Wednesday, March 12, 2014

ஜெயலலிதாவின் உண்மை முகம் !!!

மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதா விரித்திருக்கும் மாயக்கம்பளம்,மயக்கம் தருகிறது. முதலில் தலைசுற்ற வைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த அவர் எடுத்திருக்கும் உறுதி.2008-09 ல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகாசமுத்திரத்தை மூழ்கடித்த போது "ஈழம்" என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டார்களே? என்று ஜெயலலிதாவிடம்(18-1-09) கேட்கப்பட்ட போது, 'அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத்தமிழர்கள் என்பது தான் அரசியிர் ரீதியில் அலுவல் ரீதியில் சொல்லப்படுகிறது' என்று வியாக்கியான வகுப்பெடுத்தவர்.

'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்பலிகள்,  வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்' என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.

'மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம், தி.மு.க அதை தட்டிக்கேட்கவில்லை என்று இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, 'இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது(16-10-08) என்றும் சொன்னவர். போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்' என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். சிங்களப் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுப் புல்லரித்த போது தான் சிங்கள ராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் போட்டன. கொடூரம் கூடியது. தேர்தல் நெருங்கியது. தனது நிலைப்பாட்டை மாற்றியாக வேண்டிய நெருக்கடியில் ஜெ, ஈழத்தாய் வேடம் இட்டார். கருணாநிதிக்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த விவகாரம் என்பதால் அதனைக் கையில் எடுத்தார். ஆட்சியும் மாறியது. ஈழத்துக்கு ஆதரவான தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

தூக்கு விவகாரத்தில் கூட மாநில அரசால் இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்று முதல் நாள் சட்டமன்றத்தில் சொல்லிவிட்டு(29-8-11) செங்கொடி தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு அரங்கேறுவதைப்பார்த்தும், உயர்நீதிமன்றம் தடை கொடுக்கத் தயாராகிவிட்டதை அறிந்தும் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இப்போது ஏழு பேரை விடுதலை செய்யும் வேகத்தில் நிற்கிறார்.

விடுதலைப்புலிகள் இந்தியாவில் தடைசெய்ய நானே காரணம் என்று பெருமைப்பட்டவர், 'பிரபாகரனைக் கைது செய்ய ராணுவத்தை அனுப்பவேண்டும்' என்று ஆசைப்பட்டவர், கிட்னி செயல்படாத நிலையில் மரணப்படுக்கையில் கூட பாலசிங்கம் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்றவர், இப்போது ஈழத்தமிழர்கள் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இத்தகைய தீர்மானங்களை அரங்கேற்றுகிறார் என்பதை நம்ப எவரும் இல்லை. ஆனால் கடல் கடந்த மக்களைக் கருவறுக்க காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகள், இங்குள்ள தமிழர்களின் உதிரத்தில் அனலாகத் தகித்து வருவதை தேர்தல் நேரத்தில் அறுவடை செய்ய, ஈழம் தான் ஒரே வழி என்பதை ஜெயலலிதா கண்டுபிடித்திருக்கிறார்.

= ஆனந்த விகடன்
ஆல் இன் ஆல் அம்மா சொல்வதெல்லாம் சும்மா..

ப.திருமாவேலன்

No comments:

Post a Comment