Saturday, April 4, 2015

நடப்பது ஆட்சியல்ல, காட்சியே!!

கடந்த டிசம்பர் மாதம் இருபதாம் தேதி காலை பத்து மணிக்கு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராசபாளையம் திருவள்ளுவர் நகரைச் சார்ந்த சங்கர் என்பவரின் மகள் ஹன்சினி தனியார் மருத்துவமனை ஒன்றிலே அனுமதிக்கப்பட்டு உயிர் பிரிந்த போது, இராசபாளையத்தில் டெங்குக் காய்ச்சல் பரவியிருக்கிறதென்பதும், அதைத் தொடர்ந்து இருபத்தைந்துக்கும் அதிகமான குழந்தைகள் இறக்கப் போகின்றனர் என்பதும் இராசபாளையத்தில் வாழ்கின்ற எந்த மக்களுமே நினைத்துக் கூட பார்க்காத ஒன்று தான்.

Rajapalayam Dengueஅந்தக் குழந்தை இறந்த இரண்டாவது நாள் தான் தி இந்து நாளிதழில் "இராசபாளையத்தில் மர்மக்காய்ச்சல் குழந்தை பலி" என்ற தலையங்கத்தில் வந்த செய்தியைப் படித்த போது தான் அனைவருக்கும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டது. அந்த செய்தி வந்த அதே நாளில் சத்திரப்பட்டி ரோடு ரயில்வே கேட் அருகே, ஒரு குடும்பம் இறந்த குழந்தையோடு சாலை மறியல் செய்த போது தான் ராசபாளையத்தில் என்ன நடக்கிறது என அனைவரும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கத் தொடங்கினோம்.

அதே வாரத்தில் மூன்று குழந்தைகள் பலியாயினர். இப்படியாகப் பலியாகிக் கொண்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டு இராசபாளையத்தையும் அதன் சுற்று வட்டார கிராம மக்களையும் நிலைகுலையச் செய்து விட்டது இந்த டெங்குக் காய்ச்சல்.

இராசபாளையத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதற்கான காரணமென்ன என ஆராய்ந்தோமேயானால், அங்கே முழுக்க முழுக்க குற்றவாளியாக நிற்பது இராசபாளையம் நகராட்சியும் அதன் நிர்வாகமும் தான். நகராட்சியின் நீர்நிலைத் தொட்டிகளை சரிவர சுத்தப்படுத்தாமையும், இராசபாளையத்திற்கு மேற்கே அய்யனார் கோவில் பகுதியில் இராசபாளையம் நகர முழுமைக்கும் குடிநீர் ஆதாராமாக விளங்கக் கூடிய நீர்த்தேக்கத்தை சரிவரப் பராமரிக்கமல் இருந்ததுமேயாகும். இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். திருவள்ளுவர் நகரைச் சார்ந்த ஹன்சினி என்ற டெங்குவிற்குப் பலியான குழந்தையின் வீட்டின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானம் முழுமைக்கும் பார்த்தீனியச் செடிகள் முளைத்து, பகல் பனிரெண்டு மணிக்குக் கூட பயங்கரமான கொசுத் தொல்லை இருந்தும் அதைப் பராமரிக்காமல் விட்டு விட்ட பினாமி அ.தி.மு.க அரசு நிர்வாகம் மட்டுமே இதற்கு முழுக் காரணமாகும்.

இப்படித் தொடர்ந்து குழந்தைகள் இறந்து கொண்டிருந்த போது, இந்த மாவட்டத்திலும் பினாமி அ.தி.மு.க அரசின் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றார்களே, இந்தத் தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறாரே, அவர்களெல்லாம் எங்கே சென்றார்கள் என உங்களுக்கு ஏற்படக் கூடிய ஐயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினரும் ஆறு குழந்தைகள் இறந்து முடிந்திருந்த வேளையில், இதையெல்லாம் துளி கூட கண்டு கொள்ளாமல், தேவதானத்திலே உள்ள பெத்தனாட்சியம்மன் கோவிலுக்குத் தொண்டர்களுடன் பாலாபிசேகமும் பட்டாபிசேகமும் சிறப்பு வேள்வி பூஜையும் செய்து, சொத்துக் குவிப்பு வழக்கிலே பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, நூறுகோடி ரூபாய் அபராதமும் நான்காண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்ட ஜெயலலிதா விடுதலை பெற்று, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அடடே,, என்னே அமைச்சர்களின் பணியென்று நீங்கள் வியந்து பாராட்டுவீர்களென நினைக்கிறேன்.

மடிகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இராசபாளையத்திற்கு வந்தார். அ.தி.மு.க வின் கொடி பறக்கும் கார்களின் எண்ணிக்கை இராசபாளையத்தில் அதிகமானது. நாங்கள் எல்லாம் இங்கே தான் இருக்கிறோம் தயவு செய்து பயப்படாதீர்கள் உங்கள் குழந்தைகள் இறந்து போனால், அதற்கு அரசாங்கத்தில் இருந்து நிதி கொடுத்து விடுவோம் என்கின்ற ரீதியாக கொசுவை ஒழிப்பதற்கும் மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல், ஊர்வலம் போகத் தொடங்கினர். அய்யோ அமைச்சர்களல்லாவா வருகிறார்களென டெங்குக் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளுமா என்ன? ஆனால் எத்தனை இறந்த குழந்தைகளின் குடும்பங்கள் அரசாங்க இழப்பீட்டு நிதியைப் பெற்றிருக்கின்றனர் என்பது முயலுக்குக் கொம்பு முளைத்த கதை தான்.

