தமிழகமெங்கும் லட்சக்கணக்கிலே பி.இ. பட்டதாரிகள், அறிவியல் பட்டதாரிகள் என பல்துறைப் பட்டதாரிகள் யாவரும் வேலையின்றித் தவிக்கிற நிலையில் இன்றைய தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் மிகக் குறைந்த ஊதியத்தில் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத துறையில் பணியில் இருக்கிறார்கள். வேதனையான செய்திதான் இது.
இன்றைக்கு பேருந்துகள் போகாத கிராமங்களில் இருந்தும் கூட பொறியாளர்களாக தமிழகத்தின் பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் வேதனை என்றாலும் கூட மறுபக்கம் இப்படிப்பட்ட மகிழ்ச்சியான சம்பவங்களும் கூட நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பல லட்சக்கணக்கான பொறியாளர்கள் தமிழகத்திலே உருவாகியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னோடு உடன்படித்த என் போலவே ஏழைக் குடும்பத்தில் பிறந்த நண்பன் கூட இன்றைக்கு பொறியியல் படித்து முடித்து அமெரிக்காவில் பணிபுரிந்து, அமெரிக்கக் குடியுரிமை வாங்குகிற அளவுக்கு வாழ்விலே முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். கல்வி தொடங்கிய காலத்தில் இருந்தே கணக்கிட்டாலும் கூட இத்தனை அசுர வளர்ச்சி எல்லோரும் பட்டதாரிகளாய் ஆனது கடந்த பத்தாண்டுகளில் தான். பணக்காரர்களும் அரசு உத்தியோகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் வீட்டுப் பிள்ளைகளும் உயர்ந்த சாதிக்காரர் வீட்டுப் பிள்ளைகளும் மட்டுமே பெரும்பாலும் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த உயர்கல்வித் துறையில் ஏழை, பிற்படுத்தப்பட்ட, நடுத்தர, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் குடும்பங்கள் இப்போடியோர் வளர்ச்சியைக் கண்டது எப்படி என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, நடுத்தர, ஏழைக்குடும்பங்களில் இருந்து பொறியியல் படிக்கச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதத்துக்கும் கீழ், மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை அதைவிட பலவீனமாகவே இருந்தது. ஏன்? இதுபோன்ற குடும்பங்களில் இருந்தும் அரசுப் பள்ளிகளில் இருந்தும் வந்த மாணவர்களுக்கு அதுவரை திறமையில்லையா? தகுதியில்லையா? என்ற கேள்வியும் ஐயமும் எழாமல் இல்லை. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிகப்பெரிய விடையையும் நல்வழியும் காட்டியவர் கலைஞர் அல்லவோ.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐந்தாம் முறை முதல்வராகப் பதவியேற்ற பொன்னான ஆண்டு 2006. உயர்கல்வித் துறை அமைச்சராக மதிப்பிற்குரிய பொன்முடி அவர்களும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மதிப்பிற்குரிய தங்கம் தென்னரசு அவர்களும் முதல்வர் கலைஞரால் நியமிக்கப்பட்டனர். உயர்கல்வியிலே இருந்த ஏற்றத்தாழ்வுகளை ஒரே கையெழுத்தில் களைந்தார் கலைஞர். ஆம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு அதுவரை இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்து 2007 ல் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் சேர்க்கை தொடங்கப்பட்டது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் யாவரும் இந்தத் திட்டத்தை மிகுந்த மனமகிழ்ச்சியோடு கொண்டாடிடனர். 2007-08 ஆம் ஆண்டில் தான் நானும் பனிரெண்டாம் வகுப்புக்குள் நுழைகிறேன். நுழைவுத்தேர்வை ரத்து செய்த இரண்டாவது ஆண்டு எங்கள் வகுப்பு மாணவர்கள் யாவரும் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நேரம். எங்கள் ஆசிரியர்கள் எங்களில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களை,, டேய் நீ,, நல்லா படிடா,, நல்ல மார்க் எடுத்தா அண்ணா யுனிவர்சிட்டிலயே உனக்கு சீட் கிடைக்கும் என்று ஊக்கப்படுத்தினார்கள். விளைவாக எங்கள் வகுப்பில் பயின்ற 29 பேரில் ஐந்து பேர் சென்னை, கோவை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதற்கடுத்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் தரமான தனியார் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதிலும் பணத்துக்கு திக்குமாக்காடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வங்கியிலே கொடுத்து,வங்கிக் கடன் பெற்று கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தனர்.
