நான் இராசபாளையத்துக்காரன். எங்கள் சட்டமன்ற தொகுதி கிட்டதட்ட பதினைந்து ஆண்டு காலமாக இராசகோபால், சந்திரா,, கோபால்சாமி என மூன்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறது. மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை அ.தி.மு.க விற்கு தொடர்ந்து தந்த எங்கள் இராசபாளையம் நகரமும் அதைச்சுற்றிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளும் பதினைந்து ஆண்டுகளில் எத்தகைய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. எப்படிப்பட்ட மகத்தான திட்டங்களை எல்லாம் இங்கே செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எங்கு சுற்றிப் பார்த்தாலும் இந்த தொகுதியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான எவ்வித பணிகளும் இங்கு நிறைவேற்றப்படவே இல்லை என்பது நிதர்சனமாகிறது.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், சிறுமழை பெய்தாலும் வெள்ளம் போல் பெருகின்ற இடமாக எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் , நகரின் மையப்பகுதியான காந்தி சிலை ரவுண்டானா இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் பாதாள சாக்காடைத் திட்னங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஒரு லட்சத்திப் பதினோராயிரம் வாக்குகளும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக உள்ள மக்கள் தொகையும் முதன்மை நிலை நகராட்சியான இராசபாளையத்தில் இதுவரை பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை. ஆனால், அ.தி.மு.க விடுகின்ற ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளிலும், வாக்குக் கேட்டு வருகின்ற போதும் தவறாமல் அ.தி.மு.க வினர் விடுகின்ற வாக்குறுதியாக இந்த பாதாள சாக்கடைத் திட்டம் இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து வெற்றி பெற்றும் அ.தி.மு.க சட்டமன்ற பிரதிநிதிகள் பாதாள சாக்கடை கட்ட இதுவரை சிறு கல்லைக் கூட எங்கும் எடுத்துப் போடவில்லை.
இரண்டாவது, தொகுதியின் மிக முக்கியப் பிரச்சனை குடிநீர்ப் பிரச்சனை. தாமிரபரணிக் குடிநீர் இதோ வந்துவிட்டது, அதோ வந்துவிட்டது, அதற்காக இத்தனை கோடி ஒதுக்கிய அம்மாவுக்கு நன்றி என்பது போன்ற விளம்பர பேனர்களைத் தான் தாமிரபரணிக் குடிநீரை எதிர்பார்த்த மக்கள் கண்டு கொண்டிருக்கிறோமே தவிர, தாமிரபரணி நீரை இன்னமும் நாங்கள் குடித்தபாடில்லை. தாமிரபரணி நீர்கூடவேண்டாம், இராசபாளையம் நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க மேற்குத் தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் பகுதியில் "இரண்டாம் நிலை நீர்த்தேக்கம்" அமைப்பதற்கான திட்டமிடல் 96-2001 தி.மு.க ஆட்சியிலேயே அப்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய வி.பி.இராசன் அவர்களின்
முயற்சியால் முடிக்கப்பட்டிருந்தாலும் அதன்பின் இதுபற்றி பேசுவதற்கு சட்டசபைக்கு இராசபாளையம் சார்பில் ஒரு சரியான பிரதிநிதியை எங்கள் மக்கள் அனுப்பாததாலேயே இத்திட்டம் இன்று வரை கிடப்பில் கிடக்கிறது. இத்திட்டம் ஒன்று மட்டும் நிறைவேறினாலே போதும், இராசபாளையத்தில் எவ்வளவு பெரிய கோடையிலும் குடிநீர்த்தட்டுப்பாடு அறவே இருக்காது.
மூன்றாவதாக தமிழகத்தின் குட்டி ஜப்பான என்று வர்ணிக்கப்படக்கூடிய சிவகாசிக்கு இணையான எங்கள் இராசபாளையம் தொகுதிக்குட்பட்ட தளவாய்புரத்தில் எத்தனையோ தொழில் முன்னேற்றங்கள் இருந்தும், அந்நகரில் எவ்வித வளர்ச்சியும் கொண்டு வராமல், அங்கே நலிந்து போன விசைத்தறி மற்றும் சாயப்பட்டறை தொழிலாளர்களுக்கு உதவுகின்ற வண்ணமும், அவர்களுடைய வாழ்க்கையினை மேம்படுத்துகிற வகையில் எவ்வித திட்டமும் கொண்டு வராமல் அவர்களைக் கண்டு கொள்ளவே செய்யாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறது பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து அ.தி.மு.க விற்கு வாக்களித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களின் ரதங்கள். தளவாய்புரம் செட்டியார்பட்டி பகுதிகளில் இதுவரை நல்ல சாலைகள் கூட அமைக்காப்படாதது இந்த எம்.எல்.ஏ க்களின் லட்சணம்.
