Tuesday, December 23, 2014

2014 ம் அரசியலும்

மோடி அலையின் சீற்றம் தொடங்கிய நேரத்தில் அலைகளுக்குப் பின்னால் அழகுற உதித்த கதிரவன் போல் உதயமான 2014 ஆம் ஆண்டில் மத்தியிலும் மாநிலத்திலும் எத்தனையோ பெரிய மாற்றங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கின்ற அளவிற்கு நிகழ்ந்து விட்டன என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2014 ஆம் ஆண்டு  வரலாற்றில் தன் திமிலை உயர்த்தி நிற்கப் போகிறது.

      அமைச்சர்கள் மாற்றம் அதிகாரிகள் மாற்றம் அதைத் தொடர்ந்து அவ்வப்போது சிறு சிறு நலத்திட்டங்கள் என்று மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த மாநில அரசில்  மாபெரும் இடி விழுந்த ஆண்டும் இந்த 2014 தான். அதே போல், எந்தவொரு இந்தியனும் எதிர்பாராத விதமாக மாபெரும் வெற்றியைக் குவித்து காங்கிரசைக் கசக்கிப் பிழிந்தெறிந்து ஆட்சிக் கட்டிலில் பா.ஜ.க அமர்ந்ததும் இந்த 2014 ல் தான்.
   
    நாடு முழுவதும் மோடி அலை வீசியிருந்தாலும், தமிழ்நாட்டில் அது செல்லாக்காசய்ப் போய், திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில் எந்த சுனாமியும்  கூட, தமிழகத்தைத் தாக்கி விட முடியாது என நிரூபிக்கப்பட்டதும் இந்த 2014 ல் தான். அதேபோல், நான் சார்ந்த திராவிட முன்னேற்ற கழகம் வரலாறு காணாத அளவில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்ததும் இந்த ஆண்டு தான். எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும், அதற்கெல்லாம் அஞ்சி நிற்காமல், தி.மு.க எனும் மாபெரும் இயக்கம் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி பீடு நடை போடுவதும் இதே ஆண்டில் தான்.

      பதினெட்டு ஆண்டுகளாக கன்னித் தீவு தொடர்கதை போல இழுத்துக் கொண்டே வந்த வழக்கை, சட்டென நிறுத்தி அதற்கென ஒரு தீர்ப்பையும் வழங்கி,  காழ்ப்புணர்ச்சியின் மொத்த அடையாளமான ஜெயலலிதாவிற்கு நூறு கோடி அபராதமும், நான்காண்டு சிறைத்தண்டனையும் விதித்து, ஒட்டுமொத்த இந்தியாவும் பார்வையையும் தன் வசம்  மதிப்பிற்குரிய நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா திருப்பியதும் இதே 2014 ல் தான். அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று என் போன்ற இளம் தலைமுறையினர் அ.தி.மு.க வினர் செய்த அட்டூழியங்களைக் கண்ணெதிரே கண்டு மனம் புழுங்கிக் கொண்டு நடந்து சென்ற காட்சிகளும் இதே ஆண்டில் தான் அரங்கேற்றப்பட்டன.

         தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதவியேற்ற முதல்வர்கள் பலர், இந்த தமிழ்நாட்டை நான் காப்பேற்றியே தீருவேன் என்கின்ற வெறியோடு பதவியேற்றதைப் பார்த்த மக்கள், ஒரு வித குதூகலிப்போடு முதல்வர்கள் பதவியேற்றதைப் பார்த்த மக்கள், நான் இந்தப் பதவியை நான் ஏற்கிறேனே, இதைக் காப்பாற்றி விடுவேனா என்கின்ற பதட்டத்தோடு பதவியேற்றவர்களைப் பார்த்த மக்கள்,  உலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஊழல் குற்றவாளி தண்டிக்கப்பட்டதற்காக அழுது கொண்டே ஒரு முதல்வரும், அதைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் பதிவியேற்றதை  மக்கள் பார்த்ததும் இதே 2014 ல் தான்.
      
        நம் சட்டமன்றத்தில் ஓமந்தூரார்,காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,  கலைஞர் என எத்தனையோ முதல்வர்களை முதல்வர் அரியணையில் அழகுறப் பார்த்த தமிழ்நாட்டு மக்கள் முதன் முறையாக "முதல்வர் நாற்காலி"யில் கூட உட்காரத் தயங்கிய முதல்வரைப் பார்த்திருக்கிறது என்றால் அது மிகையாது.
  