நான் எழுபத்தைந்து சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் கூட, அந்த நேரத்தில் எங்களுக்கென்று சொந்தமாக வீடு கூட இல்லாத காரணத்தால் சிவில் இஞ்சினியர் ஆகவேண்டும் என்ற என் லட்சியக் கனவுகளைப் புதைத்து விட்டு, பாலிடெக்னிக்கில் சிவில் என்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தேன். பின்னாளில் குடும்பத்தினுள் மாறி மாறி அடித்த வறுமைப் புயல்களால் எனக்கு பாலிடெக்னிக் படிப்பும் கூட முழுமையாகக் கிட்டவில்லை.
இப்படியாக வறுமையில் வாடாத, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பி.இ. படிக்கவும் மற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் படிக்கவும் சேர்ந்து கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தனர். இந்த நேரத்தில் தான் எனக்கு என் ஆருயிர் நண்பன் சிவக்குமார் நினைவுக்கு வருகிறான். அவனும் 75 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தான். பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் குரூப் படித்தவன் அவன். அவனுடைய குடும்பம் எங்களைக் காட்டிலும் வறுமையான குடும்பம். கல்லூரி படிக்கவும் ஆசை. பணமும் இல்லை. என்ன செய்வது,, என்னைப் போல் இவ்வளவு தான் என் வாழ்க்கை என்று அவனுக்கு வாழ்வை சுருக்கிக் கொள்ளும் மனமும் இல்லை. இந்த மதிப்பெண்ணுக்கு அரசுக்கல்லூரியிலே படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என விசாரித்தான். கடைசியில் டீச்சர் ட்ரெயினிங்கில் கிடைக்கும் என நண்பர்கள் பலர் சொல்ல,பின் விண்ணப்பித்து அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே சேர்ந்து மாலை நேரங்களில் வேலை பார்த்து எப்படியோ கடும் சிரமப்பட்டு கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்தான் சிவக்குமார்.
ஆண்டு 2010 ஆகிவிட்டது. நண்பர்கள் பலரும் பாலிடெக்னிக்கை முழுமையாக முடித்து வெளிவரத் தொடங்கிவிட்டனர்.
தமிழக அரசு ஒரு குடும்பத்தில் முதல் முதலில் பட்டம் படிக்கிற மாணவர்களுக்கு, அரசாங்கம் பாதி செலவை ஏற்றுக் கொள்ளும் என்கிற *முதல் பட்டதாரி* திட்டத்தை அமல்படுத்துகிறார் கலைஞர். என்னோடு படித்து பாலிடெக்னிக் முடித்த நண்பன் ஏக்கிமுத்து, நன்றாக படிக்கிற ஏழை மாணவன் என்பதை மனதில் வைத்து, நீ பி.இ படிக்க விரும்பினால் நம்முடைய கல்லூரியிலேயே முதல்பட்டதாரித் திட்டத்தைப் பயன்படுத்தி படித்துக் கொள்ளலாம். வேறு எந்த கட்டணமும் கட்ட வேண்டாம் என்று முதல் பட்டாதாரித் திட்டத்தோடு கல்லூரியும் அரவணைத்தது நண்பன் ஏக்கிமுத்துவை. இப்போது வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான். ஏக்கிமுத்துகள் மட்டுமல்ல இன்று வரை முதல்பட்டதாரித் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அப்படியானால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கிமுத்துகள் முதல் பட்டதாரித் திட்டத்தால் இதுவரை உருவாகியிருக்கிறார்கள். இனியும் வருவார்கள்.
