Tuesday, July 15, 2014

ஸ்பெக்ட்ரம் ஊழலுமல்ல!! இழப்புமல்ல!!

ஒரு கிராமத்தில் ஓட்டல் நடத்தி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தன்னுடைய நண்பரோடு சாப்பிடச் சென்றிருக்கின்றனர்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பில் கொடுக்கச் சென்ற போது, அங்கே சொன்ன பில் தொகை இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆமாம் முன்னூறு ரூபாய் சொல்லியிருக்கிறார்கள்.

  உடனே ஓட்டல்காரரின் நண்பர், அவரிடம் உன் ஓட்டல்ல சாப்பிட்டா முப்பதும் முப்பதும் அறுபது ரூவா தான, நீ வாங்குவ எனக் கேட்க, உடனே அவரும் ஆமாம் எனத் தலையசைக்க, அப்போ நீ ஒவ்வொருத்தருக்கும் நூற்றி இருபது ரூபாய் நட்டத்துல வியாபாரம் பார்த்திருக்க என்று சொல்ல,  தன்னுடைய கடையை இந்த நட்சத்திர ஓட்டலோடு ஒப்பிடுவது தவறு என்று புரிந்து கொள்ளாத ஓட்டல் கடைக்காரர் தலையில் அடித்து அழ ஆரம்பிக்க, உடனே அவருடைய நண்பர், இத்தனை வருசமா நீ ஓட்டல் கடை நடத்திருக்க, அதனால உனக்கு இத்தனை ரூபாய் நட்டம் என்று அவரை மேலும் காயப்படுத்த அந்த ஓட்டல்காரர் அங்கேயே பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டார்.

  நிற்க,,,

என்னடா இவண் இப்படி சம்பந்தமே இல்லாம ஒரு கதையைச் சொல்லிட்டிருக்கான்னு நீங்க நினைக்கலாம். விசயத்துக்கு வரேன்.

இதே மாதிரி ஒரு முட்டாள்தனமான ஏமாற்றுப் பிரச்சார வேலை தான் ஸ்பெக்ட்ரம் விசயத்திலும் நடந்திருக்கிறது.

3g ரேட்டுக்கு 2g ஏலம் போயிருந்தால் 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்காமல் தடுத்திருக்கலாம். 3g என்றால் என்ன என்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே. 3g பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி. 2g கிராமத்து இட்லிக் கடை மாதிரி.

பைவ் ஸ்டார் ஓட்டலில் ஒரு இட்லி இருபது ரூபாய்க்கு விற்றால் அங்க என்னென்ன வசதி இருக்கும் என்பது நட்சத்திர ஓட்டல்களுக்குச் சென்றவர்களுக்கும், கிராமத்து இட்லிக்கடையில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

  பைவ் ஸ்டார் ஓட்டலை கிராமத்து இட்லிக்கடையோடு ஒப்பிடுவது எப்படித் தவறோ, அதுபோல் 2g யை 3g யோடு ஒப்பிடுவதே தவறு.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்தும், இந்த உண்மை நிலையைக் கூடப் புரியாமல், இன்னும் சிலர் 1.76 லட்சம் கோடி ஊழல் ஊழல் என்று மாரடிப்பதைப் பார்த்தால், உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்தவே முடியாதுடான்னு சொல்லி விட்டு நகர்ந்து போகத்தான் நமக்குத் தோன்றுகிறது.

Friday, May 9, 2014

யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழின் சிறப்பு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானும் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முனைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமை;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே:

=கணியன் பூங்குன்றனார்

  எந்தக் குறிப்பிட்ட ஊரையும் எம்முடைய ஊர் என்று சொல்லவும் மாட்டோம். குறிப்பிட்ட ஊர்களைத் தவிர ஏனைய ஊர் வேற்றூர் என்று சொல்லவும் மாட்டோம். இவ்வுலகில் மக்கள் வாழும் எல்லா ஊர்களும் எம்முடைய ஊர்கள் தாம். இவ்வுலகில் வாழும் மக்களில் இன்னார்தாம் எமது சுற்றத்தார். அவர்களைத்தவிர மற்றவர்களுக்கும் எமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று கூறவும் மாட்டோம். இவ்வுலகில் வாழும் எல்லா மக்களும் எமது சுற்றத்தார்தாம்.