நான்காவதாக இராசபாளையம் நகராட்சிக்கான புறவழிச்சாலை. தற்போதுள்ள கோபால்சாமி எம்.எல்.ஏ வந்த பின்பு கூட எத்தனையோ முறை நாளேடுகளில் செய்திகள் வந்த போதும் கூட, அப்பாட கோபால்சாமியாச்சும் நம்ம ஊருக்கு பைபாஸ் ரோடு போட்டுருவாருய்யா என் நம்பிக் கிடந்த மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் தான், ஏனெனில் இன்றோடு அவருடைய பதவிக்காலமும் முடிந்து விட்டது. ஆனால் இது குறித்த திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதை மத்திய அமைச்சர் மதிப்பிற்குரிய அய்யா டி.ஆர்.பாலு அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறவழிச்சாலை தொடங்கி, தேவதானம் கோவிலூரை அடுத்து நெல்லை மாவட்டத்தோடு இணைவதாக இத்திட்டம் தீட்டப்பட்டிருந்த நேரத்தில் ஆட்சி மாறியதால் காட்சிகளும் மாறியது.ஆனால் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு நகரின் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்பட அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன.
அடுத்து, இராசபாளைநம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்ற கோபால்சாமி எம்.எல்.ஏ வும் நகர்மன்றத் தலைவர் தனலட்சுமியும் அங்கே சுற்றி சுற்றிப் பார்த்தது தான் மிச்சம்.
ஆனால் இதுவரையிலும் அங்கே சுற்றுலா தளம் அமைய எவ்வித பணிகளும் தொடங்கவில்லை. அப்பகுதி சுற்றுலா தளமாக அமைந்தால் எங்கள் இராசபாளையம் சின்னக் குற்றாலமாய் மாறும். அந்தளவிற்கு அப்பகுதி பொலிவுற அமைந்திருக்கிறது. ஆக இத்திட்டமும் கிடப்பில் தான் கிடக்கிறது.
முல்லை பெரியாறு அணைக்குச் சமமான ஒரு அணையை எங்கள் இராசபாளையம் பகுதியில் அமைக்க அன்னை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, திட்டம் தீட்டப்பட்டு, அவர் இப்பகுதியை பார்வையிட இருந்தது.திடீரென வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் அவர் இங்கு வரவில்லை. அத்திட்டம் அத்தோடு ஒத்தியும் வைக்கப்பட்டதெனவும், அம்மையார் வந்து அப்பகுதியைப் பார்வையிட வருவதற்காக போடப்பட்ட சாலை தான் தேவதானம் சாஸ்தா கோவில் சாலை என எங்களூர்ப் பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்திராகாந்தி விரும்பிய அதே இடத்தில் ஒரு அணையைக் கட்டி, தேவதானம் முகவூர் மற்றும் இதற்கடுத்துள்ள பகுதிகளில் தண்ணீர்ப் பிரச்சனை இல்லாமல் செய்தது எங்கள் தி.மு.க வை இம்மக்கள் வெற்றி பெற செய்த அந்த நேரத்தில் தான். அப்படி தி.மு.க ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட அணை தான் சாஸ்தா கோவில் அணை.
ஆக, பதினைந்து ஆண்டு காலம் நம் பகுதி எவ்வித வளர்ச்சியும் இல்லாமல், ஏன் சாலை வசதிகள் கூட சரிவர இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நம் தொகுதி மக்கள் ஒரு சரியான நபரை நமக்கான பிரதிநிதியாக சட்டசபைக்கு அனுப்பாததே மிக முக்கியக் காரணம். ஆதலால், குனிந்து கும்பிடுபோடுவோரைத்தான் இந்த முறையும் நமக்கான பிரதிநிதியாக இராசபாளையம் பகுதி மக்கள் அனுப்பவேண்டுமா அல்லது கூன் நிமிர்த்தி, குரலுயர்த்தி இராசபாளையம் மக்களுக்காக சட்டசபையில் ஓங்கி ஒலிப்போரை அனுப்ப வேண்டுமா என்பதை முடிவு செய்து வைத்திருங்கள். ஏனெனில் இன்று அதற்கான தேதியையும் நேரத்தையும் குறித்து விட்டார்கள்.
நல்லதொரு முடிவெடுங்கள். தி.மு.க பிரதிநிதிகள் உங்களுக்காக உழைக்க உங்கள் உத்தரவு கேட்டு உங்கள் வீட்டு வாசலுக்கு வருகிறோம். உத்தரவைக் கொடுத்தனுப்புங்கள். உழைத்து உழைத்து நம் பகுதியை உயர்த்துகிறோம்.
No comments:
Post a Comment