடங்கும் போது தான், இறுதியில் வெற்றியில் முடியும் என சான்றோர் கூறக் கேட்டிருக்கிறேன்.

  அந்த வகையில் என்னுடைய ஊரில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில விசயங்களைக் கருத்தில் கொண்டு இதைத் தொடங்குகிறேன். 

  இயல்பில் என்னுடைய ஊர் ஒரு கிராமம். கிராமங்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்புகள் என்று காந்தியடிகள் எப்போதோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்த எண்ணத்தில் ஒரு கிராமத்தை வைத்தே ஒரு நாட்டின் நிலையை மதிப்பிட்டு விடலாம். "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறும் பதம்பார்த்து  பக்குவமாய் வடித்து சோற்றுப்பானையை இறக்கி வைப்பவர்கள் தானே நம் வீட்டுத் தாய்மார்கள். ஆக, கிராமங்களை முன்னோடியாகக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்பதை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

  என்னுடைய தாத்தா காலத்தில் இருந்த இளைஞர்கள் எல்லாம், இந்த நாடு விடுதலை அடைய வேண்டும் என்கின்ற உணர்வுகளோடு, அதற்காக தங்களுடைய இன்னுயிரையும் தரவேண்டுமானால் அதற்கும் நாங்கள் துணிந்து நிற்போம் என்கின்ற நாட்டுப்பற்றுடன் கூடிய நெஞ்சுரத்தோடு இராணுவத்தில் சேர்ந்து பணி செய்கின்ற ஆர்வங்களோடு வாழ்ந்து வந்திருக்கினர். இது எப்படி உனக்குத் தெரியும்னு நீங்க கேட்கலாம். இன்றைக்கு எங்களுடைய கிராமத்தில் எனக்கு தாத்தாக்களாக பல முன்னாள் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். அதிலும் முன்னாள் இராணுவ வீரர் தாத்தா இராமசாமி அவர்கள் இறக்கின்ற தருவாயிலும், கண் தானம் செய்தது தான் மிகச் சிறப்பு.

இந்த ஒரு விசயத்தில் இருந்தே என்னுடைய தாத்தாக்கள் காலத்து படித்த  இளைஞர்கள் எவ்வாறு சமூக சிந்தனைகளோடும், தேசப் பற்றோடும், மக்கள் நலன் சார்ந்த சிந்தனைகளோடும் இருந்திருக்கிறனர் என்பதைக் கூட நாம் புரிந்து கொள்ளவில்லையென்றால், அவர்களுடைய செயல்களை அவர்களுடைய தியாகங்களை நாம் அவமதித்தது போல் ஆகிவிடும் அல்லவா!!

  என்னுடைய தந்தையார் காலத்தில் இருந்த இளைஞர் கூட்டங்களெல்லாம், தேசப்பற்று என்பதை மனதளவில் வைத்துக் கொண்டு, ஏனெனில் நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. இனி நம்முடைய மக்களின் உரிமைகளும் அடிமைத்தனங்களும் அகற்றப்பட வேண்டுமெனக் கருதி, திராவிட இயக்க சிந்தனைகளின்பால் பற்று கொண்டவர்களாகவும், தமிழ் மொழிப் பற்றாளர்களாகவும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கி பல போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தங்களுடைய சமூக சிந்தனைகளை வெளிப்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க வழிதேடி அலைந்தனர். விளைவில் அவர்களில் பலர் அரசியல் தலைவர்களாகக் கூட உருவெடுத்தனர். அதன் முடிவில் மக்கள் மத்தியில் கிராமங்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு கிராமங்கள் முன்னேற்றத்தின் பாதையை நோக்கி நகரத் தொடங்கின.

   என்னுடைய தாத்தாக்கள்  காலத்து இளைஞர்களோடும், என் தந்தையார் காலத்து இளைஞர்களோடும் என்னுடைய சமகாலத்து இளைஞர்களின் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளின் ஈடுபாடுகளையும் சமூக அக்கறை கொண்ட சிந்தனைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது மிகப்பெரிய வருத்தம் என்னுள் எழுந்து நிற்கின்றது.