  எமக்கு உண்டாகும் தீமையும், நன்மையும், பிறரால் உண்டாவனல்ல. எமது சிந்தனை எமது செய்கை இவற்றால் வருவன. துன்பமடைவதும், துன்பம் தீர்ந்து இன்புற்று வாழ்வதும் அவற்றைப் போன்றது தான். அதாவது பிறரால் நாம் துன்புறுவதில்லை. பிறரால் நாம் இன்புறுவதும் இல்லை. நம்முடைய எண்ணமும் நடத்தையுந்தான் இவைகளுக்குக் காரணம்.

   இறத்தல் ஒரு அதிசயமன்று. பிறந்தவர் இறப்பதென்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்ர ஆதலால் இறப்பு வருமோ என்னு அஞ்சமாட்டோம். இதைப்போலவே வாழ்வு என்றும் நிலையுடையது, இன்புடையது என்று மகிழவும் மாட்டோம். ஏதேனும் வெறுப்பு வந்த போது, இதுவா வாழ்க்கை என்று வெறுத்து, வாழ்க்கையைத் துன்பமுடையதாகத் தீர்மானித்து சும்மாவிருக்கவும் மாட்டோம்.

  மலைகளிலே மேகம் மின்னி மழை பெய்யும் போது, அந்த மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து வெள்ளமாகிக் கற்பாறைகளைப் புரட்டஅத் தள்ளிக் கொண்டு ஆறாக நிலத்திலே ஓடும்  அந்த வளம் கொழிக்கும் பேராற்றிலே ஓர் தெப்பத்தை- மிதவையை- மிதக்கவிட்டால் , அது நீர்போகும் போக்கிலே செல்வதைக் காணுகின்றோம்  இதைப்போலவே நமது உயிரும், நமது செயல்முறைப்படியே இன்பத்தையோ துன்பத்தையோ அடையும். இந்த உண்மையைத் திறமை உடையவர்களின் செயல்களைக் கொண்டு கண்கூடக் கண்டு வியந்திருக்கிறோம்.

   ஆதலால் சிறந்த செயல்களைச் செய்கின்ற பெரியோர்களைக் கண்டு வியந்து புகழவும் மாட்டோம். அற்பச் செயல்களைச் செய்கின்ற சிறியவர்களைக் கண்டு இகழவும் மாட்டோம். அவரவர் சிந்தனை செயலுக்கேற்ற பலனை அவரவல்கள் அனுபவிக்கின்றனர் என்று எண்ணியிருப்போம்.

Wednesday, March 12, 2014

ஜெயலலிதாவின் உண்மை முகம் !!!

மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதா விரித்திருக்கும் மாயக்கம்பளம்,மயக்கம் தருகிறது. முதலில் தலைசுற்ற வைப்பது, தனி ஈழம் அமைந்திட, ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த அவர் எடுத்திருக்கும் உறுதி.2008-09 ல் இந்தியாவின் காலடியில் ரத்தம் பொங்கி இந்து மகாசமுத்திரத்தை மூழ்கடித்த போது "ஈழம்" என்ற வார்த்தையே ஜெயலலிதாவுக்குக் கசந்தது. ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டார்களே? என்று ஜெயலலிதாவிடம்(18-1-09) கேட்கப்பட்ட போது, 'அங்கு ஈழம் இன்னும் அமையவில்லை. இலங்கைத்தமிழர்கள் என்பது தான் அரசியிர் ரீதியில் அலுவல் ரீதியில் சொல்லப்படுகிறது' என்று வியாக்கியான வகுப்பெடுத்தவர்.

'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவிடாமல் விடுதலைப்பலிகள்,  வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, ராணுவத்தின் முன்னால் ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்' என்று இலங்கை அரசைக் காப்பாற்றியவர் இவர்.

'மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆயுதம், தி.மு.க அதை தட்டிக்கேட்கவில்லை என்று இப்போது குற்றம் சொல்லும் ஜெயலலிதா, 'இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது(16-10-08) என்றும் சொன்னவர். போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்' என்றும் சொல்லி, ஈழத்தின் பக்கமே முகத்தைத் திருப்பாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். சிங்களப் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்து இதனை வெளியிட்டுப் புல்லரித்த போது தான் சிங்கள ராணுவம் கிளஸ்டர் குண்டுகளைப் போட்டன. கொடூரம் கூடியது. தேர்தல் நெருங்கியது. தனது நிலைப்பாட்டை மாற்றியாக வேண்டிய நெருக்கடியில் ஜெ, ஈழத்தாய் வேடம் இட்டார். கருணாநிதிக்கு எதிர்மறை விமர்சனம் கொடுத்த விவகாரம் என்பதால் அதனைக் கையில் எடுத்தார். ஆட்சியும் மாறியது. ஈழத்துக்கு ஆதரவான தீர்மானங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

தூக்கு விவகாரத்தில் கூட மாநில அரசால் இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்று முதல் நாள் சட்டமன்றத்தில் சொல்லிவிட்டு(29-8-11) செங்கொடி தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு அரங்கேறுவதைப்பார்த்தும், உயர்நீதிமன்றம் தடை கொடுக்கத் தயாராகிவிட்டதை அறிந்தும் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இப்போது ஏழு பேரை விடுதலை செய்யும் வேகத்தில் நிற்கிறார்.

விடுதலைப்புலிகள் இந்தியாவில் தடைசெய்ய நானே காரணம் என்று பெருமைப்பட்டவர், 'பிரபாகரனைக் கைது செய்ய ராணுவத்தை அனுப்பவேண்டும்' என்று ஆசைப்பட்டவர், கிட்னி செயல்படாத நிலையில் மரணப்படுக்கையில் கூட பாலசிங்கம் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்றவர், இப்போது ஈழத்தமிழர்கள் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இத்தகைய தீர்மானங்களை அரங்கேற்றுகிறார் என்பதை நம்ப எவரும் இல்லை. ஆனால் கடல் கடந்த மக்களைக் கருவறுக்க காங்கிரஸ் அரசாங்கம் செய்த உதவிகள், இங்குள்ள தமிழர்களின் உதிரத்தில் அனலாகத் தகித்து வருவதை தேர்தல் நேரத்தில் அறுவடை செய்ய, ஈழம் தான் ஒரே வழி என்பதை ஜெயலலிதா கண்டுபிடித்திருக்கிறார்.

= ஆனந்த விகடன்
ஆல் இன் ஆல் அம்மா சொல்வதெல்லாம் சும்மா..

ப.திருமாவேலன்

Tuesday, February 4, 2014

மு சீதாராமன்- பராசக்தி கதை வசனம்

தலைவர் கலைஞரின் கதை வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம்  தமிழ்த்திரையுலகில் அருமையானதொரு திரைக்காவியம். அந்தக் காவியத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நீண்டதொரு வசனத்தை அடுக்காக அழகாக பேசியிருப்பார். அதுபோல் எனக்கும் பேசவேண்டும் என்று ஒரு சிறு ஆசை வெகுநாட்களாகவே இருந்தது. நேற்று தான் இதை தயார் செய்தேன். இந்த வசனத்தை என்னுடைய வாழ்வில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விசயங்களை கருத்தில் கொண்டு நான் இந்த வசனத்தை தயார் செய்தேன்.

படித்துப் பாருங்கள்..

"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைச் சந்தித்திருக்கிறது. இந்த வழக்கும் விசித்திரம் அல்ல. வழக்காடும் நானும் புதியவனல்ல. வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாகத்தென்படும் ஜீவனுள் நானும் ஒருவன்".

இன்ஸ்பெக்டரை சொடக்கு போட்டு அழைத்தேன். எம்.எல.ஏ வை பேஸ்புக்கிலே கேள்வி கேட்டேன், குற்றம் சாட்டப் பட்டிருக்கிறேன், இப்படியெல்லாம்.

