Wednesday, April 8, 2015

நாகூர் ஹனீபா புகழ் ஓங்கட்டும்!!

இன்று முழக்குவது போல் இசையொலியை அன்று முதல் அழைக்காமலே வந்து,, என்றவுடன் கூட்டத்தில் சிரிப்பொலி ஆர்ப்பரிக்கிறது,, இசை முரசைத் தரவிருக்கும் நாகூர் ஹனீபா வுக்கும் வணக்கம் என தலைவர் கலைஞர் அவர்களின் இளங்கால பேச்சொன்றிலே கேட்கின்ற போது அய்யா ஹனீபா அவர்கள் மீது அவர் பாடிய பாடல்களைக் கேட்ட போதெல்லாம் வராத பாச உணர்வு அதைக்கேட்டது முதல் மேலோங்கியது.

   திருச்சி மாநாட்டிலே கொட்டித் தீர்த்த மழையில் வெள்ளக்காடாய்க் கிடந்த மாநாட்டுப் பந்தலுக்குள் கலைஞர் தன் வேட்டியை முழங்காலுக்கு மேலே ஏற்றிக் கட்டி வீறு நடை போட்டு வந்த போது தான் ஹனீபா "ஓடி வருகிறார் உதயசூரியன், எந்தன் உள்ளமெல்லாம் கொள்ளை போகவே ஓடி வருகிறார் உதயசூரியன்" என்று பாடலை முதன் முதலாகப் பாடிய போது ஒட்ட மொத்த மாநாட்டுப் பந்தலும் ஆர்ப்பரித்துப் போனதாய் எங்களூர்க் கழகத்தவரொருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  இப்போதும் எங்கள் ஊர் கழக நிகழ்வுகளில், ஓடி வருகிறார் உதயசூரியன்,  உடன் பிறப்பே ஓடி வா,, ஆறிலும் சாவு நூறிலும் சாவு,, அண்ணா என்பதும் ஒருவரைத் தான், கற்பூரக் கனல் வார்த்தைக் கலைஞர் சொல்லட்டும் போன்ற பாடல்களை ஒலிபெருக்கியிலே ஒலிக்கவிட்டு, தெருவிலே வெள்ளுடை உடுத்தி வீராப்பு நடை போட்டு வருகின்ற போது எனக்கு கிடைக்கின்ற உற்சாகம் கழகத்தின் வேறெதிலும் கிடைப்பதில்லை.

     அதே போல, என்னைக் கவர்ந்த ஹனீபா வின் இன்னொரு பாடல் "இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை, என்ற பாடல் நான் என்னுடைய எட்டாம் வகுப்பை கோவில்பட்டி அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கெல்லாம், குளித்துவிட்டு மைதானத்தில் வரிசையில் அனைவரும் ஒரு சேர வழிபாட்டுப் பாடலாக பாடிய பாடல் என்னை சிறுவயதிலேயே மிகவும் கவர்ந்தது. இன்னமும் அந்தப் பாடலை எங்கேனும் கேட்டால் எனக்கு அப்பள்ளியின் நினைவுகள் நிழலாடத் துவங்கி விடும்.

  இச்சீர் மிகு ரசிப்புத் தன்மை கொண்ட கழகப் பாடல்களையும், இறைவணக்கப் பாடல்களையும் பாடிய ஹனீபா வின் உடல் மறைந்து விட்டது. மறைந்தாலும் தன் பாடல்களின் மூலம் நீங்காப் புகழ் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசன், வாலியைப் போல அவரும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

   சிம்மக்குரலோன் நாகூர் ஹனீபா புகழ் ஓங்கட்டும்.

No comments:

Post a Comment