  என் சமகால இளைஞர்கள் யாவரும் வாக்களிப்பதோடு நம்முடைய பிரச்னை முடிந்துவிட்டது என்றெண்ணி தங்களை சுயநலப் பாதையில் அழைத்துக் கொண்டு செல்கின்றனர். ஒரு கல்லூரி இளைஞரோடு நான் பேசுகின்ற போது, யாருக்கு ஓட்டுப் போடுவ என்று கேட்டால், நான் எப்பவும் போல நோட்டா என்று சொல்கின்ற அளவிற்கு வாக்களிப்பில் கூட அவர்களுடைய சிந்தனை, சிறிய வட்டத்திற்குள் சுருங்கிக் கிடக்கிறது.

  மிகத்தெளிவாய்ச் சொல்ல வேண்டுமென்றால், எப்போதும் இறங்குகின்ற பேருந்த நிலையத்தில், இறங்கக் கேட்கின்ற மூதாட்டியிடம், அங்கெல்லாம் இறக்க முடியாது. அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கிக்கொள், என்று திமிரோடு பேசி, அடுத்த நிலையத்தில் இறக்கிவிடுகின்ற நடத்துனரைக் கூட, தட்டிக் கேட்க மனமில்லாமல், தன்னுடைய சுயநலப் பாதையில் செல்கின்ற மனம் கொண்ட இளைஞர்களோடு தான் நானும் வாழ்கிறேன் என்று எண்ணி வருந்துகிறேன்.

  கிராமங்களில் இருந்த திராவிட இயக்க சித்தாந்தங்களாலும், காங்கிரஸ் பேரியக்கத் தத்துவங்களாலும் ஈர்க்கப்பட்டு, எளிமையான மக்களுக்கான தலைவராய் உருவான பெருந்தலைவர் காமராஜரின் இடத்தையும்,  திருக்குவளை என்னும் கிராமத்தில் பிறந்து எளிய மனிதனாய் சென்னைக்குச் சென்று, ஐந்து முறை முதல்வராகிப் பின் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை மிகச் சாதாரணமாய் நிறைவேற்றிய கலைஞரின் இடத்தையும்,  கலிங்கப்பட்டி என்னும் குக்கிராமத்தில் வழக்கறிஞராய் தன்னுடைய சமூகப் பணியைத் தொடங்கி, ஒரு காலத்தில் எதையும் துணிவு கொண்டு எதிர்த்து புரட்சிப் புயலாய் வலம் வந்து, பின்பு புஷ்வானமாய் ஆகிப்போன வை.கோபால்சாமியும் இடத்தையும், இன்னும் பல கிராமத்தில் இருந்து கிளம்பிய தலைவர்களின் இடங்களையெல்லாம், அவர்களுக்குப்பின் இனிவரும் காலங்களில் கிராமத்து இளைஞர்களால் அவர்கள் அலங்கரித்த சபைகள் எப்படி நிரம்பப் போகிறது?? என்கின்ற கேள்விக் கணை என்னுள் பனையளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

Monday, February 23, 2015

"இதப் படிங்க மொதல்ல"

ஒரு கிராமத்தில் ஓட்டல் நடத்தி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தன்னுடைய நண்பரோடு சாப்பிடச் சென்றிருக்கின்றனர்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பில் கொடுக்கச் சென்ற போது, அங்கே சொன்ன பில் தொகை இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆமாம் முன்னூறு ரூபாய் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே ஓட்டல்காரரின் நண்பர், அவரிடம் உன் ஓட்டல்ல சாப்பிட்டா முப்பதும் முப்பதும் அறுபது ரூவா தான, நீ வாங்குவ எனக் கேட்க, உடனே அவரும் ஆமாம் எனத் தலையசைக்க, அப்போ நீ ஒவ்வொருத்தருக்கும் நூற்றி இருபது ரூபாய் நட்டத்துல வியாபாரம் பார்த்திருக்க என்று சொல்ல, தன்னுடைய கடையை இந்த நட்சத்திர ஓட்டலோடு ஒப்பிடுவது தவறு என்று புரிந்து கொள்ளாத ஓட்டல் கடைக்காரர் தலையில் அடித்து அழ ஆரம்பிக்க, உடனே அவருடைய நண்பர், இத்தனை வருசமா நீ ஓட்டல் கடை நடத்திருக்க, அதனால உனக்கு இத்தனை ரூபாய் நட்டம் என்று அவரை மேலும் காயப்படுத்த அந்த ஓட்டல்காரர் அங்கேயே பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டார்.