இன்ஸ்பெக்டரை சொடக்குப்போட்டு அழைத்தேன், அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. கொலைகாரனின் தம்பியை விசாரணைக்கு அழைத்துச் சென்று குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்கு முன் பேருக்கு அழைத்துச் சென்று விசாரிக்காமல்  எங்கள் கண் மறைந்தவுடன் பத்திரமாக அவனை வீட்டிலே கொண்டு போயி இறக்கி விட்டார் என்பதற்காக.

எம்.எல்.ஏ விடம் கேள்வி கேட்டேன், அவருக்கு பதில் தெரியாது என்பதற்காக அல்ல. எங்கள் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம் தொகுதி மக்களுள் ஒருவனான நான் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது என்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன்.

சுயநலம் என்பீர்கள். இந்தச் சுயநலத்திலே பொது நலனும் கலந்திருக்கிறது. ஆதாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.

காலையிலே எழுந்தவுடன் குளித்துக் கிளம்பி பஸ் ஏறி வேலைச்செல்ல பஸ்நிலையத்துக்குச் சென்றேன். பஸ் வந்தது ஏறினேன்.

சொக்கநாதன்புத்தூர் நீளமான பெயர். ஆனால் என்ன நல்ல ரோடு தான் ஒரு மீட்டர் நீளம் கூட இல்லை.

ரோடு முழுவதும் மண்டிய புகை. சுற்றிலும் செங்கல் சூளை. நல்ல ரோட்டைத் தேடி அலைந்தேன்.

சொக்கநாதன்புத்தூரை முன்னேற்ற நினைத்தார்களே, அதற்குப் பதிலாக அதன் இயற்கை வளத்தை அல்லவா சுரண்ட நினைத்தார்கள்.

பேஸ்புக்கிலே கேள்வி கேட்டதற்காக என் மீது குற்றம் சுமத்தி இதோ நிற்கிறாரே எம்.எல்.ஏ, ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்ல ரோடு போட்டுக் கொடுங்கள் என்று ஸ்டேடஸ் போட்டதற்காக என்னை ப்ளாக் செய்தார்.

பகட்டு வாட்டியது
பணம் மிரட்டியது
பதவி பயமுறுத்தியது

ஓடினேன் ஓடினேன் ரோடு சரியில்லை என்பதற்காக  வேலை பார்க்கும் இடம் வரை ஓடினேன்.

என் ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும். நல்ல ரோடு போட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.

இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா?????

( திட்டுறவங்க யாரா இருந்தாலும் கமென்ட்லயே திட்டிக்கலாம்,முழு உரிமை உண்டு. ஏன்னா இதைப் படிச்சவங்க நீங்க தான..)

Thursday, January 30, 2014

மு.க.ஸ்டாலின்-நெருப்பாற்றில் பூத்த குறிஞ்சி மலர்

ஆமாம், ஸ்டாலின் எங்கே போனார்? கழக அரசு கலைக்கப்பட்டவுடன் தலைமறைவாகச் செயல்படலாமா என்ற எண்ணம் சிட்டிபாபு போன்றவர்களுக்கு ஏற்பட்டது. அது கூடாது. 'தேடப்படுகிறவர்கள் கைதாக வேண்டும்.சிறை செல்ல வேண்டும்' என்று கலைஞர் அறிவுரை கூறினார்.

ஆகவே ஸ்டாலின் வீட்டில் பதுங்கி இருக்கவும் இல்லை, தலைமறைவாகச் செல்லவும் இல்லை.

மதுராந்தகத்தில் "முரசே முழங்கு" நாடகம் நடைபெற ஏற்பாடாக இருந்தது. அந்த நாடகத்தில் ஸ்டாலின் கலைஞராக நடிப்பார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நாடகம் ஆரம்பமாக வேண்டும். ஸ்டாலினும் மற்ற நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர்.

'கழக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டது' என்ற சேதி எட்டியது. எனவே நாடகமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அன்று இரவு ஸ்டாலின் மதுராந்தகத்திலேயே தங்கிவிட்டார்.

