முன்பொரு காலங்களில் சாதி என்றாலே அதீத ஆர்வத்தோடும், அலாதிப் பிரியத்தோடும் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியூட்டக் கூடிய ஊக்கமருந்தாக கிராமங்களில் சாதி விளங்கியது. அதனால் அவர்கள் தங்கள் சாதியைச் சார்ந்த மன்னர்களையும், மூத்த தலைவர்களையும் மிக மதிப்போடு போற்றி, அவர்களுடைய பெயர்களிலே நற்பணி மன்றங்களும் சங்கங்களும் துவக்கி தங்களுடைய சாதீய உணர்வை வெளிக்காட்டினர். இது கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் கூட இருந்தது.
அதன் விளைவாக பல இளைஞர்கள் சாதிய உணர்வை வெளிக்காட்ட மற்ற சாதிக்காரர்களோடு பழகுவதையும் பழகுவதில் மட்டுமல்ல பேசுவதில் கூட தங்களின் சாதிய உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக செயல்பட்டனர். முடிவில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற மோதல்கள் தொடங்கி அவைகள் சில நேரங்களில் கலவரங்களாகக் கூட முடிந்திருக்கின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களின் வீதிகளில் கூட படித்த இளைஞர்கள் கூட்டம் சாதி பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்றும் சில கண் கொள்ளாக் காட்சிகளை நாம் காண முடிகிறது. மேலும் சில வீடுகளில் தன்னுடைய பிள்ளையின் நண்பர்கள் என்கின்ற காரணத்தால் அனைத்து சாதி வீட்டுப் பிள்ளைகளையும் தன் வீட்டினுள் அனுமதித்து சாப்பாடு போடுகின்ற அளவிற்கு பெற்றோர்கள் சிலர் சாதி பாகுபாட்டை மறந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
கிராமங்களிலே இந்த நிலை என்கின்ற போது நகரங்களில் பார்த்தோமேயானால், சாதியைத் தவிர்த்து நட்பை மூலதனமாகக் கொண்டு பழக்கம் வைத்துக் கொள்கின்ற மனப்பாங்கு இன்னும் அதிகமாகவே காணப்படுகிறது. மாநகரங்களில் அதைவிட ஒரு படி மேல், ஒரே தெருவில் அனைத்து சாதியினரும் சாதிப் பாகுபாடின்றி அத்தை மாமா என்று பழகுகின்ற அளவிற்கு உறவை மேம்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
புதிதாக இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் சாதி ஒரு பொருட்டே இல்லை என்பது போன்ற மனப்பாங்கு தோன்றி வருவது போல உணர்கிறேன். ஒரு கல்லூரி மாணவனிடம் பேசுகிற போது, நான் ஒரு நாள் சட்டை எல்லாம் அழுக்கா இருக்கேனு, நம்ம சாதி படம் போட்ட டிசர்ட் போட்டு கேண்டின்ல சாப்பிடப் போகும் போது, இன்னொரு பையன் என்கிட்ட வந்து நீ நம்ம சாதியாடா ன்னு கேட்கும் போது, சக நண்பர்கள் மத்தியில் ரொம்ப அருவறுப்பாக இருந்தது என்று சொன்னார். உண்மையில் கல்லூரி இளைஞர்கள் சாதியை வெளிக்காட்டிக் கொள்ள ஒரு போதும் விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன்.
இன்னும் சொல்லப் போனால் எந்தக் கல்லூரி இளைஞனிடமும் நீ என்ன சாதி? என்று நேருக்கு நேர் கேட்க யாருக்குமே மனம் இல்லை. ஒருவேளை அப்படிக் கேட்டால் அவர்கள் ச்ச்சீ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்களோ என்ற பயம் நமக்ககுக் கூட இருக்கத்தான் செய்கிறது.
இன்றைய கல்லூரி இளைஞர்களெல்லாம், தன் பெயருக்குப் பின்னால் சாதியைப் போடுபவர்களாக நிச்சயம் இல்லை. ஒரு வேளை அப்படியிருந்தால் அவர்கள் நூற்றுக்கு 20 சதவிகித படித்த இளைஞர்களே விரும்புகின்றனர். நூறு சதவிகிதம் பேரும் சாதியைத் தூக்கிப் பிடித்த காலம் மாறி, இன்று நூற்றுக்கு 20 சதவிகிதம் பேர் மட்டுமே சாதியைப் போற்ற நினைக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விசயம் தானே.
இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் விரும்பிகளாக மாறிவிட்டனர். அதன் விளைவாக என் பிள்ளைக்குப் பிடித்திருந்தால் போதும், அது எந்த சாதிப் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்தால் கூட , நான் திருமணம் செய்து வைக்கத் தயார் என்ற நிலையை பெற்றோர்கள் எட்டியிருக்கின்றனர். அதனால் சில காதல் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் கூட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தற்போதுள்ள காலகட்டத்தில், பல இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் பார்க்கும் படலத்தைத் தவிர எங்கும் சாதி பார்த்துப் பேச, பழக நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
அடுத்த தலைமுறைக்கான காலங்கள் வரும் போது, திருமணத்திற்கு பெண்பார்க்கக் கூட சாதியை நினைக்க பலர் மறந்துவிடுவர் என்று நினைக்கிறேன்.
சாதி என்ற சிட்டிகைக்குள் மட்டுமே தங்களை அடைத்துவிடாதீர்கள். அப்படியிருந்தால், நீங்கள் "குண்டாச் சட்டிக்குள் தான் குதிரை ஓட்டிய" கதையில் தான், உங்கள் வாழ்க்கை முழுவதையும் வீண்படுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.
சாதியைத் தாண்டி, நம்மோடு நட்போடு உயிராய் உணர்வாய் பழகக் கூடிய பல நண்பர்கள் இருக்கிறார்கள். சாதி என்ற சிட்டிகைக்குள் அடைந்துகொண்டு, அவர்களை இழந்துவிட வேண்டாம்.
"சாதிகள் வேண்டாம்; சமத்துவம் போற்றுவோம்"