நிற்க,,,

என்னடா இவண் இப்படி சம்பந்தமே இல்லாம ஒரு கதையைச் சொல்லிட்டிருக்கான்னு நீங்க நினைக்கலாம். விசயத்துக்கு வரேன்.

இதே மாதிரி ஒரு முட்டாள்தனமான ஏமாற்றுப் பிரச்சார வேலை தான் ஸ்பெக்ட்ரம் விசயத்திலும் நடந்திருக்கிறது.

3g ரேட்டுக்கு 2g ஏலம் போயிருந்தால் 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்காமல் தடுத்திருக்கலாம் என்பது தான் தணிக்கை அதிகாரியின் விளக்கம். 3g என்றால் என்ன என்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே. 3g பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி. 2g கிராமத்து இட்லிக் கடை மாதிரி.

பைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு இட்லி இருபது ரூபாய்க்கு விற்றால் அங்க என்னென்ன வசதி இருக்கும் என்பது நட்சத்திர ஓட்டல்களுக்குச் சென்றவர்களுக்கும், கிராமத்து இட்லிக்கடையில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

பைவ் ஸ்டார் ஓட்டலை கிராமத்து இட்லிக்கடையோடு ஒப்பிடுவது எப்படித் தவறோ, அதுபோல் 2g யை 3g யோடு ஒப்பிடுவதே தவறு.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், இந்த உண்மை நிலையைக் கூடப் புரியாமல், இன்னும் சிலர் 1.76 லட்சம் கோடி ஊழல் ஊழல் என்று மாரடிப்பதைப் பார்த்தால், உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதுடான்னு சொல்லி விட்டு நகர்ந்து போகத்தான் நமக்குத் தோன்றுகிறது.

 (தமிழ்மணம் வாசகர்களுக்காக என்னுடைய இக்கட்டுரையை மீள்பதிவு செய்திருக்கிறேன்.)

Saturday, February 21, 2015

தவிக்குதடி!!

உன்னைப் பார்க்கின்ற
எதிர்பாராத்
தருணங்களில்
ஒரு நொடியாவது
கலங்குகின்ற என்
கண்களைப்
பார்த்து
மனந் திருந்தி
என்னை
ஏற்றுக்
கொள்ளமாட்டாயா யென
இன்னமும்
ஏங்கித் தவிக்கிறதடி
என் மனம்!!

Friday, February 20, 2015

வாழ்த்துக்கள்

கடந்த இரண்டு மாதமாக என் அலுப்பிற்கு மருந்தாய் இருந்த விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சி இன்றோடு நிறைவடைந்தது. கடும் பதற்றத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஹரிப்ரியாவும் ஸ்பூர்தியும் தான் முதலிடங்களைப் பிடிப்பார்கள் என்றெண்ணிக் கொண்டிருந்த எனக்கு ஹரிப்ரியாவின் பின்னடைவில் பெரும் வருத்தம் உண்டு.

மூக்கு எப்புடி விடைக்குதுனு பாருனு எல்லாருமே சொல்கிறளவிற்கு மூக்கு விடைக்கிற அளவிற்கு ஒவ்வொரு பாடலிலும் தன் திறமையை மிகச் சாதுர்யமாகக் காட்டி முதல் இடத்தைப் பிடித்த ஸ்பூர்த்தியைக் கண்டு வியந்து போய் நிற்கிறேன். நான் வியந்து நிற்பதற்குக் காரணம் அவளுடைய வயது இன்னமும் பனிரெண்டைக் கூட தொடவில்லை என்பது தான். ஒரு குறிப்பிட்ட வயதில் இந்த உலகின் மிகச் சிறந்த பாடகியாக ஸ்பூர்தி வர எனது வாழ்த்துக்கள்.