அதே போல இராசபாளையத்திலே உள்ள அதிகாரிகளும் அலுவலர்களும் மருத்துவர்களும் வேகமாக இயங்கத் தொடங்கினர். இராட்சத கிரேன் இயந்திரங்களைக் கொண்டு நகரின் பிரதான சாலைகளிலும், மக்கள் அதிகம் நடமாடும் வீதிகளிலும் உள்ள சாக்கடைக் கழிவுகளும், குப்பைகளும் அகற்றப்பட்டன. இப்படிச் செய்யப்பட்ட வேலைகளினால் ஒரே வாரத்தில் இராசபாளையம் நகராட்சியில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரக் கணக்கான மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த ஒரு தகவலிலிருந்தே நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்றரையாண்டுகளாக எப்படிச் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்தப் பணிகளினால் நகர் முழுவதும் ஐம்பது சதிவிகிதமே சுகாதாரம் செய்யப்பட்டிருக்கிறது என்றொரு தகவல் நகரமக்களிடம் இருந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.

வேலைகள் தான் முடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே, உயர்ந்த மருத்துவக் குழுக்கள் எங்கள் நகருக்கு வந்து விட்டதே, இறப்புக்களின் எண்ணிக்கை குறைந்ததாயென்றால், பதிமூன்று பதினைந்தானது . பதினைந்து பதினெட்டானது, பதினெட்டு இருபத்தி இரண்டு ஆனது.

இவையெல்லாம் அரசு மருத்துவமனை சொல்கின்ற கணக்குகளே. இது போக தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே மடிந்து போன பிஞ்சுகளின் பெயர்களெல்லாம் இங்கே கணக்கில் இல்லை.

மக்களும் ஒரு புறம் தங்களின் எதிர்ப்புகளை மிகக் கடுமையாகப் பதிவு செய்து கொண்டே இருந்தனர். இப்படியாக இராசபாளையம் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் இறந்த குழந்தையின் உறவினர்கள் செய்த சாலை மறியலில் போலிஸ்காரர்கள் பெண்களின் பிடரியைப் பிடித்து இழுத்து அடித்ததும், அதைப் பார்த்து கொந்தளித்துப் போன இளைஞரொருவர் தெற்குக் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்ததும், அந்த இளைஞரை காவல் துறையினர் நைய்யப் புடைத்ததும் அனைவரும் அறிந்ததே.

பின்பொரு நாள் யூனியன் அலுவலகம் அருகே தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடி நகரமே திரும்பிப் பார்க்கின்ற வண்ணம் மாபெரும் சாலை மறியலொன்றை இயங்கயியலாத பினாமி அரசாங்கத்தைக் கண்டித்து செய்து, இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுக் கிடந்ததென்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதைச் செய்தியாக்காமல் மூடி மறைத்து அரசாங்கத்திற்குப் பெரும்துணையாக இருக்கும் ஊடகங்கள் தங்கள் நடுநிலையின் நிலையை அனைவரும் அறியும் வண்ணம் நடந்து கொண்டது தனிக்கதை.

இறுதியில் குளிர்பனியின் தாக்கம் குறைந்து போனதால் டெங்குக் காய்ச்சலின் வீரியமும் குறைந்து போனது. டெங்குக் காய்ச்சல் என்பது ஒரு சீசன் போல வந்து போன பின்னர் இங்கே வைரஸ் காய்ச்சல் தொற்றிக் கொண்டது.

வைரஸ் காய்ச்சலுக்கும் டெங்குக் காய்ச்சலுக்கும் உரிய உயர்தர மருத்துவத்தைத் தராமல், இராசபாளையம் காந்தி சிலை அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையை வெள்ளையடித்து, வண்ண அலங்கார விளக்குகள் தொங்க விட்டு, வண்ணக் கொடிகள் அழகாக பறக்க விட்டு, இன்னும் சொல்லப் போனால் அலங்காரத் தோரணைத் துணிகளையும் கூட தொங்க விட்டு அரசு மருத்துவமனையை அலங்கார மருத்துவமனையாக, ஏதோ கல்யாண வீடு போல ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசாங்க வரலாற்றிலே முதல்முறையாக இருபத்தைந்துக்கும் அதிகமான குழந்தைகளைப் பலி கொண்ட, காப்பாற்ற இயலாத அரசு மருத்துவனை இவ்வளவு அலங்காரம் செய்யப்பட்டிருப்பதேன்???

நாங்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டிருக்கிறோம். இங்கே வந்த எல்லாக் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டு விட்டனர். ஆக நாங்கள் நல்லாட்சி தான் நடத்திக்கொண்டிருக்கிறோம், பார்த்தீர்களா,, அரசு மருத்துவமனை எவ்வளவு அலங்காரமாக ஜொலிக்கிறது என்று காட்சிப்படுத்த மட்டுமே இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராசபாளையம் மக்களை அ.தி.மு.க அரசாங்கம் எவ்வளவு முட்டாளாக்குகிறது பார்த்தீர்களா!!

இதுதான் அ.தி.மு.க அரசாங்கத்தின் இன்றைய லட்சணம். உரிய மருத்துவத்தைக் கொடுத்து நோயாளியாகிக் கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதை விட்டு, இப்படியெல்லாம் மருத்துவமனையை அலங்காரம் செய்து, மக்களை மனநோயாளியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பிரச்னைகளுக்கான தீர்வுகள் இப்படியே காட்சிப்படுத்தப்படுகின்றன. முறையான உரிய தீர்வுகள் இல்லை. நடப்பது ஆட்சியல்ல, வெறும் காட்சி தான் என்பது இந்த ஒரு விசயத்தில் இருந்தே தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுமென உறுதியாக நம்புகிறேன்.

மாற்றங் காண வேண்டியது மக்கள் கையில் தான் உள்ளது.

No comments:

Post a Comment