Wednesday, September 17, 2014

ஜெ,வின் சொத்துக்குவிப்பு வழக்கு

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பைக் காட்டிலும், அதிக எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் தமிழக மக்கள் மத்தியில் விளங்கிய ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப் 20 ஆம் தேதியிலிருந்து செப் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 18 ஆண்டுகளாக பல நூறு வாயுதாக்களையும், பல வித விசாரனைகளையும், தன்னை விசாரிக்க வேண்டிய வழக்கறிஞரைத் தான் தான் நியமிப்பேன என்பது போன்ற சர்ச்சைகளையும், சுதாகரன் தன்னுடைய வளர்ப்பு மகனே இல்லை என்பது போன்ற வாதங்களையும், காளான் வளர்ப்பின் மூலம் பல நூறு கோடிகளைச் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற அறிவிலி செயல்களையும் தாண்டி தீர்ப்பை அறிவிக்கக் கூடிய நேரத்தில், தீர்ப்பின் தேதியிலும் மாற்றத்தைக் கொண்டு வரவைத்த ஜெ, வின் சொத்துக்குவிப்பு வழக்கு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு விசித்தரமான வழக்கு.

டான்சி நில அபகரிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி, மனசாட்சிப்படி உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று, கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்கு அறிவுரை சொல்லி அனுப்பிய நீதிபதியும் ஜெ, வின் வழக்குகளில் அடங்குவார்கள்.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

நீதி வழங்க வேண்டிய தேதியையை மாற்ற வைத்த, ஜெ,வுக்கு நீதியையே மாற்ற எவ்வளவு நேரமாகும் என்றும், முந்தைய வழக்கைப் போல் ஏதாவது அறிவுரை சொல்லி அனுப்பப்படுவார் என்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கி நகரலாம் என்று கிளம்பிவிட்டேன்.

ஆனாலும், சில நண்பர்கள், இப்போதிருக்கக் கூடிய நீதிபதி மிகவும் கண்டிப்பானவர். நல்லவர் வல்லவர் என்பது போன்ற வாதங்களை எடுத்துரைக்கின்றனர்.

அதையும் தாண்டி, மோடியைத் தவிர்த்து, பா.ஜ.கவின் அமித் ஷா உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும், தமிழக பா.ஜ.க தலைவர்களும் ஜெ, விற்கு சிறைத் தண்டனை கிடைக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் குறைந்தது பதினைந்து ஆண்டுகளாவது தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.வினர் விரும்புவதாக சொல்கின்றனர்.

இருக்கட்டும்.

27 ஆம் தேதியாவது மீண்டும் தேதியை மாற்றாமல் தீர்ப்பு வெளியாகுமா என்பது கூட சந்தேகம் தான்.

நீதி தேவதைக்கு வெளிச்சமா!! ஜெ,விற்கு வெளிச்சமா!! என்பது இலைமறை காயாகவே உள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம்!!

Sunday, September 14, 2014

என் வாழ்வின் வைர நாள்

     இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு என்ன தான் செய்யப் போகிறோமோ என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் வியாழக்கிழமை இரவே என்னுடைய முகநூல் பக்கத்தில் வாழ்த்துச் சாரல் கொஞ்சம் கனத்த சாரலாகவே இருந்தது. அந்த சாரலில் நனைந்த குதூகலம் என்னை புத்தாடை எடுக்கத் தூண்டியது.

  ஏற்கனவே என்னிடம் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டுமென்றால் ஏதாவது வாழ்த்து பெறுகிற தினங்களை ளற்படுத்திக் கொள்ளுங்கள் என மதிப்பிற்குரிய தலைவரின் வீட்டு உதவியாளர் செல்வம் பிரகாஷ் அவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அவருக்குப்போன் செய்தேன். அடுத்து என் மதிப்பிற்குரிய அண்ணன் விஜய் பிரவீன் அவர்களிடம் பேசி எப்படியாவது தலைவரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள் அண்ணா என்று சொல்லியபோது, அவரும் கிளம்பி வா தம்பி பாத்துக்கலாம் என இசைவு தெரிவிக்க மகிழ்ச்சியோடு கிளம்பினேன். ஆனாலும் மனதிற்குள் தலைவரைச் சந்திக்காமல் சென்னையை விட்டு திரும்பக் கூடாது என்று மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன். சிவகிரி அண்ணன் தனுஷ்குமரன் அவர்களோடு சென்னை கிளம்பினேன்.