அடுத்து, ஜெசிகா இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் எனக்கு வியப்பொன்றும் இல்லை. ஆனால் அவளுடைய தந்தை ஜெசிகா பெற்ற ஒட்டு மொத்த பரிசையும் தமிழகத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகம் ஒன்றிற்கும், இலங்கையில் உள்ள அனாதைக்குழந்தைகள் இல்லம் ஒன்றிற்கும் நன்கொடையாக அளிக்கிறேன் என்ற போது, நான் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை மறந்து நானும் அந்தக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சென்று கரவொலி எழுப்பிய அந்த உணர்வோடு, என்னை மறந்து ஜெசிகா தந்தையின் மனதை எண்ணி(இதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேணும்யா)ப் பெருமை கொண்டு கரவொலி எழுப்பினேன்.

ஆனாலும் முதல் இறுதிப்போட்டியாளராக உள்ளே நுழைந்த ஹரிப்ரியாவின் பின்னடைவு தான் எனக்கு வருத்தமளிக்கிறது.

ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். நல்லா ஒரு பிள்ளையைப் பெத்து நேரா விஜய் டி.வி ஆபிஸ்ல கொண்டு போயி போட்டுட்டோம்னா,, அஞ்சு வயசு ஆகுறதுக்குள்ள அம்பது வயசுல அடைய வேண்டிய பேரும் புழும் அஞ்சே வயசுல வாங்கிரும் என்பது தான்.

என் இரவு நேரச் சாப்பாட்டுப் பொழுதை சூப்பர் சிங்கர் போல் வேறெதுவும் கடந்த இரண்டு மாதமாக பல்வேறு மன உளைச்சல்களில் இருந்த எனக்கு இனிமையாக்கியதில்லை.

ஆறு குழந்தைகளும் தன் வாழ்வில் சிகரம் தொட இந்த ரசிகனின் வாழ்த்துக்கள!!

Wednesday, February 4, 2015

"மக்கள் முதல்வர்" கலைஞர்

ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 165 கோடி ரூபாய் நிதி இதுவரை வந்து சேரவில்லை. இதனால் ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை பராமரிப்பின்றி மூடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவதைக் கண்டித்து பனிரெண்டாவது ஆர்ப்பாட்டமாக தி.மு.க, ஆலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களோடு சேர்ந்து களமிறங்கியது. தி.மு.க சார்பில் ஒரு மாபெரும் எழுச்சியை அந்த ஆர்ப்பாட்டத்திலே கண்ட போது, பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் "திருவரங்கம் தேர்தலுக்கு நீங்கள் செய்கின்ற செலவில் ஒரு கடுகளவு தான் இந்த நூற்றி அறுபத்தைந்து கூடி, ஆக இந்தத் தொகையை ஒதுக்குவது ஒன்றும் அரசுக்குப் பெரிய விசயமல்ல, ஆகவே தயவு செய்து தமிழ்நாட்டின் பினாமி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புல்லுக்குப் பாய்வதை கொஞ்சமேனும் நெல்லுக்கும் பாயவிடுங்கள்" என்று பேசிய போது கூட்டம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்தது.

மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் பேசுகின்ற போது, என்னதான் காலில் வலியோடு நின்று கொண்டிருந்தாலும் கூட, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது, அவருக்கேயுரிய அதே நக்கலோடும், நையாண்டியாடும் செயல்படாத இந்த பினாமி அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

ஆரம்பத்திலேயே பேசிய இராசபாளையத்தின் துடிப்பு மிக்க அடுத்த இளம் பேச்சாளர் அண்ணன் கருப்பழகு அவர்கள், ஒட்டு மொத்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் தன் பேச்சால் கட்டிப் போட்டார். கீழே இறங்கிய போது, திருவில்லிபுத்தூர் வழக்கறிஞரிடம், அண்ணே அடுத்த வாயுதா வந்துருச்சு என்று கூறிக் கொண்டிருந்ததை அரைக்காதில் கேட்டு விட்டு, என்னோடு மிக அன்போடும் பாசத்தோடும் பேசக்கூடிய அண்ணன் கருப்பழகு, வழக்கு வாங்குகின்ற அளவிற்கு ஒரு நல்ல பேச்சாளராக தற்னைப் பண்படுத்திக் கொண்டிருக்கிறார் என்கின்ற எண்ணத்தை மனதில் புதைத்துக்கொண்டு அண்ணனுக்கு வாழ்த்துக் கூறினேன்.