அரசியல் மாணவர் ஒவ்வொருவரும் சிறைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியாக வேண்டும்.  ஓர் அரசியல்வாதி புடம்போடப்படும் உலைக்கூடமும் அதுதான். தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் அதிக மார்க் போடுவர். அந்தப் பரீட்சை எழுத ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. அவர் வீடு வந்து சேர்ந்த போது தான், அந்த அழைப்பு காத்திருப்பது தெரிந்தது.

அதற்கு முன்னரே தலைமைக் கழக செயலாளர்களான ஆற்காட்டார், நீலநாராயணன், சிட்டிபாபு, செ.கந்தப்பன், கோவை ராமநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுதும் கைதுப்படலம் வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தச் செய்திகளெல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அந்தக் கைங்கரியத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று  ஏடுகளுக்குத் உத்தரவிடப்பட்டது. எங்கெங்கே யார் யார் கைது செய்துப்பட்டனர் என்ற தகவல் வாய்மொழி செய்தியாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தது.

"காவல்துறையினர் உன்னைத் தேடுகிறார்கள். சிறைக்கோட்டப் பயணத்துக்குத் தயாராய் இரு!" என்று வீடு வந்த ஸ்டாலினிடம் கலைஞர் தெரிவித்தார். அவரும் குளித்து உடைமாற்றி விட்டுத் தயாரானார்.

அப்போது ஸ்டாலின் 23 வயது இளைஞர். மணம் முடித்து ஐந்தே நாள்கள் தான் ஆகியிருந்தது. அவருக்கு எப்படி இருந்திருக்கும்?

"நான் பத்து நாள் சுற்றுப் பயணம் செல்வதாக நினைத்துக் கொள். அதற்குள் வந்துவிடுவேன்",  என்று துணைவியாருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார். வசந்தத்தைத் துய்க்க வேண்டிய வானம்பாடிகள்  பிரிந்திருப்பது என்பது எவ்வளவு வேதனையான செயல்?

  அப்பா, அம்மாவை வணங்கி ஸ்டாலின் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.

  "ஸ்டாலின் வந்து விட்டான், அவனை அழைத்துப் போகலாம்" என்று கலைஞரே காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தகவல் தந்தார்.

   ஸ்டாலின் கைதாகப் போகிறார் என்கிற தகவல், காட்டுத் தீயாகப் பரவியது. எனவே, கழகத் தொண்டர்கள் அணை உடைத்த வெள்ளமாக வந்து கொண்டிருந்தனர். கோபாலாபுரம் மக்கள் கடலானது.

  முற்றத்தில் பேராசிரியர், நாவலர், ப.உ.ச, அன்பில், மாதவன் ஆகியோர் குழுமியிருந்தனர். அவர்களிடமும் ஸ்டாலின் விடைபெற்றார். வாயிலுக்கு வந்தார். உணர்ச்சிப் புயலாக திரண்டிருந்த தொண்டர்கள், ஆவேச முழக்கங்கள் எழுப்பினர். ஸ்டாலினை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தை மறித்தனர்.வெற்றிகொண்டான் தலைமையில் வீறுகொண்ட ஆர்ப்பாட்டம் அலைமோதியது.

ஸ்டாலினை எளிதாகக் கைது செய்துவிட்டனர். ஆனால் அவ்வளவு சுலபமாக கோபாலாபுரம் கடந்து அவரை அழைத்துச் செல்ல முடியவில்லை. காவல்துறை வாகனம் ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்த போது கோபாலபுரம் மக்களும் தேம்பித் தேம்பி கண்ணீர் சொரிந்தனர்.

-சோலை
மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஸ்டாலின்.

Wednesday, January 1, 2014

என் அரசியல் உதயம்

மன்னிக்கவும், இருந்தாலும் நான் இவ்வளவு பெரிய பதிவைத் தந்து உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடாது தான்.
கொடுக்க வேண்டிய சூழ்நிலை கொடுத்திருக்கிறேன்.

