Thursday, January 30, 2014

மு.க.ஸ்டாலின்-நெருப்பாற்றில் பூத்த குறிஞ்சி மலர்

ஆமாம், ஸ்டாலின் எங்கே போனார்? கழக அரசு கலைக்கப்பட்டவுடன் தலைமறைவாகச் செயல்படலாமா என்ற எண்ணம் சிட்டிபாபு போன்றவர்களுக்கு ஏற்பட்டது. அது கூடாது. 'தேடப்படுகிறவர்கள் கைதாக வேண்டும்.சிறை செல்ல வேண்டும்' என்று கலைஞர் அறிவுரை கூறினார்.

ஆகவே ஸ்டாலின் வீட்டில் பதுங்கி இருக்கவும் இல்லை, தலைமறைவாகச் செல்லவும் இல்லை.

மதுராந்தகத்தில் "முரசே முழங்கு" நாடகம் நடைபெற ஏற்பாடாக இருந்தது. அந்த நாடகத்தில் ஸ்டாலின் கலைஞராக நடிப்பார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நாடகம் ஆரம்பமாக வேண்டும். ஸ்டாலினும் மற்ற நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.

'கழக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டது' என்ற சேதி எட்டியது. எனவே நாடகமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அன்று இரவு ஸ்டாலின் மதுராந்தகத்திலேயே தங்கிவிட்டார்.

அரசியல் மாணவர் ஒவ்வொருவரும் சிறைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியாக வேண்டும்.  ஓர் அரசியல்வாதி புடம்போடப்படும் உலைக்கூடமும் அதுதான். தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் அதிக மார்க் போடுவர். அந்தப் பரீட்சை எழுத ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. அவர் வீடு வந்து சேர்ந்த போது தான், அந்த அழைப்பு காத்திருப்பது தெரிந்தது.

அதற்கு முன்னரே தலைமைக் கழக செயலாளர்களான ஆற்காட்டார், நீலநாராயணன், சிட்டிபாபு, செ.கந்தப்பன், கோவை ராமநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுதும் கைதுப்படலம் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தச் செய்திகளெல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அந்தக் கைங்கரியத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று  ஏடுகளுக்குத் உத்தரவிடப்பட்டது. எங்கெங்கே யார் யார் கைது செய்துப்பட்டனர் என்ற தகவல் வாய்மொழி செய்தியாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தது.

"காவல்துறையினர் உன்னைத் தேடுகிறார்கள். சிறைக்கோட்டப் பயணத்துக்குத் தயாராய் இரு!" என்று வீடு வந்த ஸ்டாலினிடம் கலைஞர் தெரிவித்தார். அவரும் குளித்து உடைமாற்றி விட்டுத் தயாரானார்.

அப்போது ஸ்டாலின் 23 வயது இளைஞர். மணம் முடித்து ஐந்தே நாள்கள் தான் ஆகியிருந்தது. அவருக்கு எப்படி இருந்திருக்கும்?

"நான் பத்து நாள் சுற்றுப் பயணம் செல்வதாக நினைத்துக் கொள். அதற்குள் வந்துவிடுவேன்",  என்று துணைவியாருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார். வசந்தத்தைத் துய்க்க வேண்டிய வானம்பாடிகள்  பிரிந்திருப்பது என்பது எவ்வளவு வேதனையான செயல்?

  அப்பா, அம்மாவை வணங்கி ஸ்டாலின் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.

  "ஸ்டாலின் வந்து விட்டான், அவனை அழைத்துப் போகலாம்" என்று கலைஞரே காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தகவல் தந்தார்.

   ஸ்டாலின் கைதாகப் போகிறார் என்கிற தகவல், காட்டுத் தீயாகப் பரவியது. எனவே, கழகத் தொண்டர்கள் அணை உடைத்த வெள்ளமாக வந்து கொண்டிருந்தனர். கோபாலாபுரம் மக்கள் கடலானது.

  முற்றத்தில் பேராசிரியர், நாவலர், ப.உ.ச, அன்பில், மாதவன் ஆகியோர் குழுமியிருந்தனர். அவர்களிடமும் ஸ்டாலின் விடைபெற்றார். வாயிலுக்கு வந்தார். உணர்ச்சிப் புயலாக திரண்டிருந்த தொண்டர்கள், ஆவேச முழக்கங்கள் எழுப்பினர். ஸ்டாலினை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தை மறித்தனர்.வெற்றிகொண்டான் தலைமையில் வீறுகொண்ட ஆர்ப்பாட்டம் அலைமோதியது.

ஸ்டாலினை எளிதாகக் கைது செய்துவிட்டனர். ஆனால் அவ்வளவு சுலபமாக கோபாலாபுரம் கடந்து அவரை அழைத்துச் செல்ல முடியவில்லை. காவல்துறை வாகனம் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்த போது கோபாலபுரம் மக்களும் தேம்பித் தேம்பி கண்ணீர் சொரிந்தனர்.

-சோலை
மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்.

No comments:

Post a Comment