  கனத்த சாரல் வலுப்பெற்று இடியுடன் பெய்த மழைபோல் வாழ்த்துக்களெல்லாம் என்னுடைய வாலில் கொட்டித் தீர்த்துக் கொண்டுருந்தது. அண்ணன் மகிழன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்.  இன்றாவது அக்காவிடம் பேசிவிடலாமா என்ற சந்தேகத்தோடு போன் செய்து காத்திருந்த எதிர்முனையில் அக்காவின் குரல் அன்பாய் ஒலித்தது.  அக்கா எனக்கு இன்று பிறந்த நாள் என்ற போது, உனக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாளா!! (அய்யா தங்கபாண்டியன் அவர்களின் பிறந்த தினத்தில் தான் நானும் பிறந்திருக்கிறேன்) என்று கேட்டு மனமுறுக வாழ்த்தினார் அன்பிற்கினிய அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்.

  என் அன்பிற்கினிய அண்ணன் முன்னாள் அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களிடமும், அண்ணன் வி.பி.ஆர்.இளம்பரிதி, கதிரவன், எங்கள் அன்பு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே.ஜி.இராஜகுரு அவர்களிடமும் வாழ்த்துப் பெற்ற போது அகமகிழ்ந்து போனேன்.

  திடீரென அண்ணன் விஜய் பிரவீன் அவர்கள், மதுரையில் இளம்பெண்கள் மீது திராவகத்தை ஊற்றிய கொடுங்கோலர்களைக் கண்டித்து சத்யம் தொலைக்காட்சிக்கு, ஒரு பேட்டி கொடுக்கத் தயாராகிக்க தம்பி என்று போன் செய்து சொல்லி, பேட்டி கொடுத்ததற்கான காரணம் மிகவும் மனதை வருத்தக் கூடிய விசயமாக இருந்தாலும், பிறந்த நாளன்று தொலைக்காட்சிப் பேட்டி என்று கடுகளவு மகிழ்ச்சி.

   பின் தலைவரைச் சந்திக்க மாலை 6 மணிக்கு கோபாலபுரம் இல்லத்திற்கு செல்ல, நான், தாம்பரம் சதீஸ், தனுஷ்குமரன் அண்ணன் ஆகிய மூவரும் சென்றோம்.

   தலைவர் இல்லத்தில் புகாருக்காக ஒரு கழக உடன்பிறப்புகள் கூட்டம் காத்திருந்தது. எங்கே இவர்களை மட்டும் சந்தித்து விட்டு, நம்மள சந்திக்கீம போய்விடவாரோ தலைவர் என்று எங்களுக்குள் அளவளாவிக் கொண்டோம்.

  திடீரென தலைவரின் உதவியாளர் தம்பி முன்னாடி வாப்பா என அழைக்க, பதறி ஓடினேன். கை கள் படபடத்தன. நெஞ்சம் வேகவேகமாக துடிக்க ஆரம்பித்தது. தலைவர் வீட்டு வாசற்கதவில் தலைவரின் அருகே நிற்க வைக்கப்பட்டேன்.

  தலைவர் கலைஞரை மிக மிக அருகில் கண்டது இதுவே முதன் முறை. தலைவரின் அருகில் சென்றேன்.

"அய்யா இன்னைக்கு எனக்குப் பிறந்த நாள்"

தன்னுடைய கரகரத்த குரலில் "வாப்பா பிறந்த நாளா" என்றார் என் அன்புத் தலைவர் கலைஞர் சொக்கிப் போனேன்.