     முதல் முறையாக தமிழ்நாட்டு மக்கள், ஒரு மாநிலத்திற்கு இரண்டு முதல்வர்களைப் பாரத்ததும் இந்த ஆண்டு என்பதை மறக்க முடியாது. ஆம், ஒன்று தமிழக முதல்வர், இன்னொன்று மக்கள் முதல்வர், ஹாஹா,, தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு கொடுத்து வைத்த மக்கள்.

      மாநிலத்தில் தான் இத்தனை களேபரங்கள் நடந்து முடிந்து விட்டனவே. மத்தியில் என்ன நடந்தது என்பதை விட்டுவிட்டீர்களே என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை.

     ஊழலை ஒழித்தே தீருவேன். கருப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பேன். இந்திய நாட்டை வல்லரசு நாடாக்குவேன் என்றெல்லாம் பேசி விளம்பரங்கள் பல செய்து இந்தி நாட்டில் ஆட்சியைப் பிடித்து விட்டு, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையே மறந்து விட்டு, இந்து மதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

    அதைவிடக் கொடுமை என்னவென்றால், இலங்கையிலே வாழந்த தமிழின மக்களைக் கொன்று குவித்து, இன்று வரை வடக்கு மாகாணத்திலே வாழக் கூடிய மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கும் ராஜபட்சேவை தன் பதவியேற்பு விழாவிற்கு சிம்மாசனம் கொடுத்து அமர வைக்கிறார். அதே ராஜபட்சேவை நீங்கள் தான் அடுத்த முறையும், இலங்கையின் அதிபராக வேண்டுமென்று வாழ்த்து தெரிவிக்கிறார். அது மட்டுமா, அரச மரியாதையோடு அழைத்து வந்து திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் வேறு. இந்த இடத்தில் தான் காங்கிரசை எண்ணி, அடச்சே,,, இந்த காங்கிரஸ்கிரன் எவ்வளவோ தாவலடா,,, என்று தமிழ் மக்கள் எண்ணாமல் இல்லை.

     பகவத் கீதையை தேசிய நூல் என்கிறார். இந்தியை மீண்டும் திணிக்க வருகிறார் எதிர்ப்பு கிளம்பியவுடன் அப்படியே அமுக்கிக் கொள்கிறார்.

     மதச்சர்பற்ற நாட்டின் பிரமராக இருந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைக் கூலியாகச் செயல்படுகிறார்.  அடுத்து, பிரதமர் மோடி பதவியேற்ற நாள் முதல், இன்று வரை அதிக நாட்கள் எங்கே இருந்திருக்கிறார் என்றால் சத்தியமாக இந்தியாவில் இல்லை. நட்பு நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் என்கிறார். யாருடைய செலவில் என்றால் மூத்த தொழிலதிபர்களின் செலவில் சென்று, இந்திய நாட்டின் அரசு நிறுவனங்கள் எத்தனையோ நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்க, அயல் நாட்டு வங்கியில் இருந்து, இந்தியத் தொழிலபதிர்களுக்கு, குறிப்பாக அதானி குழுமத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகளைக் கடனாகப் பெற்றுக் கொடுத்து, அயல் நாட்டு வங்கிகளுக்கும், டாட்டா பிர்லாக்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதற்காககவா இந்திய நாட்டு மக்கள் இவரைப் பிரதமராக்கினார்கள்.

        இப்படி பலவித விசமத்தனமான செயல்களில் பிரதமர் ஈடுபட்டுக் கொண்டிருக்க, விளம்பரத்தை நம்பி வாக்களித்து இப்படி ஏமாந்து போய்விட்டோமே என்று புலம்பத் தொடங்கி விட்டார்கள்.

         இந்த நிலையில், இனி வரக்கூடிய ஆண்டாவது யாவருக்கும் நலம் பயக்கும் ஆண்டாக அமையட்டும் என்கின்ற வாழ்த்துக்களோடு, விளம்பரமிருந்தால் போதும், இந்திய நாட்டின் பிரதமராகக் கூட ஆகலாம் எனும் எண்ணத்தை ஈடேற்றிக் காட்டிய பிரதமர் மோடி இனியாவது, இந்துத்துவா கொள்கைகளை விட்டு விட்டு, இந்தியத்துவா கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென்ற  முன்மொழிதலோடு தொடர்கிறேன்.

   நன்றி!!

No comments:

Post a Comment