ஆனாலும், நான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைஞரின் மக்கள் நலத்திட்டத்தின் மீதான அக்கறைகளை ஒரு நன்மதிப்போடு அளவிட்ட போது, இப்படிப்பட்ட சமூக அக்கறை மிகுந்த ஒருவரையா நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம் என்றெண்ணி அகமகிழ்ந்தேன்.

காமராஜர் முதல்வராக இருந்த போது, ஆலங்குளத்தஅல் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது . பின் காமராஜரின் "கே" பிளான் படி, காமராஜர் காங் கிரசை வளர்க்க களமிறங்கியவுடன் முதல்வரான பக்தவத்சலத்தால் ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1967 களில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். ஆனால் அவரை நம்மோடு நீண்ட நாள் அவர் முதல்வராக இருக்க இயற்கை இடம் கொடுக்காததால், 1969 பிப்பரவரியில் இயற்கை எய்தினார். பின் முதல்வான கலைஞரால் பக்தவத்சலத்தால் அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலைக்கு மூடு விழா கண்டுவிடவில்லை கலைஞர், மக்களின் நலன் கருதி, மக்கள் மீது அக்கறை கொண்டு, இந்தத் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி கொண்டு, கலைஞர் தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான முயற்சிகளை வெற்றி கரமாக மேற்கொண்டு, பக்தவத்சலத்தால் இந்தித் திணிப்பை எதிர்த்து செயல்பட்ட தி.மு.க வினர் மீது செய்யப்பட்ட வன்கொடுமைகளை மறந்து, மக்கள் நலனை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டு சிமெண்ட் ஆலையை திறந்த கலைஞரை, இவரோல்லவோ "மக்கள் முதல்வர்" என்று வியந்து நின்றேன்.

Monday, February 2, 2015

இந்தியா இந்துக்களுக்கா??


இந்தியா என்பது இந்துக்களுக்குத் தானே சொந்தம்.
எப்படி?
இந்துக்கள் தானே அதிகம் வாழ்கிறோம்.
யார் அதிகம் வாழ்கிறார்களோ, அவர்களுக்கே அந்த நாடு சொந்தமாகி விடுமா?
ஆமாம்,
சரி,
உங்கள் ஊரில் எந்த சாதி மக்கள் அதிகம்,
"____"சாதி மக்கள் அதிகம்,
அப்படியென்றால் ______ தவிர நமக்கெல்லாம் நம் ஊர் சொந்தமில்லை என்றாகி விடுமா?
அது எப்படி? இது நம்ம ஊர் இல்லையா!!
இதே வெங்காயத் தத்துவம் தான் இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்கின்ற போது குறுக்கே நிற்கும்.
எப்படி நம்ம ஊர் பல சாதி மக்களுக்கும் பாத்தியப் பட்டதோ, அதே போலத் தான் இந்தியா என்பது பலதரப்பட்ட மதங்களைக் கொண்ட மக்களுக்கும் பாத்தியப்பட்டது.
அதுவும் சரிதான்.
அதுவும் சரிதான் இல்லை. அது தான் சரி.
(நண்பர் ஒருவரோடான கலந்துரையாடலில்)

Sunday, February 1, 2015

இவரல்லவோ தலைவர்!!




திராவிட இயக்கத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மதிப்பிற்குரிய அய்யா சின்னக்குத்தூசி அவர்கள், ஒப்புயர்வில்லா தலைவர் கலைஞரைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்பை இன்று எனக்குப் படிக்க நேர்ந்தது. பாதி தான் படித்திருக்கிறேன். பாதியிலே என் உள்ளம் சொக்கிப் போய் நிற்கின்றேன். அடடா!! இப்படி ஒரு திறமைமிக்க மனிதரையா நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் வியந்து போனேன். இதுவரை நான் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் படித்ததில் இருந்து, உங்களுக்கும் அந்த நிகழ்வுகளையெல்லாம் சொல்லாமல் இருக்க என் மனம் எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆதலால் அவற்றில் இருந்து சில முக்கியமான நிகழ்வுகளை என்னுடைய நடையிலே எழுதுகிறேன்.


