எவ்வளவோ பெண்கள் கல்வியிலே முன்னேறி,' வேலை வாய்ப்புகளில் முன்னேறி பெரும் இடத்தைப் பெற்று தவிர்க்க முடியாதவர்களாக வளர்ந்த பின்னும், இன்னும் அவர்களை அடிமை மனநிலையில் இருக்கச் செய்து கொண்டிருக்கத்தான் பலரும் விரும்புகிறார்கள் என்பதை வரதட்சனை குறித்த நீயா நானா விற்கு வருகிற விமர்சனங்களைப் பார்க்கிற போது தெரிகிறது.
ஒருபெண் தன் தாயிடம் தானே, தனக்கு என்ன தேவை என்பதைக் கேட்க முடியும், அடுத்தவரிடமா கேட்க முடியும். திருவிழா விற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், அங்கே இருக்கிற விலையுயர்ந்த பொருட்களைப் பார்த்து, அப்பா எனக்கு இது தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதும், தன்னால் முடிந்தால் அப்பா வாங்கிக் கொடுப்பதும்,' முடியாதென்றால் அதை எடுத்துச் சொல்லி, வா,, உனக்கு அப்பா வேறு பொருள் வாங்கித் தருகிறேன் என்று வாங்கிக் கொடுப்பதும் தான் வழக்கம். எந்தத் தந்தையும் நீ அந்தப் பொருளை எப்படிக் கேட்கலாம் என அடிப்பதோ, நீ குழந்தைகளின் அவலம் எனத் தூக்கி எறிந்து விட்டு வருவதோ கிடையாது. இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடக்கிற உரிமையும் கடமையும் சார்ந்த அன்புப் போராட்டம்.
ஒரு இளம்பெண் ஹெலிகாப்டரில் வந்து மணமக்கள் இறங்க வேண்டும் என்று கேட்டதை, ஏதோ ஹெலிகாப்டரையே சீதனமாகக் கேட்டது போலச் சித்தரித்ததெல்லாம் ரொம்ப அநியாயம். தன்னுடைய திருமணம் இப்படி நடக்க வேண்டுமென ஒரு இளம்பெண் தன்னுடைய தாயிடம் சொல்வதில் என்னபெரிய குற்றத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று உண்மையிலே தெரியவில்லை. என் திருமணத்திற்கு இந்தக் கடையில் ஜவுளி எடுக்க வேண்டும், இப்படி ஒரு சமையல் மாஸ்டர் தான் சமையல் செய்ய வேண்டும், இந்த மேளம் தான் அடிக்க வேண்டும், இந்த கச்சேரிக்காரர்கள் தான் பாடல்கள் படிக்க வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவதில் எந்தவொரு குற்றமும் இல்லை.
இதற்காகவெல்லாம் மீம் போட்டு கலாய்த்தவர்களில் பெண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் இல்லவே இல்லை. எல்லாம் இளைஞர்கள் தான். பெண்களின் எண்ணங்களின் மீதும் ஆசைகளின் மீதும் அடிக்கிற ஆணிகள் இந்த மீம்ஸ்கள். இவர்களுக்கு யார் இந்த உரிமை கொடுத்தது.
ஒரு பெண் தன் பெற்றோரிடம் கேட்கிற தனிமனித உரிமைகளைக் கேட்பதைக் கூட மிகக் கொடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஏனெனில் இவர்கள் தான் தன்னைக் காதலிக்காத பெண் மீது ஆசிட் ஊத்துவோர்களாக, வெட்டிக் கொள்வோர்களாக, தன் வீட்டுப் பெண்களின் உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ளாதவர்களாக சமூகத்தின் பெரும் கேள்விக்குறியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான இளைஞர்கள் திருந்த வேண்டும் அல்லது சட்டத்தின் மூலம் திருத்தப்பட வேண்டும்.