ஏனெனில் இவையெல்லாம் நீங்கள் எனக்குப் போட்ட பிச்சை(லைக்)களால் விளைந்தவை தானே.
ராஜபாளையத்தின் ஏதோ ஒரு மூலையிலே உள்ள உரக்கடையிலே மூடை தூக்கி வேலைபார்த்துக் கொண்டிருக்கும் என்னை இவ்வளவு சிந்திக்கத் தூண்டியவர்கள் நீங்கள் தானே..

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் படித்து விடுங்கள்.

2013ஐ விட்டுச் செல்ல எனக்கு மனதே இல்லை. இதுவரை இருந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த 2013  என் வாழ்விலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக இருக்கிறது.

ஆமாம்,

ஏன் என்று கேட்கிறீர்களா?

சொல்கிறேன், கேளுங்கள்.

2013 ன் தொடக்கம் எனக்கு மாநில மாணவரணியின் துணைச் செயலாளர் அண்ணன் மகிழன் அவர்கள் விஜய்பிரவீன் அண்ணனின் மூலம் அறிமுகம் ஆனார்.

என் இல்ல விழாவாக என் தங்கையின் திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு, இந்த 23 வயது சிறுவன் அழைத்த குரலுக்கு எந்த வித எதிர்பார்ப்புமின்றி மதுரையில் இருந்து ஓடோடி வந்தார் மாணவரணி துணைச் செயலாளர் அண்ணன் மகிழன் அவர்கள். அதற்கு நான் விஜய் பிரவீன் அண்ணனுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் தங்கையின் திருமணத்திற்கு முதல் நாள் மாணவரணியின் இன்னொரு துணைத்தூண் அண்ணன் பூவை ஜெரால்ட் அவர்கள் போன் செய்து "தம்பி எனக்கு அழைப்பிதழ் கூட அனுப்பாம விட்டுட்டியேப்பா" என்று கேட்டு வாழ்த்துக்கள் தம்பி என்று சொன்ன போது என் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் கரை புரண்டோடியது.

2013 ல் தான் அண்ணன் க.மகிழன் அவர்கள் எனக்கு மிகப்பெரிய மாடமாளிகை ஒன்றை விருதுநகரிலே வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆறடி உயரம் கொண்ட எங்கள் மாவட்டச் செயலாளரின் வலதுகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணன் கே.ஜி.இராஜகுரு அவர்கள் தான் அந்த மாடமாளிகை.
ஆம் மகிழன் அண்ணன் என்னை இராஜகுரு அண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்தது, இந்த 2013 ல் தான்.

அடுத்து என் ஆருயிர் அண்ணன் வி.பி.ஆர்.இளம்பரிதி திருமணம். முதன்முதலில் என்னுடைய பெயரும் ஒரு திருமண அழைப்பிதழிலே கருப்பு சிவப்பு கரை போட்டு வந்தது என்றால் அது பரிதி அண்ணனின் திருமண விழா அழைப்பிதழ் தான்.

அதே விழாவிற்கு நம் இணையதள உடன்பிறப்புக்கள் வந்து சிறப்பித்ததும் இதே 2013 ல் தான்.

அதே விழாவில்அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களை நேரில் கண்டதும் இதே 2013 ல் தான்.

சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் இல்லத் திருமண விழா.  நான் நேசிக்கும் ஆலயம், அண்ணா அறிவாலயத்திற்குள் முதன்முதலில் அழுக்குச் சட்டையோடு நுழைந்ததும், நான் அணுநொடியும் நேசிக்கும், என் உயிரோடு, உணர்வோடு, சிந்தனையோடு, செயலோடு, பேச்சோடு கலந்த கலைஞர்,

"தலைவர் கலைஞரை" முதன் முதலில் நேரில் கண்டதும் இதே 2013 ல் தான்.