   திருவாரூரிலே விவசாயிகள் மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்ட போது, அதன் முழுப் பொறுப்பையும் அண்ணா கலைஞரிடம் கொடுக்க, கலைஞர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுற்றி, பல பொதுக்கூட்டங்களை நடத்தி, மாநட்டிற்கான நிதியைச் சேர்த்ததோடில்லாமல், பொதுக்கூட்டங்கள் முடிந்தவுடன் மாநாட்டுப் பந்தலுக்குச் சென்று, பசையும் போஸ்டருமாய், கம்பும் கொடியுமாய் வேட்டியை முழங்காலுக்கு மேல் கட்டி, மாநாட்டுக்கான அத்தனை வேலைகளையும் முன்னின்று செய்து, மாநாட்டையும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களிடம் சிறப்பாக நடத்திக்காட்டி, மாநாட்டுச் செலவு போக மீதமுள்ள கொஞ்சம் பணத்தையும் கழகத்திற்கு முதன்முதலில்  நிதியாகக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.


     திருச்சி மாவட்டம் அண்ணா காலத்திலேயே பல்வேறு அணிகளைக் கொண்ட மாவட்டமாக திகழ்ந்ததால், தொண்டர்கள் சோர்வுற்றிருந்ததைக் கண்டு, பலமுறை முக்கிய நிர்வாகிகள் அழைத்தும் அண்ணா திருச்சிக்கு வரவே மாட்டேன் என்று கூறிவிட,  பின் தன் தம்பியை அனுப்பி திருச்சியை சரிசெய்து வரச் சொல்லியிருக்கிறார் அண்ணா.

  
  களமிறங்கிய கலைஞர் ஒரே நாளில் திருச்சியில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கழகக் கொடியினை ஏற்றி, தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிளவுபட்டுக் கிடந்த அணிகளையும் ஒன்று சேர்த்திருக்கிறார்.


  திடீரென, நெசவாளர்களின் துயரம் தீர்க்க ஒவ்வொரு கழகத் தொண்டனும் கைத்தறித் துணிகளை தோலிலே சுமந்து வியாபாரம் செய்யச் செல்ல வேண்டுமென தீர்மானிக்க, யார் எங்கே செல்வது என்று திட்டமிட்டக் கொண்ணிருந்த போது, எந்த அண்ணா நான் திருச்சிக்கே போகமாட்டேன் என்று சொன்னாரே, அதே திருச்சியில் நான் கைத்தறி ஆடைகளைத் தோலிலே சுமந்து வியாபாரம் செய்கிறேன் என்று முதல் ஆளாய் தெரிவித்தார். அந்தளவிற்கு கலைஞர் திருச்சியை கழகத் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுறச் செய்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


   அண்ணா காலத்தில் 1959 ல் என நினைக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி நூறு வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. தி.மு.க சார்பில் நூறில் தொண்ணூறு வார்டுகளில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது பேரறிஞர்ப் பெருந்தகை அவர்கள், கலைஞரிடம் நாற்பது சீட்டுக்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் உனக்கு கணையாழி அணிவிக்கிறேன் என்று சபதமிட, நூறு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே முப்பத்தைந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற, கலைஞரின் அயராத உழைப்பால் தொண்ணூறு இடங்களில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகம் நாற்பத்தைந்து இடங்களில் வெற்றிபெற்றது., பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டு விழாவொன்றை நடத்தி, "என் தம்பி கருணாநிதிக்கு நானே கடை கடையாய்த் தேடி அழைந்து வாங்கி வந்த கணையாழியைப் பரிசளிக்கிறேன்" என்று சொல்லி கலைஞருக்கு கணையாழி ஒன்றை அணிவித்தார் அண்ணா.


