கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா,,, நான் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற முழு ஆவலோடு தான் எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதிய "கச்சத்தீவு" புத்தகத்தை வாங்கினேன். முழுமையாகப் படித்தேன்.
கச்சத்தீவு அம்மையார் இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கலைஞருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. 1974 ஜூன் மாதம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட உடனே,, ஜூலை மாதத்தின் முதல்வாரத்திலே ஆட்சியில் இருக்கிற கலைஞர் மாநிலம் முழுவதும் நாற்பத்தைந்து இடங்களில் மாபெரும் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறார். தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய செழியன், முரசொலிமாறன், மாதவன் போன்றோர் நாடாளுமன்றத்தில் கடுமையாய் தங்களின் குரல்களை எழுப்புகின்றனர். கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்திராகாந்தி அம்மையாரோ, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், மாநில அரசைக் கேட்காமல் தெற்காசிய நாடுகளில் தன்னைப் பெருந்தலைவராக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்கிற காரணத்துக்காக பக்கத்து நாடுகள் தன்னுடைய தலையசைவின் கீழ் வரவேண்டும் என்கிற அரசியல் ஆதாயத்துக்காக, அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
இது நடந்த சில மாதங்களிலேயே இந்நிராகாந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்தில் வருகிறது. அம்மையார் நெருக்கடி நிலையை அமல்படுத்துகிறார். நாடு முழுவதும் மாநிலக் கட்சிகள் ஒடுக்கப்பட்டன. கலைஞரின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. கச்சத்தீவுக்கான போராட்டங்கள் திசைமாற்றப்பட்டன.
அதற்குப் பின்னால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைகின்றது. 1977 லே நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராகிறார். அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் அவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவான ஆட்சி மத்தியில் இருந்த போதும் அவர் கச்சத் தீவு பற்றி வாயே திறக்கவில்லை. இதற்கிடையிலே தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கச்சத்தீவு விவகாரத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
நிற்க.
முதலில் கச்சத்தீவு இந்தியவுக்கும் இலங்கைக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை. இதில் இரண்டு நாட்டு அரசுகளும் தான் முடிவெடுக்க வேண்டும். அப்படியெடுக்கப்பட்ட முடிவுகள் கூட அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, நாடாளுமன்றங்களை புறந்தள்ளி தனியொருவரான இந்திராகாந்தி அம்மையாரின் முடிவோடு மட்டுமே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் தன்னுடைய கோரிக்கைகளை, கண்டனங்களை, எதிர்ப்புகளை மத்திய அரசிடம் எந்தளவிற்குக் கொண்டு செல்ல முடியுமோ அந்தளவிற்குக் கொண்டு சென்றார். ஆனால் இந்திராகாந்தி சில அரசியல் ஆதாயங்களுக்காக தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டு சர்வாதிகாரப்போக்கோடு கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டார்.
அதே நேரத்தில் நெருக்கடி நிலையையும் அமல்படுத்தி கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்துவிட்டார்.
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் இந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலும் கச்சத்தீவு விவகாரத்தில் கலைஞர் பின்வாங்கினார் என்றோ அமைதி காத்தோர் என்றோ புத்தகத்தின் எந்த வரியிலுமே இல்லாததைக் கண்டு, நான் அறிந்து கொண்ட விசயம் "கலைஞர் என்றால் சிலருக்குக் கிள்ளுக்கீரையாகப்படுகிறார்" என்பது மட்டுந்தான்.
ஒன்றே ஒன்றை மட்டும் இதைப்படித்து முடித்த போது, நான் உணர்ந்து கொண்டேன்,,, நெருக்கடி நிலை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தாலோ அல்லது மாநில அரசு இந்த விசயத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்ற ஒரு நிலை இருந்திருந்தாலோ இந்த விசயத்தில் கலைஞர் தன்னுடைய முழுவீரியத்தையும் காட்டியிருக்க முடியும்.
மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தித் திணிப்பு விவகாரத்தில் இருமொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் வகுத்து விட்டு,, "நான் என்னாலானதைச் செய்து விட்டேன், மத்திய அரசு தன்னாலானதைச் செய்து கொள்ளட்டும்" என்றொரு முடிவை எடுத்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.
கச்சத்தீவைத் தாரைவார்த்து தமிழர்களுக்குத் துரோகம் செய்தது கலைஞர் அல்ல,, சர்வாதிகாரியாகச் செயல்பட்ட அம்மையார் இந்திராகாந்தி என்பது வார்த்தைஜாலம் அல்ல வரலாறு.