அடுத்து மாணவரணியின் கலந்தாய்வுக் கூட்டம். அண்ணன் ஸ்டார் வேல்முருகன் அவர்களோடு மதியமே சென்று விட்டதால் அந்த கூட்டம் நடைபெற இருந்த  அரங்கத்தை ஒரு படமெடுத்து முகநூலில் விளையாட்டாக பதிந்தேன்.
கூட்டம் தொடங்கி மாணவரணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி அவர்கள் பேசத் தொடங்கினார். திடீரென இணையத்தைப் பற்றிப் பேசினார். பேசிவிட்டு இங்கே கூட ஒரு பையன் இருக்கிறான் என நினைக்கிறேன், அது யாரென்று தெரியவில்லை என்றார். நான் எழுந்து நின்று இருகரம் கூப்பி வணங்கினேன். தங்கம் தென்னரசு அண்ணன் பார்த்து அந்தா ஒரு பையன் எந்திரிக்கிறான் பாருங்க என்றார். மேடையிலே இருந்து மைக்கிலே கேட்கிறார். உன் பெயர் என்னப்பா என்று கேட்டு என்னை மேடைக்கு அழைத்து பெருமைப்படுத்தினார். அந்த நிமிடத்தில் என்னை விட ஒருவர் மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியுமானால் அது என் தாயாகத் தான் இருக்க முடியும்.
ஏனென்றால் அதே கூட்டத்தின் ஒரு ஓரத்தில் என் தாயாரும் அமர்ந்திருந்தார்.
 
அடுத்து டெசோ ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் எங்கள் மாவட்டச் செயலாளரைச் சந்தித்து விட்டு, திடீரென எங்கள் மாணவரணி அமைப்பாளர் அண்ணன் இராஜகுரு அவர்கள் " வாடா தம்பி" என்று அழைத்துச் சென்று தங்கம் தென்னரசு அண்ணிடம் அறிமுகம் செய்தார் . அப்போது நான் அண்ணனிடம் முகநூல் குறித்துக் கூறினேன். மகிழ்ச்சியோடு "எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் தம்பி" என்று கூறினார். அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களிடம் நான் அறிமுகமானதும் இதே 2013ல் தான்.

ஆகஸ்ட் 8, அது எங்கள் அண்ணாச்சியின் பிறந்த நாள் விழா மட்டுமல்லாமல் தலைவர் கலைஞரின் ஆணையின்படி சேதுசமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாள்.
அண்ணாச்சியை வாழ்த்தியும் வாழ்த்துப் பெற்றும் ஆரப்பாட்டக் களத்திற்கு கேமராவோடு வந்தேன். புகைப்படமெல்லாம்  எடுத்து விட்டு தங்கம் தென்னரசு அண்ணனைச் சந்தித்து வணக்கம் அண்ணா என்று சொன்ன போது "தம்பி உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

செப் 1, புதுகையில் இணைய நண்பர்களின்  பயிற்சிப் பாசறைக் கூட்டம். உங்களில் பலரை நேரில் சந்திதுத நாள்.

அதே நாளில் அண்ணன் ஜெரால்ட் அவர்கள் எதிர்பாராத விதமாக என்னை ஐபிஎஸ் அண்ணனிடம் அழைத்துச் சென்று, அறிமுகம் செய்து விட்டு வெளியே வந்த போது என் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது.

செப் 13, என் வாழ்விலே முதன் முதலில் பிறந்த நாள் கொண்டாடிய நாள்.
எங்கள் மாவட்டச் செயலாளரிடமும் தங்கம் தென்னரசு அண்ணனிடமும் வாழ்த்துப் பெற வேண்டும் என்பதற்காகவே பிறந்த நாள் கொண்டாடினேன்.
அன்று தான் மல்லாங்கிணறு சென்று தங்கம் தென்னரசு அண்ணனோடு வெகுநேரம் உரையாடிவிட்டு, அண்ணன் தன் வீட்டு சாப்பாட்டு அறையில் என்னையும் என் நண்பனையும் அவரே சாப்பிட அழைத்துச் சென்றபோது சொர்க்கத்திற்கே சென்று வந்த மகிழ்ச்சி.

