யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானும் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முனைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமை;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே:
=கணியன் பூங்குன்றனார்
எந்தக் குறிப்பிட்ட ஊரையும் எம்முடைய ஊர் என்று சொல்லவும் மாட்டோம். குறிப்பிட்ட ஊர்களைத் தவிர ஏனைய ஊர் வேற்றூர் என்று சொல்லவும் மாட்டோம். இவ்வுலகில் மக்கள் வாழும் எல்லா ஊர்களும் எம்முடைய ஊர்கள் தாம். இவ்வுலகில் வாழும் மக்களில் இன்னார்தாம் எமது சுற்றத்தார். அவர்களைத்தவிர மற்றவர்களுக்கும் எமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று கூறவும் மாட்டோம். இவ்வுலகில் வாழும் எல்லா மக்களும் எமது சுற்றத்தார்தாம்.
எமக்கு உண்டாகும் தீமையும், நன்மையும், பிறரால் உண்டாவனல்ல. எமது சிந்தனை எமது செய்கை இவற்றால் வருவன. துன்பமடைவதும், துன்பம் தீர்ந்து இன்புற்று வாழ்வதும் அவற்றைப் போன்றது தான். அதாவது பிறரால் நாம் துன்புறுவதில்லை. பிறரால் நாம் இன்புறுவதும் இல்லை. நம்முடைய எண்ணமும் நடத்தையுந்தான் இவைகளுக்குக் காரணம்.
இறத்தல் ஒரு அதிசயமன்று. பிறந்தவர் இறப்பதென்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்ர ஆதலால் இறப்பு வருமோ என்னு அஞ்சமாட்டோம். இதைப்போலவே வாழ்வு என்றும் நிலையுடையது, இன்புடையது என்று மகிழவும் மாட்டோம். ஏதேனும் வெறுப்பு வந்த போது, இதுவா வாழ்க்கை என்று வெறுத்து, வாழ்க்கையைத் துன்பமுடையதாகத் தீர்மானித்து சும்மாவிருக்கவும் மாட்டோம்.
மலைகளிலே மேகம் மின்னி மழை பெய்யும் போது, அந்த மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து வெள்ளமாகிக் கற்பாறைகளைப் புரட்டஅத் தள்ளிக் கொண்டு ஆறாக நிலத்திலே ஓடும் அந்த வளம் கொழிக்கும் பேராற்றிலே ஓர் தெப்பத்தை- மிதவையை- மிதக்கவிட்டால் , அது நீர்போகும் போக்கிலே செல்வதைக் காணுகின்றோம் இதைப்போலவே நமது உயிரும், நமது செயல்முறைப்படியே இன்பத்தையோ துன்பத்தையோ அடையும். இந்த உண்மையைத் திறமை உடையவர்களின் செயல்களைக் கொண்டு கண்கூடக் கண்டு வியந்திருக்கிறோம்.
ஆதலால் சிறந்த செயல்களைச் செய்கின்ற பெரியோர்களைக் கண்டு வியந்து புகழவும் மாட்டோம். அற்பச் செயல்களைச் செய்கின்ற சிறியவர்களைக் கண்டு இகழவும் மாட்டோம். அவரவர் சிந்தனை செயலுக்கேற்ற பலனை அவரவல்கள் அனுபவிக்கின்றனர் என்று எண்ணியிருப்போம்.