    ஒருமுறை தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாற்றுக்கு அப்போதைய மத்திய அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி வருவதாக இருந்ததையொட்டி, அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.  மன்னை நாராயணசாமி அவர்களுடன் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் கருப்புக் கொடி காட்டத் தயராவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி அறிந்த காவல் துறையினர், தி.மு.க வினர் பலரையும் கைது செய்யத் தொடங்கினர். கருப்புக்கொடி காட்டவேண்டிய அந்த நாளன்று புகைவண்டியிலே சென்னையில் இருந்து கிளம்பிய கலைஞரை, தஞ்சை நிலையத்தில் கைது செய்து அழைத்துச் செல்ல, காவல்துறை தயாராக இருந்தது.


   இதை அறிந்த கலைஞர், புகைவண்டியை விட்டு இறங்கியதுமே தோலிலே போட்டிருந்த துண்டையெடுத்து, தலையிலே முண்டாசு கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக கலந்து காவல் துறையினரிடம் தப்பித்து, காட்டு வழியாக நடந்து சென்று, கழக உடன்பிறப்புக்கள் குழுமியிருந்த இடத்தை அவர் அடைந்த போது காவல் துறையினரே திகைத்துப் போயி நின்றிருக்கின்றனர். அவரை அத்துனை கூட்டத்திற்கும் நடுவில் கைது செய்தால் பிரச்னை பெரிதாகும் என்று கருத்தில் கொண்டு கைது செய்யாததால், திட்டமிட்டபடி ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.


       இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்துக் கிளம்பிய நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையிலே அடைக்கப்பட்டார்.  அவரைப் பார்க்க அண்ணா வருகின்ற செய்தியறிந்த கலைஞர் மகிழ்ச்சியில் பூரித்துப் போயிருந்தார். அண்ணாவும் கலைஞரைத் தனிமைச் சிறையிலே பார்த்து விட்டு அன்றிரவு நெல்லையிலே நடந்த பொதுக்கூட்டத்திலே பேசுகின்ற போது, "என் தம்பி அடைபட்டுக் கிடக்கின்ற பாளையங்கோட்டைச் சிறைச்சாலை எனக்கு யாத்திரை ஸ்தலம், எல்லோரும் தனிமைச் சிறையில் என் தம்பி வாடுவதாகக் குறிப்பிட்டனர். பக்தவத்சலம் அவ்வளவு கொடுமைப்படுத்தக் கூடியவரெல்லாம் அல்லர் அவனோடு பாம்புகளையும் பல்லிகளையும் குடியமர்த்திருக்கிறார் என்று பேசிவிட்டு, என் தம்பி நான் சென்றதும் அண்ணா என் மனையாளைப் பார்த்தீரா, என் செல்வங்கள் நலமாக இருக்கிறார்களா, என் இல்லத்திற்குச் சென்றீர்களா,என்று கேட்பானென்று தான் நினைத்தேன், அவன் நம் கழக நிலவரமென்ன என்று கேட்டறிந்த போது நானே பூரித்துப் போனேன்" என்று பேசினார்.


      எத்துனை சோதனைகளே வரினும் எடுத்த காரியத்தைஙவெற்றியோடு முடித்துக்காட்டுகின்ற கலைஞரின் திறத்தையும், எந்த நிலையிலும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமூட்டுகின்ற கலைஞர் இருக்கின்ற வரை, தி.மு. கழகத்தை எவராலும் அசைக்க முடியாது என்கின்ற செய்தியெல்லாம் நான் படித்த போது  கலைஞர் மீது, இதுவரை இருந்த அன்பையும் மரியாதையையும் விட இப்போது ஒரு நூறு மடங்கு கூடிவிட்டதாகக் கருதுகிறேன். இவ்வளவு திறமை மிக்க தலைவரையும் நேரிலே சந்தித்துப் பேசிவிட்டு வந்து விட்டோமே என்று என் மீதே நானே பொறாமைப்பட்டுக் கொள்ளவே தோன்றுகிறது.


   எத்தனை தலைவர்கள் இருந்தாலும் , கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் இதுவரை பிறக்கவேயில்லை என்பது நூறு சதவிகித உண்மை.