அடுத்து எங்கள் மாவட்டச் செயலாளரிடம் ஆசி வாங்கச் சென்றேன். அவர் " வாப்பா பேஸ்புக்கு பிறந்த நாளா" என்றார்.
அதே நாள் அண்ணன் இராஜகுரு அவர்களிடம் ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே என்று சொல்லி கலங்கிய போது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

"நீ என் தம்பிடா ஏன் கலங்குற" என்று என்னை தோளோடு தோள் அணைத்தார்.

அடுத்து அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சப்போட்டி இளைஞரணி சார்பாக நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எதிர்பாரா விதமாக அண்ணன் ஐ பி எஸ் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் தம்பி வாடா நீ தான் எங்களோட இணையம் இல்ல இல்ல அதயம்னு கூட சொல்லலாம் என்று கே.ஜி.இராஜகுரு அண்ணனிடம் கூறிய போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
பின்பு எங்கள் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் அந்நிகழ்ச்சிக்கு நடுவராக வந்திருந்த வழக்கறிஞர் நன்மாறன் அவர்கள் பேசும் போது "என் அன்பிற்கினிய முகநூல் நண்பர் அன்புத் தம்பி சீதாராமன் அவர்களே" என்று அழைத்த போது புல்லரித்துப்போனேன்.

பின்பு எங்கள் மாவட்ட செயலாளர் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்த என்னை விரல் நீட்டி அழைத்து "என்ன வேலை பாக்குற, எவ்ளோ சம்பளம் வாங்குற,சரி, விருதுநகர் மாவட்ட செய்தியும் பேஸ்புக்ல வரனுமே" என்ற போது அதைத்தானய்யா நான் பண்ணிட்டிருக்கேன், என்ற போது ஒரு அவருக்கே உரித்தான ஸ்டைலோடு புண்சிரிப்பு சிரித்து "சரிப்பா நல்லா பண்ணு" என்றார். அருகில் அண்ணன் தங்கம் தென்னரசு அமர்ந்திருந்தார்.
அன்று முகநூல் நண்பர் நாகராஜ், பிராபகரன் ஆகியோரைச் சந்திக்க நேர்ந்தது.

அடுத்து திருவில்லிபுத்தூரிலே வழக்கைச் சந்திக்க வந்த அணிச்செயலாளர் கடலூர் இள.புகழேந்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவர்கள் கழகத்தில் இணையும் விழாவிலே மாணவர்களோடு பேசும் போது விருதுநகர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தம்பி சீதாராமனைப் போல இணையத்தில் செயல்படுங்கள் என்றார்.

அடுத்து சேலத்திலே நந்தா அண்ணனின் உபசரிப்பு. ஏற்காட்டிலே எங்கள் மாவட்ட முன்னோடிகளும் முகநூல் நண்பர்களுமான அய்யா கோதண்டராமன் மற்றும் ஏ எஸ் கே இரமேஷ்குமார் ஆகியோருடனான சந்திப்பு.

இந்த ஆண்டின் கடைசியிலே நிகழ்ந்தது தான் என் வாழ்வின் வரலாற்றுச் சிறப்பு.
"மாண்புமிகு தளபதியாரோடு ஒரு புகைப்படம்".

2013 முடிந்து விட்டது.

குப்பைமேட்டிலே குப்பையோடு குப்பையாக கிடந்த சீதாராமனுக்கு 2013 லே அரசியல் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் சொல்லப்போனால் முகநூல் எனக்கு மிகப் பெரிய
"முகவரி" தந்திருக்கிறது.
ஆனால் இவையெல்லாமே நான் எதிர்பாராமல் நடைபெற்ற நிகழ்வுகள் தான்.

அதே போல் "2014" யும் எதிர்பாராமலே தொடங்குகிறேன்.

இருந்தாலும் இந்த 2014 லாவது
" தலைவர் கலைஞரோடு ஒரு புகைப்படம் எடுத்து விடமாட்டேனா"

இந்த ஆண்டிலாவது "ஒரு முறையாவது பேச ஒரு மேடை கிடைக்குமா" என்பது போன்ற ஏக்கங்களோடே இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்.

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2014 இனிமை தரும் ஆண்டாக இருக்கட்டும்.