முதல் பட்டதாரித் திட்டம் மூலம் இப்படியெல்லாம் ஒரு முன்னேற்றம் போய்க் கொண்டிருந்தாலும் உயர்நிலைக் கல்விக்கு பணம் பெரும் தடையாகவே இருந்து வந்தது. அந்தத் தடையும் களைவதற்கு கலைஞர் வெளிச்சொல்லாமல், வங்கிகளிலே கல்விக் கடன் பெறுவதற்கு அடமானமாக சொத்து பத்திரம் கொடுக்க வேண்டும் என்பதைத் தளர்வு செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அதன் பயனாக வங்கிகளிலே கல்விக் கடன் பெறுவதற்கு கல்லூரிகளில் இருந்து தரும் கடிதம் ஒன்று மட்டுமே போதுமானதாக ஆக்கப்பட்டது. இது பொறியியல் மருத்துவம் மட்டுமின்றி அறிவியல் இளங்கலைப் பட்டாதாரிகளுக்கும், ஏன் பாலிடெக்னிக் கல்விக்கும் கூட வங்கிக் கடன் கொடுக்கலாமென நீட்டிக்கப்பட்டது. இது ஏழை மாணவர்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே சொல்லியிருந்தேனே என் நண்பன் சிவக்குமார், டீச்சர் டிரெயினிங் முடித்து விட்டு தனியார் கல்லூரி ஒன்றிலே விடுதிக் காப்பாளராக ஒன்றரை ஆண்டுகளாக பணியில் இருந்தவன், வங்கிகளிலே கல்விக் கடன் பெறும் இந்த எளிய முறையைக் கணக்கில் கொண்டு கோவையிலே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்குச் சேர்ந்து தன் கல்லூரிப் படிப்பை மகிழ்ச்சியோடு முடித்து, இப்போது கோவையிலே உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணியில் இருக்கிறான். தன் வருமானத்தையும் தாய் தந்தை வருமானத்தோடு சேர்த்து தன் தங்கைக்கு நல்ல இடத்தில் மணமுடித்துக் கொடுத்திருக்கிறான்.
எங்கள் ஊரில் தன் பிள்ளைகளை அக்கறையோடு அரசுப் பள்ளியிலே படிக்க வைத்த, வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழைக் குடும்பங்கள் பல இருந்தாலும், ஒரு குடும்பம் மட்டும் தன் பிள்ளைகளுக்கான கனவுகள் அத்தனையும் நனவாக்கியிருக்கிறது. அந்த தம்பதியிருக்கு மூன்று குழந்தைகள், வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டிங் செய்யும் வேலை செய்கிறார் குடும்பத் தலைவர். குடும்பத் தலைவி வீட்டிலே இருந்து கொண்டு நைட்டி தைக்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஆண், இரண்டு பெண் என மூன்று பிள்ளைகள், ஒரு மகன் பொறியாளராகவும், இன்னொரு மகள் மருத்துவராகவும், இன்னொரு மகள் பி.இ. படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஏழைகளுக்கு மூன்று பிள்ளைகளை வளர்ப்பதென்பதே, பெரும் துன்பமான சூழ்நிலையில் தன் பிள்ளைகளை மருத்துவராகவும், பொறியாளராகவும் ஒரு தந்தை உருவாக்க முடிகிறதென்றால், அதை தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்து ஏழை எளியோரின் கல்விக்காக அயராது பாடுபட்டதன் பலன் அல்லவா.