  "இது நான் உங்களைப் பற்றி எழுதி முதல்பரிசு பெற்ற கட்டுரை அய்யா" என்று கூறி இணையதள தி.மு.க சார்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற என்னுடைய கட்டுரையை தலைவரிடம் சமர்ப்பித்தேன்.

   கட்டுரையின் முதல் பக்கத்தைச் சிறிது நொடி படித்துவிட்டு, என்னை ஏறெடுத்துப்பார்த்தார் அன்புத் தலைவர் கலைஞர்.

  அந்த நொடி சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்த்தியது. பாதங்களைத் தொட்டு வணங்கி தலைவர் கலைஞரிடம் இருந்து விடைபெற்றேன்.

    என்னாளும் இல்லா திருநாளாய் என்னுடைய 24 ஆம் பிறந்த நாள் வைர எழுத்துக்களில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாளாய் அமைந்திருக்கிறது.

   தயவு செய்து  சிலர் என்னை மன்னிக்கவும். வாழ்த்துச் சொன்ன சிலருக்கு நன்றி சொல்ல இயலவில்லை. ஆதலால் நன்றியை ஒட்டுமொத்தமாக இப்பதிவிலே வைக்கிறேன்.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!!
தலைவரைச் சந்திக்க உதவிய அனைவருக்கும் நன்றி!!
சத்யம் தொலைக்காட்சியில் பேட்டியளிக்க வாய்ப்பு தந்தவர்களுக்கும் நன்றி!!

Thursday, September 11, 2014

செல்போன் கட்டணம் உயர்ந்தது!!

கடந்த நான்கு ஆண்டுகளாக நானும் செல்போன் பயன்படுத்தி வருகிறேன். ஏர்டெல் நெட்வொர்க் லிருந்து இதுவரை மாறவில்லை. ஒரே எண் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

நான் செல்போன் வாங்கிய புதிதில் ஏர்டெல் எண்களுக்கு பத்து பைசாவும், மற்ற எண்களுக்கு முப்பது பைசா வரை கட்டணமாகும் ரேட் கட்டருக்கு 195 ரூபாய் மூன்று மாதங்களுக்குச் செலவானது.

அதே போல் இண்டர்நெட்டிற்கு 98 ரூபாய்க்கு 1 gb என்பது ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது மூன்றாண்டுகளுக்கு முந்தைய செல்போன் கட்டணங்களின் நிலை.

செல்போன் கட்டணங்கள் செல்போனின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குறையத்தான் வேண்டும். ஆமாம் எப்படி என்று கேட்கிறீர்களா!!

ஆரம்பத்தில் செல்போன் வந்த போது, இன்கமிங் காலுக்கு பதினாறு ரூபாயும், அவுட் கோயிங் காலுக்கு பதினாறு ரூபாயும் கட்டியவர்கள் தான் நம் இந்திய நாட்டு மக்கள் என்பது செல்போன் தொடக்கத்தில் இருந்து பயன்படுத்தியவர்கள் நன்கு அறிவர்.ஆக, அதைத் தொடர்ந்து செல்போன் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இன்கமிங் காலுக்கு உண்டான கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவுட்கோயிங் காலுக்கான கட்டணம் குறைக்கப்பட்டது.

இதே வகையில் நான் செல்போன் வாங்கிய போது உண்டான கட்டணத்தையும், கடந்த ஓராண்டுகளாக உள்ள கட்டணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கட்டணம் குறைந்திருக்க வேண்டும் என்பது தான் விதி.

ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகியதற்குப் பின்னால் தொடர்ந்து கட்டணம் உயர்ந்து கொண்டிருப்பதை நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.

ஆக, இனிமேலாவது ஆ.ராசா அவர்கள் தொலைத் தொடர்புத் துறையில் எப்படிச் செயல்பட்டார் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தீர்களேயானால், ஆ.ராசா அவர்கள் தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்த காலம், தொலைத் தொடர்புத்துறைக்கும் செல்போன் பயனீட்டாளர்களுக்கும் "மிகச் சிறந்த பொற்காலம்" என்பதை நன்கு உணர்வீர்கள்.