பெருந்தலைவர் காமராஜரைக் கல்விக் கண் திறந்த வள்ளல் என்று கொண்டாடுகிறோம் உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். பள்ளிக்கூடத்தைக் கட்டுவதைக் காட்டிலும், மதிய உணவு போடுவதைக் காட்டிலும் அதிக சிரமங்கள் அதிக சோதனைகள் அல்லவா இந்த உயர்கல்வித் திட்டங்களைத் தீட்டுகையில் சந்திக்க வேண்டியிருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடம் கட்டி,மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த போது,யாரும் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால், கலைஞர் நுழைவுத்தேர்வை ரத்து செய்த போது உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். 2005 ல் அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூட நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அதனை உயர்நீதிமன்றம் முறையான வழிகாட்டல் இல்லை என்று கூறி ரத்து செய்தது. அதே போலவே கலைஞர் ரத்து செய்த போதும் நீதிமன்றம் சென்றது பார்ப்பனக்கூடாரம், ஆனால், கலைஞரின் அறிவிப்பை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை 23/7/2007 அன்று உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின்னாலும் காங்கிரஸ் அரசும் கூட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்திட மத்திய அமைச்சர் கபில் சிபில் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை முதல்வராக கலைஞரும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவும் கூட பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இத்திட்டத்தைக் கைவிடக்கோரி கடிதம் எழுதினார். 6/12/2011 அன்று இடைக்காலத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளைஞர்களே, மாணவச் செல்வங்களே இன்றைக்கு லட்சக்கணக்கிலே தமிழ்நாட்டில் பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அந்த உரிமைகள் அனைத்தும் ஏனோதானோ யென்று கிடைத்துவிடவில்லை. கலைஞர் எனும் ஆகப்பெரும் திராவிடத் தலைவரால் கிடைத்தது. அவருடைய சமூகநீதிச் சிந்தனைகளால் விளைந்தது. ஏழைஎளிய, பிற்படுத்தப்பட்ட, நடுத்தர, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் முழுமையான நலன்களின் மீது, அவர்களின் எதிர்காலத்தின் மீது கலைஞர் வைத்திருந்த மிகுந்த அக்கறையால் விளைந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நுழைவுத்தேர்வு, இட ஒதுக்கீடு, சமச்சீர் கல்வி என எல்லாமும் ஆரிய அதிகாரவர்க்கத்தின் பிடிகளில் இருந்தவற்றைப் போராட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
இங்கே தான் எல்லோரும் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். குலக்கல்வி தொடங்கி இன்றைக்கு நீட் வரை ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட நடுத்தர வர்க்கத்து மக்களின் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை தொடர்ந்து கொண்டிருப்பது ஆரியம்.
அந்தத்தடைகள் ஒவ்வொன்றையும் சுக்குநூறாய் நொறுக்கி தமிழர்தம் வாழ்வில் மிக எளிமையாக கல்வியிலே மேம்பட அயராது பாடுபட்டது திராவிடம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
2005 க்கு முன்னால் உயர்கல்வியிலே முன்னிலையில் இருந்தோர் யார்? இப்போது முன்னிலையில் இருப்போர் யார்? கடந்த 2006 க்குப் பின்னால் தான் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழையின் இல்லத்தில் கூட மருத்துவரும் பொறியாளரும் கலந்திருக்கிறார்கள்.
கடந்த 2006 ல் கலைஞர் முதல்வராகப் பதவியேற்று உயர்கல்வித் துறையிலே அவர் ஆற்றிய சாதனைகளை,பெற்றுத் தந்த உரிமைகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான், இன்றைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் நீட் தேர்வு எனும் பெருங்கொல்லியை அணைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. நாளை தி.மு.கழகம் ஆட்சியிலே அமர்கிற போது முதல் கையெழுத்தாய் நீட் தேர்வை ரத்து செய்யும் என்பதில் உறுதியாக உருக்கிற ஒரே இயக்கம் தி.மு.கழகம் மட்டுமே.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அந்தக் காலத்தில் தேவையான அடிப்படைக் கல்வியைக் கொடுப்பதற்குப் பாடுபட்டாரென்றால்,தலைவர் கலைஞர் 2007 ல் இருந்து உயர்கல்விக்கு அரும்பாடுபட்டார்.
பெருந்தலைவர் காமராஜர் கட்டிய அடித்தளத்திலே, முத்தமிழறிஞர் கலைஞர் ஒய்யாரக்கோபுரம் கட்டியிருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கல்விக் கண் திறந்த வள்ளல் என்றால், முத்தமிழறிஞர் கலைஞர் உயர்கல்வியில் கண் திறந்த வள்ளல்.
-மு.சீதாராமன்.
14/02/2020