Thursday, September 4, 2014

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

  இயல்பில் நான் ஒரு அரசுப்பள்ளி  மாணவன். நானும் என்னுடைய சகதோழர்களும் பத்தாம் வகுப்பு வரை எங்கள் ஊர் அரசு உயர்நிலைப்பள்ளியிலேயே படித்தோம். பத்தாம் வகுப்பை முடித்தவுடன் பக்கத்து ஊர்ப் பள்ளிக் கூடத்துக்கு நாங்கள் அனைவருமே இடம்பெயர வேண்டியிருந்தது.

  வேறு பள்ளிக் கூடத்திற்குச் சென்று ஒவ்வொருவரும்,பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அவரவர்  எடுத்த மதிப்பெண்களுக்கேற்ப, வேறுவேறு பிரிவுகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். காலாண்டுத்தேர்வு வரை எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம்.

  காலாண்டுத் தேர்வு அறிவித்துவிட்டார்கள். பரீட்சைக்குத் தயாராகவேண்டும். அந்த நேரத்தில் திடீரென எங்கள் ஊர் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக்கி தமிழ்நாடு கல்வித்துறை உத்தரவிட்டது. எங்கள் ஊர் பெரியவர்கள், வேறுவேறு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்தவர்களையெல்லாம், எங்கள் ஊர் பள்ளிக்கு, நாங்கள் படித்துக் கொண்டிருக்கிற பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, எங்களை  அழைத்து வரப்போகிறார்கள் என்ற செய்தி  எங்கள் காதுகளுக்கு எட்டியது. காலாண்டுத் தேர்வின் கடைசி கட்டத்தில், நம்ம தான், நம்ம ஊர்ப்பள்ளிக் கூடத்துக்குப் போகப் போறேமே! நம்ம எதுக்கு இந்தப் பள்ளிக் கூடத்துல பரிட்சை எழுதனும்னு கட் அடிச்சுட்டு படம் பார்க்க சகநண்பர்கள் போயிட்டாங்க. ஆனா நான் போகலை. உடனே நீ என்ன அவ்ளோ நல்ல பையனான்னு கேட்டுறாதிங்க, அவங்கெல்லாம் கட் அடிச்சிட்டு படத்துக்குப் போனாங்க, நான் பரிட்சைப் பேப்பரை கவுத்திப் போட்டு டெஸ்க்லயே கைய தலைக்கு வச்சு தூங்கிட்டேன். எப்பூடி!!

   அப்புறம் எப்படியோ ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை மறுபடியும் எங்க ஊர் பள்ளிக் கூடத்துல, சேத்துட்டாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

  பத்தாம் வகுப்பில் பாஸ் ஆகுறதுக்கே தலைகீழா நின்னு படிச்சவனுக்கும், பத்தாப்புல பர்ஸ்ட் மார்க் வாங்கினவனுக்கும், பதினோறாம் வகுப்பில் முதல் பிரிவை(உயிரியல்- கணிதம்)க் கொடுத்து, ஒரே கிளாஸ்ல உட்கார வச்சிட்டாங்க. பசங்களுக்குள்ள, டேய் நமக்கு அந்தப் பள்ளிக் கூடத்துல வொகேசனல் குரூப்பே தரமாட்டேனு சொன்னாங்க, ஆனா நம்ம ஊர்ப்பள்ளிக் கூடத்துல பர்ஸ்ட் குரூப் கொடுத்துருக்காங்களேன்னு, ஆனந்தக் கண்ணீர் ஒரு பக்கமும், நாமெல்லாம் எப்படிடா இந்த குரூப்ல பாஸாகப் போறோம்னு சிலர் ரத்தக் கண்ணீரும் வடிச்சிட்டிருந்தாங்க.

  பதினோறாம் வகுப்பில் ஆசிரியர்கள், சரிவர இல்லாமல், உயர்நிலை ஆசிரியர்களை வைத்து கண்காணிக்கப்பட்டு, கண்டபடி முழுப்பரிச்சை எழுதி கப் னு எல்லாரும் பாஸாகி பதினோறாம் வகுப்பு பெஞ்சைத் தேய்ச்சி முடிச்சு, பனிரெண்டாம் வகுப்புக்குப் போய்விட்டோம்.

     பனிரெண்டாம் வகுப்புத் தொடங்கியது.  இயற்பியல் தொடங்கி ஒவ்வொரு பிரிவிற்கும் ஆசிரியர்கள் வரத்தொடங்கினர். பாடங்களை எடுக்கத் தொடங்கினர். பலருக்குப் புரியவில்லை, எனக்கும் தான். பின் எங்களுக்குப் புரிகின்றவாறு பாடங்களை நடத்தி, எங்களை படிக்க வைக்க படாத பாடு பட்டனர். உயிரியல் ஆசிரியை, அடுத்த பள்ளியில் வேலை பார்க்கும் தன் கணவரை அழைத்து வந்து புரியும்படி பாடம் நடத்தச் செய்தார்.. கணித ஆசிரியை, அதற்கும் ஒருபடி மேல் போய், எங்களோடு அன்பாய்ப் பழகி, எங்கள் ஊரிலே வீடு எடுத்துத் தங்கி, எங்களுக்கு டியூசன் நடத்தி கணிதப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். இயற்பியல் டீச்சர் அன்போடு பேசிப் பழகி பாடம் நடத்தத் தொடங்கினார். ஆனா, இந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் இருக்காரே, என்னா அடி, அடிச்சே படிக்க வச்சாரு. இறுதித் தேர்வின் முடிவில் 1138 முதல் மதிப்பெண் பெற்று, பரீட்சை எழுதிய இருபத்தொன்பது(22+7) பேரில், 25 பேர் தேர்ச்சியும் பெற்றிருந்தோம்.

  நன்றாக படிக்கின்ற மாணவனை, அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதென்பது வேறு. சுத்தமா படிப்பே வராத மாணவனை ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைப்பதென்பது வேறு.

  எங்களுடைய ஆசிரியர்கள், சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், காற்று போன சைக்கிள் டியூப்பிற்கு காற்றடைத்தவர்கள் அல்ல. பத்து பஞ்சர் விழுந்து, ஒரு ஓரத்தில் கிழிந்த சைக்கிள் டியூபை பஞ்சர்கள் அனைத்தையும் ஒட்டி, கிழிந்த இடத்தில் சிறு வல்கனைசிங் செய்து, காற்றடைத்து சைக்கிள் டியூபை சரிசெய்ததோடு மட்டுமல்லாமல் சைக்கிளையும் சரி செய்தவர்கள்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் தங்கமலை, ஆசிரியைகள் கிறிஸ்டிஜெபசித்ரா, முருகேஷ்வரி, சுரேகா, ஆங்கில ஆசிரியை சாந்தா போன்ற எங்களுக்குப் பாடமெடுத்து, பக்குவப்படுத்திய ஆசிரியர்கள் போல் , அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி செய்து, அரசுப்பள்ளிகளின் தரங்களை உயர்த்த வேண்டுமெனக்கோரி, அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், எங்கள் ஊர்ப்பள்ளியின் முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகள்(22+7) சார்பாக

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

Tuesday, September 2, 2014

மாறுமா? மறையுமா? விவசாயம் கேள்விக்குறி!

    நம்முடைய நாடு பலதரப்பட்ட தொழில் வளங்களைக் கொண்ட நாடு. அந்தத் தொழில்களிலே நாட்டின் இறையாண்மையில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய தொழில் எது என்றால் விவசாயம் மட்டுமே. அதனால் தான் மற்ற தொழில்களுக்கு இல்லாத முன்னுரிமையும், மானியங்களும்,நிவாரணங்களும், அரசு உதவிகளும் விவசாயத்திற்கு கிடைக்கின்ற அளவிற்கு மற்ற தொழில்களுக்குக் கிடைப்பதில்லை.

   மற்ற தொழில்களைப் போல் விவசாயம் ஒன்றும் சாதாரண விசயமல்ல. மண்ணைப் பொன் ஆக்குகின்ற ஒரு உன்னதமான தொழில். விவசாயத்தைத் தவிர்த்த மற்ற தொழில்களெல்லாம் மனிதர்களோடு போட்டி போடக்கூடிய ஒரு தொழில். ஆனால் விவசாயம் என்பது இயற்கையோடு மனிதன் போட்டி போடக்கூடிய தொழில். அதனால் தான் என்னவோ, பல விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு ஏதேனும் வேலைபார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் போல.

   முந்தைய காலங்களில் விவசாயம் என்பது தொழில் என்பதைத் தாண்டி,  இதயப்பூர்வமாக வணங்கி விவசாயத்தை மக்கள் செய்து கொண்டிருந்தனர். ஆதலால் தான் நம்முடைய நாடு தொடக்க காலங்களில் விவசாயத்தில் செழுமையான நாடாக விளங்கியது என்பது வரலாறு. அந்த வரலாறு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது.

   யானை கட்டி போரடித்த காலங்களையெல்லாம் உண்டு என்பது நமது சங்க இலக்கியங்கள் பலவற்றில் பல அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகளை பழைய திரைப்படங்களில் கூட காண்பித்திருக்கிறார்கள். அதற்குப் பின்னால் உள்ள கால கட்டங்களில் காளை மாடுகள் விவசாயத்தில் பெரும்பங்கு வகித்தன.

  காளை மாடுகளெல்லாம் உழவுத் தொழிலுக்கும், வண்டி கட்டி சுமை சுமக்கவும் விவசாய உலகில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அறுவடை காலங்களில் எல்லாம் சிறு சிறு களங்களில் கூட கிட்டதட்ட 50க்கும் மேலானோர் வேலை செய்வார்கள்.

  ஒருவர் நெற்கதிரை அடித்து நெல்மணிகளைப் பிரித்தால், இன்னொருவர் அதில் இருக்கும் தூசுகளை காற்றில் பறக்க விட்டு, தூசுகளாற்ற நெல் மணிகாக்குவார். அதையெல்லாம் பார்ப்பதற்கே மிக ரம்யமாக  இருக்கும். அவ்வளவு அழகானது அறுவடைக் களங்கள். ஆனால் இப்போது,

   காடுகளில்
   கண்களால் வலைவீசித்
   தேடுகிறேன்; காணவில்லை
   அந்தக் களங்களை!!

  விவசாயத்தில் முதன் முதலில் டிராக்டர் நுழைந்தது. அப்போது கூட விவாசாயத்தில் மனிதர்களின் உழைப்பு அதிகமாகத்தான் இருந்தது. அதற்குப் பின், அறுவடை எந்திரம் வந்தது. விவசாயத்திற்கு மனிதர்களின்  தேவை சற்று குறைந்தது. இத்தோடு நின்றுவிடவில்லை.

  உழவு கலக்குவதற்கும் அறுவடைக்கும் எந்திரம் கண்டுபிடித்த மனிதன், சும்மாவா இருந்தான், நாற்று நடுவதற்கும் களையெடுப்பதற்கும் எந்திரம் கண்டுபிடித்துவிட்டான். விவசாயத்தைச் செய்வதே மனிதர்கள் தான் என்ற நிலை மாறி, எந்திரங்களாலும் விவசாயம் செய்யலாம் என்ற நிலை வரத் தொடங்கிவிட்டது. அதிலும் பயிர்களின் பராமரிப்புப் பணிகளில் ஒன்றான களையை அகற்றும் பணிக்கு நூற்றுக் கணக்கான பெண்கள் செய்ய வேண்டிய வேலைகளை சிறு சிறு குப்பிகளில் உள்ள மருந்துகள் முடித்து விட்டுப் போய்விடுகின்றன. இதனால்  பல பின்விளைவுகளை பின்வரும் காலங்களில் மண்ணும் மனிதனும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பது மறைக்கப்பட்ட உண்மை. இதுபோன்ற விசயங்களைச் சில நேரங்களில் செய்ய முடியாமலும், செய்யத் தெரியாமலும், செய்வதற்கு தன்னிடம் சரியான முதலீடு இல்லாமலும், தன்னுடைய பொன் விளையும் பூமியை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு விவசாயம் செய்வதையே விட்டுவிட்டு பல விவசாயிகள் சென்று கொண்டிருக்கின்றனர்.

     அறிவியல்பூர்வமான முன்னேற்றங்கள் தான், இப்படிப் பல விவசாயிகளை அதிருப்தியடையச் செய்து கொண்டிருக்கிறதென்றால், விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் அதைவிட ஒருபடி மேல்.

   இன்றைக்கு பல விவசாயிகள், தாங்கள் தான் மண்ணில் கிடந்து வேகாத வெயிலில் வெந்து பிழைப்பை நடத்த வேண்டியிருக்கிறது. நம்முடைய பிள்ளைகளாவது நிழலிலும் உடலுழைப்புமற்ற வேலைகளைத் தேடிக்கொண்டு சுகவாழ்வு வாழட்டும் என்றெண்ணி, தங்கள் பிள்ளைகளைப் "பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்பதற்கு இலக்கணமாய் தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைத்துவிட்டனர். அவர்கள் வளர்ந்த சூழலின் காரணமாக அவர்கள் விவசாய நிலங்களைத் திரும்பிக் கூட பார்க்க மறுக்கின்றனர்.

   முப்பாட்டனும், பாட்டனும், தாத்தனும், அப்பனும் பொன்னாய், பெண்ணாய், உயிராய், உணர்வாய்,  மதித்த தன்னை, அவர்களுடைய பேரன்கள் திரும்பிக் கூட பார்க்க மறுக்கிறார்கள் என்பதை எண்ணி, விவசாய நிலத்திற்கு வாய் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் கதறி அழுதிருக்கும்.

  மாறிக்கொண்டே வரும் அறிவியல் முன்னேற்றங்களாலும், மாறிக்கொண்டே வரும் மனிதனின் மன இயல்புகளினாலும், இனிவரும் காலங்களில் விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் தவழப் போகிறதா அல்லது எந்த நிலைக்குச் செல்லப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

பன்னீர் ஊற்றி வளர்க்கப்படும் இந்தி

மத்திய அரசு அலுவலகங்களில் பன்னீர் ஊற்றி வளர்க்கப்படும் இந்தி.

சற்று நேரத்திற்கு முன், பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் பளீச் என அறிவிப்பு பலகை ஒன்றிலே இந்தி வார்த்தை ஒன்று எழுதப் பட்டிருந்தது.

அதுபற்றி, உள்ளே சென்று, பில் கட்டியவுடன், அங்கே இருந்த ஊழியரிடம் நகைத்துக் கொண்டே கேட்டேன். என்ன சார் மறுபடியும் இந்தியைக் கொண்டு வந்துட்டிங்க போல என்று கேட்க, அவர் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எப்போதுமே பயன்படுத்தக் கூடிய ஒன்று தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டும். ஆனால் இப்போதிருக்கக் கூடிய மத்திய அரசு மிக அதிகமாகவே இந்தியை வளர்க்க நினைக்கிறது என்றார். அப்போ மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த வேண்டியிருக்குமா சார் என்று கேட்க, இல்லை தம்பி வராது, மாநில அரசாங்கத்தில் இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய அரசு கூறும் நிலை வந்தால் மட்டுமே, மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரக்கூடும் என்றார்.

அந்த அறிவிப்புப் பலகையில், இந்தியில் ஒரு வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே ஆங்கிலத்தில் nirthaarஙென்றும் அதன் கீழே permanent என்றும் அதற்குக் கீழே "நிரந்தரம்" என்றும் எழுதி அலுவலகம் வருகின்ற மக்களுக்கு இந்தியைக் கற்றுக் கொடுக்கிறது மத்திய அரசு என்பதைப் புரிந்து கொண்டேன்.

கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள் மத்திய அரசே!!

திருச்சி அஞ்சல் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தார் கொண்டு முதன்முதலில் அழித்த கலைஞர் இன்னும் உயரோடு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.